திரைப்பட இயக்குநர் புதிய தென்றல் வி.பிரபாகர், ஏராளமான படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். அவர் சார்பாக அவருடைய வழக்கறிஞர் ச.செந்தில்நாதன், செய்தித்தாள்களில் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் குறிப்பிட்டிருப்பதாவது, “பிரபல மலையாள இயக்குநர் சிபிமலையின் இயக்கத்தில் மோகன்லால், ரேகா, முரளி, நெடுமுடிவேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தசரதம்.’
இந்தப்படத்தைத் தமிழிலும் தெலுங்கிலும் மொழிமாற்றி எடுக்கும் உரிமை (ரீமேக்) மற்றும் குரல்மாற்றி (டப்பிங்) வெளியிடும் உரிமையையும் வி.பிரபாகர் வாங்கியுள்ளார்.
எனவே, அந்தக் கதை அல்லது அதில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளை யாராவது முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பயன்படுத்தினால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு உட்பட அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
அந்தப்படம் மலையாளத்தில் 1989 ஆம் ஆண்டு வெளியாகியிருக்கிறது. அதன் உரிமையைப் பெற்ற வி.பிரபாகர் திடீரென இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடக் காரணமென்ன? என்று விசாரித்தால் விரைவில் வெளியாகவிருக்கும் ஒரு படம் இந்தப்படத்தைத் தழுவி சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள் அது எந்தப்படம்?
ஜாக் ஹாரிஸ் என்பவர் இயக்கத்தில் கதிர், நட்டி நடராஜ், கயல் ஆனந்தி உட்பட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் யூகி. இந்தப்படம்தான் அந்தப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
நவம்பர் 18 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப்படத்தைத் தமிழில் வெளியிடுபவர் முன்னாள் காவல்துறை அதிகாரி திலகவதியின் மகன் பிரபு திலக்.
படம் வெளியான பிறகு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்காகவே இந்த பொதுஅறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இராமானுஜம்
தெலுங்கு சினிமாவின் புதுமைப்பித்தன் : ‘சூப்பர்ஸ்டார்’ கிருஷ்ணா