உதய் பாடகலிங்கம்
காமெடி, வில்லத்தனம், கேரக்டர் ரோல்களில் அமர்க்களப்படுத்தும் பக்ஸ்!
நடிகர் பகவதி பெருமாள். திரையுலகில் செல்லமாக அழைக்கப்படும் ‘பக்ஸ்’ எனும் பெயரால் நம் அனைவருக்கும் பரிச்சயம்.
பருவ வயதில் படர்ந்த பருக்களின் தாக்கம் தெரிகிற கன்னங்கள். சிறிய கண்கள். விசாலமான நெற்றி. சாதாரண உயரம். கொஞ்சம் பூசினாற் போன்ற உருவம். கூடவே நடுத்தர வயதினருக்கான உடல்மொழி என்றிருக்கும் இவரது தோற்றம், முதன்முறையாக பார்ப்பவர்களை ‘இவரா நடிக்கிறாரு’ என்று கேட்க வைக்கும். ஆனால், திரையில் பக்ஸ் நடிப்பைப் பார்த்தபிறகு அந்த விமர்சனங்கள் காற்றில் கரைந்து போகும்.
நாகர்கோவிலில் பிறந்து, கும்பகோணம் பகுதியில் வளர்ந்தவர் பக்ஸ். பள்ளிப்படிப்பை முடித்தபிறகு பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்வதே இவரது கனவாக இருந்தது. ஆனால், பெற்றோர், குடும்பத்தினரின் விருப்பத்திற்கேற்ப சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார்.
கல்லூரி முடிந்ததும், மீண்டும் தனது சினிமா கனவுகளின் சிறகுகளை விசாலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்.
அந்த காலகட்டத்தில், 96 பட இயக்குனர் பிரேம்குமாரின் நட்பு பக்ஸுக்கு கிடைத்தது. அதன் மூலமாக இயக்குனர் கார்த்திக் ரகுநாத்துக்கு அறிமுகமானார் பக்ஸ். அவர் இயக்கிய கன்னடப் படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர், ‘காக்க காக்க’ படத்தில் கௌதம் மேனனின் இயக்குனர் குழுவில் இடம்பிடித்தார். அவரோடு சில படங்களில் பயணித்தவர், பிறகு ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்தில் இணைந்து பணியாற்றினார்.
2010 வாக்கில் இயக்குனர் கனவோடு ‘ஸ்கிரிப்ட்’களை உருவாக்குவதும், அதற்கேற்ற தயாரிப்பாளர்களைச் சந்திப்பதுமாகத் தனது திரைப்பயணத்தின் அடுத்தகட்டத்தை எட்டினார்.
அப்போதுதான், நடிப்பு எனும் இன்னொரு கதவு அவரது வாழ்வில் திறந்தது.
பிரேம்குமார் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் முதன்முறையாக நடிகராக அறிமுகமானார் பக்ஸ். அதற்குக் காரணம், அப்படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன்.
பிறகு மிக மெதுவாக நடிக்கும் வாய்ப்புகள் வர ’ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’, ‘ஜிகர்தண்டா’, ‘இன்று நேற்று நாளை’ படங்களில் இடம்பிடித்தார். அப்படங்களில் அவரது நடிப்பு வித்தியாசமாக அமைந்திருந்தது கண்டு ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, ‘ஜில் ஜங் ஜக்’, ‘பிச்சைக்காரன்’, ‘இறைவி’ படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது.
’பிச்சைக்காரன்’ படத்தின் விஜய் ஆண்டனியின் நண்பனாக, சீரியசான பாத்திரத்தில் நடித்தார் பக்ஸ். அதில் அவர் வரும் காட்சிகள் மிகக்குறைவு என்றபோதும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
தொடர்ந்து கூட்டத்தில் ஒருவன், மாயவன், 96, சீதக்காதி என்று பக்ஸின் கிராஃப் மேலேறத் தொடங்கியது. ஆனாலும், ரசிகர்களை அதிரவைக்கும் பாத்திரத்தில் அதுவரை அவர் தோன்றவே இல்லை.
அந்தக் குறையைப் போக்கியது, தியாகராஜா குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’. அதில் எஸ்ஐ பெர்லின் எனும் பாத்திரத்தில் தோன்றிய பக்ஸ், திரையில் நாம் பார்த்த வில்லன்களில் இருந்து முற்றிலும் வேறாகத் தெரிந்தார்.
பிஎஸ் வீரப்பா, எம்என் நம்பியார், எஸ்ஏ அசோகன் என்று ரசிகர்களை மிரள வைத்த சில வில்லன் நடிகர்களுக்கு இணையாக வைக்கும் அளவுக்குத் தன் நடிப்பால் மிரட்டினார். அந்த ஒரு படம், பக்ஸை பாலிவுட் வரை கொண்டு சென்றது என்றால் அது மிகையல்ல.
சூப்பர் டீலக்ஸ் படம் தான், இந்தியில் ‘மோனிகா மை டார்லிங்’ படத்தில் பக்ஸ் நடிக்கக் காரணமாக அமைந்தது.
இடைப்பட்ட காலத்தில் துக்ளக் தர்பார், பேச்சுலர், நவரசா வெப்சீரிஸ் என்று பல படைப்புகளில் வில்லத்தனமும் நகைச்சுவையும் ஒருங்கிணைந்த பாத்திரங்களில் திறம்படத் தோன்றினார் பக்ஸ்.
கடந்த ஆண்டில் வெளியான படங்களில் துணிவு, குட்நைட் போன்றவற்றில் அவரது பெர்பார்மன்ஸ் நினைவில் நிற்கும்விதமாக இருந்தது.
இதோ, இந்த ஆண்டில் ப்ளூ ஸ்டார், எமக்கு தொழில் ரொமான்ஸ் படங்களில் நடித்து ரசிகர்கள் உடனான தனது பிணைப்பைத் தொடர்ந்து வருகிறார் பக்ஸ். செங்களம், தி நைட் மேனேஜர், கில்லர் சூப் சீரிஸ்களின் வழியே அடுத்த தலைமுறை பார்வையாளர்களையும் ஈர்த்து வருகிறார்.
கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்காமல், அவற்றில் இருந்து தனக்கானதைத் தேர்ந்தெடுக்கிற இயல்பு பக்ஸிடம் உண்டு. அதற்கு அவரது பிலிமோகிராஃபியே சாட்சி. அதையும் தாண்டி, இயக்குனர் ஆகும் கனவு வேறு அவரை நெடுங்காலமாகத் துரத்தி வருகிறது.
நகைச்சுவை என்பது காலத்தோடு இணைந்தது. மிகச்சில விநாடிகள் முன்னே பின்னே நகர்ந்துவிட்டால், அது நீர்த்துப் போகும். அது தெரிந்தும், நகைச்சுவை காட்சிகளில் பக்ஸ் வெளிப்படுத்தும் மௌனம் முக்கிய அங்கமாக விளங்கும். அவரது ப்ளஸ்களில் அதுவே பிரதானமானது. அதுவே தியேட்டரில் மலரும் ரசிகர்களின் வரவேற்பு குறித்த அவரது சரியான புரிதலை காட்டுகிறது.
வெவ்வேறான பாத்திரங்களில் தோன்றும்போதும், காட்சிகளின் எண்ணிக்கை குறித்து அக்கறை காட்டாதபோதும், பக்ஸ் திரையில் தோன்றினால் ரசிக்க ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்துபவர்களுக்கே அந்த பெருமை கிடைக்கும்.
தோற்றத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் இந்தி நடிகர் ஓம் பூரியை காணும் உணர்வை ஏற்படுத்துபவர் பக்ஸ். இது அதீத புகழ்ச்சி கிடையாது. அப்படியொரு நடிப்பாளுமையாக, எல்லைகள் கடந்த திறமையாளராக பக்ஸ் திகழ வேண்டும் என்பதே அதன் பின்னிருக்கிறது.
பக்ஸ் தேர்ந்தெடுக்கும் படங்களும் பாத்திரங்களும் அப்புகழ்ச்சிக்குத் தக்கவாறே இருக்கின்றன.
ஒரு நடிகராக, இயக்குனராக, இரண்டையும் ஒரேநேரத்தில் கையாள்பவராக, எதிர்காலத்தில் அவர் திரையுலகில் மிளிரலாம். எல்லோரது திசைகளையும் தீர்மானிக்கும் எதிர்காலம், அவரது சினிமா கனவுகளுக்கும் வானம் அமைக்கட்டும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.