சமூக பிரச்சனைகளை பேசும் தமிழ் சினிமா: நடிகர் கார்த்தி

சினிமா

தமிழகம் வரலாறு ரீதியாகவும் பாரம்பரியமாகவும் இலக்கியம், கவிதை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை வடிவங்களின் மையமாக இருந்து வருகிறது என்று நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.

தக்சின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி நேற்று(ஏப்ரல் 19) கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “தமிழகம் வரலாறு ரீதியாகவும் பாரம்பரியமாகவும் இலக்கியம், கவிதை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை வடிவங்களின் மையமாக இருந்து வருகிறது. சென்னையின் கரைகளை சினிமா எப்போது தொட்டதோ, அப்போதிலிருந்தே மேடை நாடகத்தின் உச்ச நட்சத்திரங்களான பி.யு.சின்னப்பா, எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், எஸ்.ஜி.கிட்டப்பா மற்றும் அவரது மனைவி கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்டோரை உடனடியாக தன்பால் ஈர்த்துக் கொண்டது.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் அதன் கதைகள் பெரும்பாலும் நமது புராணம் மற்றும் கற்பனைக் கதைகளை ஒட்டியே இருந்தது. முதல் பல வருடங்களுக்கு சங்கரதாஸ் சுவாமிகளின் 68 மேடை நாடகங்களிலிருந்தே, தமிழில் உருவான சினிமாக்களின் கதைகள் இருந்தன.

ஆரம்ப நாட்களில் மொழி எல்லைகளைத் தாண்டி பேசப்பட்ட முதல் தமிழ், மற்றும் இந்தியிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டஎஸ்.எஸ்.வாசனின் பிரம்மாண்ட படைப்பான சந்திரலேகா. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படத்தில் அறிமுகமான வைஜெயந்தி மாலா மொழி கடந்து பிரபலமான நட்சத்திர நடிகையானார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தி, ”அப்போதே எல்லைகளைக் கடந்து புது ரசிகர்களை நோக்கி திரை நட்சத்திரங்கள் சென்று கொண்டிருந்தனர்.

இன்று வரை தமிழ் படைப்புகள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு, மொழி மாற்றம் செய்யப்பட்டு, அதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும், அதன் அழகியலையும் மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

தமிழ் சினிமா எப்போதுமே நம் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்து வருகிறது. அது எப்போதும் பொழுதுபோக்கிற்காக என்கிற வட்டத்திற்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாமல், சமூக பிரச்சனைகளையும் பேசியுள்ளது.

உதாரணமாக கே. பாலச்சந்தர், ருத்ரய்யா மற்றும் பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் நம் சமூகத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து தங்கள் திரைப்படங்களில் பதிவு செய்துள்ளனர்.

வெள்ளித்திரையில் சுதந்திரமான மற்றும் துணிச்சலான இளம் பெண்களை அவர்கள் சித்தரித்த விதம் இன்றளவும் பொருத்தமாக உள்ளது. தமிழ் சினிமாவில் கதை சொல்லும் முறை மாற்றமடைந்து, வளர்ச்சியடைந்து, இன்னும் பண்பட்டு வருகிறது. நுணுக்கமான களங்கள், வழக்கமான பாதையில் பயணிக்காத திரைக்கதைகள், சமூகத்தின் விதிகளுக்கு சவால் விடும் பாங்கு ஆகியவற்றை கையாள எங்கள் படைப்பாளிகள் என்றும் அச்சப்பட்டதில்லை.

அதிக தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள் என்று பேச ஆரம்பிக்கும் போதே பரியேறும் பெருமாள், சூரரைப் போற்று, விசாரணை மற்றும் ஜெய் பீம் போன்ற சில பெயர்கள் என் நினைவில் தோன்றுகின்றன. இந்தப் படங்கள் நமது சட்ட திட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் படங்கள் வந்த பிறகு புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், பொன்னியின் செல்வன் போன்ற கனவுத் திட்டங்களைச் செயல்படுத்தி, உலகளாவிய பார்வையாளர்களிடம் நமது திரைப்படங்கள் சென்றடைய ஓடிடி வழிவகை செய்துள்ளது. இந்த உலகுக்கு எடுத்துச் சொல்ல நமது பாரம்பரியத்தில் இன்னும் எண்ணற்ற கதைகள் உள்ளன. எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்தை நான் என் குழந்தைகளுடன் பார்த்தேன். ஊட்டியிலிருந்து ஒரு கதை உலகம் முழுவதும் சென்றுள்ளது என்பதை நினைத்து ஆனந்தப்பட்டேன். கார்த்திகிக்கு நன்றி. பிரேம் ரக்‌ஷித் சார், எங்கள் கால்களை உடைத்தது பத்தாது என்று வெளிநாட்டவரின் காலையும் உடைக்கும் அளவுக்கு அனைவரையும் அந்த நாட்டு நாட்டு நடனத்தை ஆட வைத்துவிட்டார். அதற்கும் நன்றி” என்றார்.

இராமானுஜம்

இளையராஜாவுடன் இணையும் பிரேமம் பட இயக்குநர்!

ஆருத்ரா கோல்டு மோசடி: ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

Tamil cinema that talks about social issues Actor Karthi
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *