தமிழ் சினிமா 2023 : டாடா வெற்றியும் வாரிசு துணிவு வசூலும்!

Published On:

| By Kavi

Tamil cinema 2023

ஆங்கில வருடம் முடிவடையும் இறுதி நாட்களில் கடந்துவந்த நிகழ்வுகளை நினைவுகூர்வதும் அவற்றை பதிவு செய்வதும் ஒவ்வொரு வருட கடைசியில் பதிவு செய்வது வழக்கமான ஒன்று.

அந்தவகையில், 2023ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்கள், அப்படங்கள் பாக்ஸ் ஆபீசில் நிகழ்த்திய சாதனைகள் பட்டியலிடப்பட்டு வருகின்றன.

வரலாறுகளை பதிவு செய்கின்றபோது சாதனைகளை கூறுகிறபோது அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும் பதிவு செய்ய வேண்டும் என்பது இங்கு புறக்கணிக்கப்பட்டே வருகிறது. அதே போன்று நட்சத்திர புகழ் வெளிச்சத்தில் சமூகம் சார்ந்த படைப்புகளும், சாமான்யர்களின் சாதனைகளும் தவிர்க்கப்பட்டு வருகின்றன.

இந்தக் குறைகள் இல்லாமல் 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்கள், வெற்றி, தோல்விகள் அதன் பின்னணி ஆகியவற்றை பதிவு செய்கிறது 2023 தமிழ் சினிமா சிறப்பு பார்வை.

2023 ஆம் ஆண்டில், கடந்த 51 வாரங்களில் 235 நேரடி தமிழ் படங்கள் வெளியாகி உள்ளது. எஞ்சியுள்ள கடைசி வாரத்தில் எட்டு படங்கள் வரை வெளியாக வாய்ப்பு உள்ளது.

சுமார் 243 படங்கள் இந்த ஆண்டில் திரையரங்குகளில் திரையிடப்பட்ட பட்டியலில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் (ஜனவரி, பிப்ரவரி, மார்ச்) 51 நேரடி தமிழ் படங்கள் வெளியாகியுள்ளது.

இவற்றில் விஜய்(வாரிசு)
அஜீத்குமார்(துணிவு)
ஜெயம்ரவி(அகிலன்)
பிரபுதேவா(பஹீரா)
சிம்பு(பத்துதல)
உதயநிதி ஸ்டாலின்(கண்ணை நம்பாதே)
சூரி- விஜய்சேதுபதி(விடுதலை)

யோகிபாபு (பொம்மை நாயகி) ஐஸ்வர்யா ராஜேஷ் (ரன் பேபி ரன், தி கிரேட் இண்டியன் கிச்சன்) ஆகியோர் நடிப்பில் வெளியான மேற்குறிப்பிட்ட படங்கள் நட்சத்திர அந்தஸ்து, பிரபலமான இயக்குநர்கள் இயக்கிய படங்கள் என வணிக மதிப்பையும், ஊடக முக்கியத்துவத்தையும் பெற்றன.

இவற்றை புறந்தள்ளி முதல் காலாண்டில் படைப்புரீதியாக அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் முக்கியத்துவம் பெற்றது.

அதே போன்று அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் தொலைக்காட்சி நடிகர் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் திரையரங்குகளில் இளைஞர்களை கூட்டம் கூட்டமாக அலைமோத வைத்தது.

Tamil cinema 2023

4 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட டாடா தமிழக திரையரங்குகளில் சுமார் 40 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்திருக்கிறது. படத்தயாரிப்பு செலவை போன்று 10 மடங்கு வசூல், படத்தை தயாரித்த, விநியோகம் செய்த, திரையிட்ட அனைவருக்கும் டாடா படம் மூலம் லாபம் கிடைத்தது. படத்தின் நாயகன், இயக்குநர் இருவருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கவும், இயக்கவும் உடனடியாக வாய்ப்பு கிடைத்தது.

இந்த ஆண்டின் பொங்கல் வெளியீடாக அதிகபட்ச திரையரங்குகளில் வெளியான துணிவு, 400க்கும் குறைவான திரையரங்குகளில் வெளியான வாரிசு என இரண்டு படங்களும் சுமார் 600 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. இரண்டு படங்களுமே டாடா படம் போன்று இயல்பான வெற்றி, வசூலை குவிக்க முடியவில்லை.

தீவிரமான ரசிகர்கள் ஆர்வத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட்டை விற்பனை செய்து பாக்ஸ்ஆபீஸ் வசூலில் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் முயற்சியை மேற்கொண்டனர்.

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு பாக்ஸ்ஆபீஸ் வசூலை முன்னுக்கு பின் முரணாக (300 கோடி) கூறியதுடன் காணாமல்போனார். துணிவு அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டாலும் 250 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்துபோக முடியாமல் முடங்கியது.

