தை வெள்ளியில் வெளியாகும் 7 படங்கள்!

சினிமா

முதல் தேதி என்பது பெரும்பாலானோருக்கு மிக முக்கியமானது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களை விரல் விட்டு எண்ணக்கூடிய அந்நாட்களிலேயே கூட ‘ஒண்ணுல இருந்து இருபத்தொண்ணு வரைக்கும் கொண்டாட்டம்’ என்று கலைவாணரைப் பாட வைத்த சிறப்புக்குரியது.

நம்மையும் அறியாமல் கார்பரேட் உலகின் நடைமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்ட இந்நாட்களில் அதனை விட்டு விலக இயலாத நிலையே உள்ளது. அப்படியிருக்க, முதல் மற்றும் இரண்டாம் வாரங்களில் மக்களிடம் அதிக பணப்புழக்கம் இருக்குமென்று நம்பி திரைத்துறை இயங்குவதை தப்பு சொல்வதற்கில்லை.

அந்த வகையில், மாதத் தொடக்கத்தைக் குறிவைத்து படங்கள் வெளியிடப்படுவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தை வெள்ளியான நாளை பிப்ரவரி 3ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் 7 திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சிறு படங்கள் எனும் தகவல் நம் புருவங்களை உயர்த்த வைத்திருக்கிறது.

வாரிக் குவிக்கும் வசூல்!

ஒரு திரைப்படம் பல வாரங்கள் ஓடும் என்றிருந்த காலத்தில் கூட, மூன்றாம் வாரத்தில் வெளியீட்டைத் தவிர்த்தன பட நிறுவனங்கள். பத்து பதினைந்து நாட்களில் வசூலை அள்ளிவிடத் துடிக்கும் தற்போதைய சூழலில், அதுதான் வெற்றிக்கான தாரக மந்திரம் எனும் நிலைமை. அதனால், இன்றைய தேதியில் பதினைந்தில் தொடங்கி முப்பது வரை எந்த தேதியில் ஒரு படத்தை வெளியிட்டாலும் அதில் அபாயம் அதிகம் என்றாகிவிட்டது. பண்டிகை நாட்கள் தவிர்த்து முதல் இரண்டு வாரங்களில் திரைப்படங்களை வெளியிடுவதே லாபகரமானது என்ற எண்ணமும் வேரூன்றி விட்டது.

பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு வசூல் அதிகம் கிடைக்க வேண்டுமென்ற நோக்கில், அவற்றை முதல் வாரத்தில் வெளியிடுவதும் சமீப ஆண்டுகளாகத் தொடர்கிறது. பெரும்பாலும் சிறு பட்ஜெட் படங்கள் மூன்றாம் வாரத்தில் வெளியாவதற்கும் அதுவே சொல்லப்படாத காரணமாக விளங்குகிறது.

இந்த நிலையில்தான், பிப்ரவரி 3ஆம் தேதியன்று தமிழில் ரன் பேபி ரன், தி கிரேட் இண்டியன் கிச்சன், மைக்கேல், பொம்மை நாயகி, தலைக்கூத்தல், நான் கடவுள் இல்லை, நான் யார் தெரியுமா ஆகிய 7 படங்கள் வெளியாகின்றன.

இவற்றில் மைக்கேல் மட்டுமே பெரிய பொருட்செலவில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டு இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்தும் நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களே.  

tamil movies list released in february

புதிய கீற்று!

’சர்தார்’ படம் தந்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகிறது ‘ரன் பேபி ரன்’. இதனை இயக்கியிருப்பவர் ஜியேன் கிருஷ்ணகுமார். ஆர்ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ராதிகா, பக்ஸ் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர்.

2021இல் மலையாளத்தில் வெளியான ஜியோபேபியின் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’, தற்போது அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. மலையாளத்தில் நிமிஷா விஜயன் நடித்த வேடத்தை இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்றிருக்கிறார். ஆர்.கண்ணன் இயக்கியிருக்கிறார். ஆக, ஐஸ்வர்யாவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.

tamil movies list released in february

யோகிபாபு நாயகனாக நடிக்கும் ‘பொம்மை நாயகி’யைத் தயாரித்திருப்பவர் இயக்குனர் பா.ரஞ்சித். புதுமுகம் ஷான் இயக்கியிருக்கும் இப்படத்தில் சுபத்ரா, ஹரி, ஜி.எம்.குமார், அருள்தாஸ், எஸ்.எஸ்.ஸ்டேன்லி உட்படப் பலர் நடித்துள்ளனர்.

tamil movies list released in february

சமுத்திரக்கனி நடிப்பில் ‘நான் கடவுள் இல்லை’, ‘தலைக்கூத்தல்’ என்று இரு படங்கள் வெளிவர இருக்கின்றன.

எண்பதுகளில் விஜயகாந்தை கொண்டு பல ‘பழிக்குப் பழி’ வகையறா ஆக்‌ஷன் படங்கள் தந்தவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். அதே பார்முலாவில் வெளியாகவிருக்கிறது ‘நான் கடவுள் இல்லை’.

tamil movies list released in february

‘தலைக்கூத்தல்’ படத்தை இயக்கியிருப்பவர் ’லென்ஸ்’ படம் தந்த ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். படுக்கையில் கிடக்கும் முதியவர்களை மரணிக்கச் செய்ய, ஒருகாலத்தில் ‘தலைக்கூத்தல்’ சடங்கு.பின்பற்றப்பட்டதாகச் சொல்லப்படுவதுண்டு. அது பற்றிப் பேசவிருக்கிறது இத்திரைப்படம்.  

‘மைக்கேல்’ படத்தில் சந்தீப் கிஷன், திவ்யான்ஷா ஜோடியோடு விஜய் சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், கவுதம் மேனன், அனசூயா பரத்வாஜ், வருண் சந்தேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, ஏற்கனவே புரியாத புதிர், இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படங்களைத் தந்தவர். இவர் இயக்கிய மூன்றாவது படமான ‘யாருக்கும் அஞ்சேல்’ காத்திருப்பில் உள்ளது.

முன்னணி நட்சத்திரங்கள் அல்லாதோர் நடித்த படங்கள் முதல் வாரத்தில் வெளியாவதும், அவற்றுக்கு ரசிகர்கள் வரவேற்பைக் கொட்டுவதும் திரைத்துறையை நிச்சயம் வாழ வைக்கும். அந்த வகையில் வெளிச்சத்தின் புதிய கீற்று தென்படுமென்ற நம்பிக்கையை விதைத்துள்ளது இப்படங்களின் வருகை.

வரவேற்பு எப்படியிருக்கும்?

ஜனவரி 11ஆம் தேதியன்று வெளியான வாரிசு, துணிவு இரண்டுமே கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நல்ல வசூலை ஈட்டியுள்ளன. கடந்த ஜனவரி 26 அன்று வந்த ‘பதான்’ தமிழ் வெளியீடும் கூட ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது. இம்மூன்று படங்களுமே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் பெருந்திரளாக வருவார்கள் என்பதை நிரூபித்துள்ளன.

அந்த மக்களில் பாதிப் பேர் வந்தால் கூட, இந்த படங்களுக்கான வரவேற்பு அபாரமானதாக இருக்கும். அதற்காக, இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களைக் கவர வேண்டுமென்று எதிர்பார்ப்பது பேராசைதான். ஆனால், தொடர்ச்சியாகத் திரையரங்குகள் இயங்குவதற்கும் திரைத்துறை இயக்கச் சங்கிலியில் இருக்கும் அனைத்து கண்ணிகளையும் உயிர்ப்போடு வைத்திருப்பதற்கும் சிறு படங்களின் ஓட்டம் மட்டுமே உதவும். அந்த வகையில், பிப்ரவரி 3ஆம் தேதியன்று வெளியாகும் இந்த படங்கள் புதிய தொடக்கத்தைத் தருமென்ற நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கிறது தமிழ் திரையுலகம்.

உதய் பாடகலிங்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுகவே தலைமை: ஜெயக்குமார்

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன விஜய் ஆண்டனி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.