‘சூரரைப்போற்று’ படத்திற்காகத் தேசிய விருது வென்றுள்ளதற்குப் பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, பின்னணி இசை, படம், திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் தேசிய விருதுகளைத் தட்டி சென்றது.
இந்த நிலையில், ‘நாம ஜெயிச்சுட்டோம் மாறா’ என படத்தில் இடம் பெற்றுள்ள வசனத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.

விருதுகளைக் குவித்து பெருமை சேர்த்துள்ள ‘சூரரைப்போற்று’ படக்குழுவினருக்கும், ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கும் மற்ற விருதாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

‘ஆடுகளம்’, ‘அசுரன்’ படங்களுக்காகத் தேசிய விருது வென்ற நடிகர் தனுஷ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘தேசிய விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாக சூர்யா சார் மற்றும் என்னுடைய சிறந்த நண்பரான ஜிவி பிரகாஷ் குமாருக்கும் வாழ்த்துகள். தமிழ் திரைத்துறைக்குச் சிறந்த பெருமை மிகுந்த நாள் இது’ எனத் தெரிவித்துள்ளார்.

அதே போல, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ‘சூர்யா சார், சுதா கொங்கரா, ஜிவி, அபர்ணா என ‘சூரரைப்போற்று’ படத்திற்காகத் தேசிய விருது வென்ற அனைவருக்கும் மிக பெரிய வாழ்த்துகள். ‘சூரரைப்போற்று’ படக்குழுவுக்கே இன்னும் வலிமை சேரட்டும்’ என ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன், ‘தமிழ் திரைத்துறையைப் பெருமை மிக்கதாக மாற்றி இருக்கும் சூர்யா, சுதா கொங்கரா, அபர்ணா, இயக்குநர் வசந்த், லக்ஷ்மி பிரியா, அஷ்வின் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று நடிகர் சூர்யா தன்னுடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் நிலையில் தேசிய விருது சிறந்த ஒரு பிறந்தநாள் பரிசாக கிடைத்துள்ளது என ரசிகர்கள் பலரும் இதனை ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆதிரா