தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று (செப்டம்பர் 17) இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கு, சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.
மூத்த இயக்குநரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவர் பதவிக்கு பாக்யராஜை எதிர்த்துப் போட்டியிட்டார்.
நடந்து முடிந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைவராக வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று (செப்டம்பர் 17) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ்,
“தமிழ் சினிமாவில்,கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால் அதை நோக்கி சில இயக்குநர்கள் படம் எடுக்கின்றனர்.
வெற்றிமாறன் போன்றோர் நாவலை மையப்படுத்திச் சிறப்பான படங்களை எடுக்கின்றனர். தமிழ்த் திரை உலகில் எழுத்தாளர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அனைத்து இயக்குனர்களுக்கும் திரைக்கதை என்பது எளிதில் வசப்படாத ஒன்றாகவே உள்ளது. கேரள திரையுலகில் பெரும்பாலான இயக்குனர்கள் திரைக்கதை எழுத்தாளர்களை நம்பியே உள்ளனர்.
இயக்குனர் வசந்தபாலனும், தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியர்களின் தேவை குறித்து அடிக்கடி குறிப்பிடுவார்.
தற்போது இந்த மாற்றம், தமிழ் சினிமாவில் மெல்ல மெல்ல நிகழ்ந்து வருகிறது. இயக்குனர் பா.ரஞ்சித், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் எழுத்தாளர் தமிழ் பிரபாவுடன் இணைந்து திரைக்கதை எழுதினார்.
சீயான் விக்ரமுடன் இணைந்து பணியாற்ற உள்ள அடுத்த திரைப்படத்திலும், தமிழ் பிரபா பணியாற்றுகிறார். லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படத்தில் இயக்குனர் ரத்னகுமார் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்.
பொன்னியின் செல்வன் மற்றும் வெந்து தணிந்தது காடு திரைப்படங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியர்கள் நிலை குறித்து, இயக்குனர் வெற்றிமாறன் குறிப்பிடும்போது, “தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், சினிமா இயக்குனர்கள் என்று தனித்தனியாக விரும்புவதில்லை.
இதனால் தான் தமிழ் சினிமாவில் திரைக்கதை ஆசிரியர்கள் பங்களிப்பு குறைந்துள்ளது. ஆனால் இந்த சூழல் விரைவில் சரியாகும்” என்று தெரிவித்திருந்தார்.
ஒரு நல்ல சினிமா எடுக்கத் திரைக்கதை ஆசிரியர்களின் பங்களிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என மொத்த கிரிடிட்சும் தங்களுக்கு வர வேண்டும் என்ற நோக்கில் சில இயக்குனர்கள் அதனை விரும்பவில்லை.
இதனால் பழைய புளித்துப் போன கதையை சொல்லி வருகிறார்கள். ரசிகர்களும் அந்த கதைகளை விரும்பவில்லை.
தமிழ் சினிமாவின் முன்னேற்றத்திற்கு இயக்குனர்கள், திரைக்கதை ஆசிரியர்களை அதிகளவு தங்கள் படங்களில் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
செல்வம்
”எழுதக் கற்றுக் கொடுத்தவரே கலைஞர்தான்” -முதல்வரைச் சந்தித்த கே.பாக்யராஜ்
எடியூரப்பா ஊழல் வழக்கில் எடப்பாடியின் உறவினர்!