இவ்விரு படங்கள் மூலம் அனைவருக்கும் லாபம் கிடைக்கவில்லை. நடிப்பதற்கு கோடிகளில் சம்பளம் வாங்கும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன் வந்த சுவடே தெரியாமல் திரையரங்குகளை விட்டு வெளியேறியது.

Tamil cinema 2023

தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் அதிரிபுதிரியாக கல்லா கட்டவில்லை என்றாலும் முதலுக்கு மோசம் செய்யாமல் சுமார் 120 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

ஏகப்பட்ட பில்டப்புகளுடன் , பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான பத்துதல திரைப்படம் பத்து நாட்கள் கூட திரையரங்குகளில் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறி திரும்பியது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான பஹீரா, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ரன் பேபி ரன், தி கிரேட் இண்டியன் கிச்சன் ஆகிய படங்கள் வந்த சுவடே தெரியாமல் காணாமல்போனது.

இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிப்பில் வெளியான பொம்மை நாயகி படைப்புரீதியாக விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும் வணிகரீதியாக திரையரங்குகளில் வெற்றிபெறவில்லை.

நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் 2023முதல் காலாண்டின் இறுதியில் வெளியான விடுதலை சமூக வலைத்தளங்களில், பொதுவெளியில் பெரும் ஆதரவையும், வரவேற்பையும் பெற்ற அளவிற்கு வணிகரீதியாக திரையரங்குகளில் கல்லா கட்டவில்லை.

மொத்தத்தில் முதல் காலாண்டில் 51 திரைப்படங்களை தயாரிக்க சுமார் 1000ம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இவற்றில்துணிவு, வாரிசு, விடுதலை, பத்துதலஆகிய படங்களின் தயாரிப்புக்காக மட்டும் 600 கோடி ரூபாய் செலவாகியிருக்கும்.

Tamil cinema 2023

ஆனால் வணிகரீதியாக திரையரங்குகளில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட டாடா, அயோத்தி பெற்ற வெற்றியையும், புகழையும் நட்சத்திர அந்தஸ்து, பிரம்மாண்டங்கள் நிறைந்த படங்கள் முதல் காலாண்டில் பெற முடியவில்லை. எஞ்சிய படங்கள் எல்லாம் விளம்பரத்திற்கு செலவு செய்யப்பட்ட முதலீட்டை கூட திரையரங்குகளில் வசூலிக்கவில்லை.

2023 ஜனவரி – மார்ச் வரை வெளியான நேரடி தமிழ் படங்கள்
1.V3
2. அன்புள்ள மரணம்
3. துணிவு
4. வாரிசு
5. வல்லவனுக்கு வல்லவன்
6. பிகினிங்
7. மெய்ப்பட செய்
8. பொம்மை நாயகி
9. நான் கடவுள் இல்லை
10. நான் யார் தெரியுமா
11.ரன் பேபி ரன்
12.தலைக்கூத்தல்
13.திகிரேட் இந்தியன் கிச்சன்
14. டாடா
15. கேடி
16. கூட்டம்
17. நினைவே நீ
18. வர்ணாச்சிரமம்
19. வசந்தமுல்லை
20. பாகாசுரன்
21. மூன்றாம் பெளர்ணமி
22. வாத்தி
23. குற்றம் புரிந்தால்
24.ஓம் வெள்ளிமலை
25. சிக்னல் சங்கர்
26. டக்ஸ்
27. அரியவன்
28.அயோத்தி
29. பஹீரா
30. கடுகு
31. பல்லு படாம பார்த்துக்கோ
32. விழித்திரு
33.அகிலன்
34. பியூட்டி
35. இரும்பன்
36. கொன்றால் பாவம்
37. மான் வேட்டை
38. மெமரிஸ்
39.D.3
40. கோஸ்டி
41.கண்ணை நம்பாதே
42. கற்றது மற
43. குடிமகன்
44.ராஜா மகள்
45. N4
46. பருந்தாகாது ஊர்க்குருவி
47. வெங்கட்புதியவன்
48. எல்லாம் மேல இருக்கிறவன்பார்த்துபான்
49. தூள் பறக்குது
50. பத்துதல
51. விடுதலை-1

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விமர்சனம்: ஆயிரம் பொற்காசுகள்!

‘இறைவன் மிகப்பெரியவன்’ தலைப்பு : அமீர் பதில்!

கார்த்தி சிதம்பரத்தின் ரூட் க்ளியர்: கிறிஸ்துமஸ் விழாவில் உற்சாகம்!

விவசாயத் தொழிலாளருக்கு விடிவுகாலம் வருமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment