இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கௌஷிக்கின் பதிவுகள்!

Published On:

| By christopher

பிரபல இளம் சினிமா விமர்சகரான கௌஷிக் மாரடைப்பால் நேற்று (ஆகஸ்ட்15) உயிரிழந்தார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த வருத்ததுடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா துறையில் இளம் வயது முதல் திரைப்பட விமர்சகராக, விஜேவாக பணியாற்றி வந்தவர் கெளசிக்(35). சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்த கெளசிக், சினிமா துறை சார்ந்த தகவல்கள், திரைப்பட விமர்சனங்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்களுடன் நேர்காணல்கள் ஆகியவற்றின் மூலம் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக நேற்று மதியம் உயிரிழந்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதிரை பிரபலங்கள் பலரும் கெளசிக்கின் மறைவுக்கு சமூகவலைதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவையொட்டி டிவிட்டரில் #RIPKaushikLM என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

இறப்பதற்கு முன் சில மணி நேரம் வரை உழைப்பு!

இறப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக கூட துல்கர் சல்மான் நடித்துள்ள சீதா ராமம் மற்றும் பிரபாஸின் சலார் திரைப்படங்கள் குறித்த அப்டேட்டினை கெளசிக் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது மறைவையடுத்து, நடிகர் துல்கர், ”கௌசிக்கின் மரணம் உண்மையில் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

நாங்கள் ஒருவரையொருவர் பெரும்பாலும் ட்விட்டர் மூலமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் சந்தித்து பேசியுள்ளோம். வாழ்க்கை மிகவும் குறுகியது. நல்ல சினிமாவுக்கு எப்போதும் துணை நிற்கும் அவரது ஆதரவுக்கு நன்றி. அவரது மறைவு என்னை தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளது” என்று உடைந்த ஹார்ட்டின் எமோஜிக்களோடு குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது டிவிட்டர் பதிவில், ”கெளசிக் மரணம் குறித்த செய்தியைக் கேட்டது அதிர்ச்சியாக உள்ளது. அன்பான மனிதர். இளம் வயதில் அவர் மரணமடைந்துள்ள செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ், ”கெளசிக்கின் மரண செய்தியைக் கேட்டு எனக்கு வார்த்தையே வரவில்லை. அவர் இனி இல்லை என்பதை நம்ப முடியவில்லை!” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு, “ மனிதர்களிடம் உள்ள நல்ல குணங்களை மட்டுமே பார்க்கும் ஒருவரை, மீண்டும் பார்க்க முடியாது என்பது வேதனையானது. கெளசிக் பல நல்ல குணங்களை கொண்டிருந்தார். தன்னை எப்போதும் மேம்படுத்தி கொள்ளவே அவர் விரும்பினார். கெளசிக் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலி, ”இந்தச் செய்தியைக் கேட்டு எனக்கு சொல்வது என்று வார்த்தையே வரவில்லை. கெளசிக் மரணத்தை நம்ப முடியவில்லை. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு எப்போதும் நன்றி. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள பதிவில், ”கெளசிக்கின் மரணத்தை நம்ப முடியவில்லை. இதனை மிகவும் கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். அவரை சிலமுறை மட்டுமே நேர்காணலுக்காக சந்தித்துள்ள போதிலும், என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டார். அவரது குடும்பத்தை நினைத்து பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் டி.இமான், ”சகோதரர் கெளசிக்கின திடீர் மரணம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவை நேசித்த ஒரு நல்ல மனிதர் சீக்கிரம் நம்மை விட்டு போய்விட்டார்” என்றுள்ளார்.

”கௌசிக் திடீர் மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நட்புக்குரிய மனிதர்! அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன்” என்று நடிகரும் இயக்குநருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது பதிவில், ”இது உண்மையில் அதிர்ச்சியாக உள்ளது! அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கடவுள் தைரியம் கொடுக்க வேண்டி கொள்கிறேன். இனி நீங்கள் இல்லை என்பதை நம்ப முடியவில்லை சகோதரா!” என்று குறிப்பிட்டுள்ளார்.

கேஜிஎப் மற்றும் சலார் திரைப்படத்தை தயாரித்து வரும் ஹாம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் கெளசிக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான டிடி தனது பதிவில், ”என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த இளம் வயதில் மறைந்துள்ள கெளசிக்கின் இழப்பால் அவரது குடும்பம் படும் துயரத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. கடவுளே அவர்களுக்கு தயவு செய்து சக்தி கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.

சக சினிமா விமர்சகரும், தயாரிப்பாளருமான தனஞ்செயன், “ வாழ்க்கை சில நேரங்களில் மிக கொடூரமாக உள்ளது. இளமையான, திறமையான மற்றும் மென்மையான இதயம் கொண்ட கெளசிக் மறைந்துவிட்டார். மதியம் 12.28 மணிக்கு தான் அவர் எனக்கு சினிமா தொடர்பாக தகவல் அனுப்பியிருந்தார். ஆனால் சில மணி நேரத்திலேயே திடீர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார். கடவுளே என் நண்பர்களிடம் கருணை காட்டு” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் எண்ணற்ற நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இளம் சினிமா விமர்சகரான கெளசிக்கின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பில் 1947 ஆகஸ்ட் 16 டீசர் வெளியீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.