தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப் பதிவு நேற்று(30.4.2023) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறு ஜானகி ராமசந்திரன் கல்லூரியில் நடைபெற்றது.
தேர்தலுக்கு முதல் நாள் இந்த தேர்தலில் பிரதான அணிகளாக போட்டியிட்ட இரண்டு அணிகளும் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு சுமார் 25000ம் வரை அன்பளிப்பு வழங்கியதாக கூறப்பட்டது.
முரளி ராமசாமி அணிக்கு எதிரான அலையும், மன்னன் தலைமையிலான அணிக்கு ஆதரவான அலை இருப்பதாக தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை முடிவில் முரளி ராமசாமி தலைமையிலான அணி அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு காரணம் நேற்றையதினம் வாக்கு சீட்டில் முத்திரை பதித்துவிட்டு அதனை புகைப்படமாக எடுத்து வந்து காண்பித்தால் ரூபாய் 10,000 ம் கொடுப்பதாக முரளி ராமசாமி அணி கூறியதால் உபரியாக கிடைக்கும் பணத்தை இழக்க விரும்பாதவர்கள் அணிமாற்றி வாக்களித்திருக்கிறார்கள்.
குறிப்பாக தலைவர் வாக்கு சீட்டு கீரீன்ஷாட்டுக்கு 10,000, ஒட்டுமொத்த அணிக்கு வாக்களித்த கீரீன் ஷாட் என்றால் 20,000 ம் வழங்கப்பட்டதால் ஒட்டுமொத்த தேர்தல் முடிவும் மாறியதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதனை குறிப்பிட்டு நடந்து முடிந்த தேர்தலில் இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இசக்கி ராஜா வெளியிட்டுள்ள பதிவில்,
“அடுத்த நான்கு வருடங்கள் கழித்து இந்த சங்கத்தையும் பணத்திற்காக வாக்களிக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.. எனக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அடுத்த தேர்தலில் பல லட்சம்.. சில கோடிகளை தயார் செய்து உங்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்கிறேன்..
ஆனால் இந்த தேர்தலில் எப்படி தலைமை நிர்வாகத்திற்கு ஓட்டு போட்டதை புகைப்படம் எடுத்து காட்டி பணம் பெற்றீர்களோ.. அதைப்போலவே எனக்கு காட்ட வேண்டும்.. நானும் பணம் தருகிறேன்..
உண்மையில் சினிமாவை நேசிக்கும் என் அன்பு சொந்தங்களே எனக்கு வாக்களித்தவர்களே.. என்னை மன்னித்து விடுங்கள்,
இந்த சினிமாவின் சாபக்கேடு பணம் வாங்கி அடிமை ஆகும் நபர்களால் சங்கமும் தமிழ் சினிமாவும் நாசமாக போய்விட்டது..
தவறான வழியில் வந்து தான் நமது சங்கத்தையும் நமது தயாரிப்பாளர்களையும் காப்பாற்ற முடியும்.. அதை புரிந்து கொண்டேன்..அடுத்த தேர்தலில் சந்திப்போம் V ராஜா (எ) V இசக்கிராஜா
நேர்மையாக இத்தேர்தலில் போட்டியிட்டு பண முதலைகளிடம் அதற்கு அடிமையானவர்களிடம் தோல்வியடைந்த வேட்பாளர்.
எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்: திமுக ஆதரவு!
இது உங்களுக்கான தேர்தல் அல்ல: மோடிக்கு ராகுல் பதில்!