ஐபிஎல் போட்டிகளை சட்ட விரோதமாக ஒளிபரப்பியதாக மகாதேவ் HPZ TOKEN செயலி நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. மேலும், இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான மகாதேவ் செயலியின் உரிமையாளர் சவுரவ் சந்திரசேகர் மீது 5,000 கோடி மோசடி வழக்கும் உள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சவுரப் சந்திரசேகரும் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பெட்டிங் தடை செய்யப்பட்ட விஷயம் என்பதால் மகாதேவ் செயலி அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, 2023 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பியதாகவும் மகாதேவ் HPZ TOKEN செயலி மீது புகார் எழுந்தது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஐ.பி.எல் உரிமத்தை பெற்றிருந்த வியாகாம் நிறுவனம் HPZ TOKEN செயலி மீது போலீசில் புகார் அளித்தது.
இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்து வந்த நடிகை தமன்னா, அந்த நிறுவனத்தின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதால், விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை ஏற்கனவே தமன்னாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து, நடிகை தமன்னா தனது பெற்றோருடன் அசாம் தலைநகர் கவுகாத்தி சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
நேற்று பிற்பகலில் ஆஜரான தமன்னாவிடம் 5 மணிநேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, தமன்னாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தமன்னாவிடம் மட்டுமல்ல மகாதேவ் தொடர்பான நிகழ்ச்சிகள், விளம்பரங்களில் பங்கேற்ற பாலிவுட் பிரபலங்கள் அனைவரிடத்திலும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளது.
அமலாக்கத்துறையிடம் ஆஜரான பிறகு கவுகாத்தியிலுள்ள புகழ் பெற்ற காமாக்யா அம்மன் கோவிலுக்கு சென்று தமன்னா வழிபட்டார். அப்போது, அவரின் பெற்றோரும் உடன் இருந்தனர். வெள்ளை குர்தா அணிந்து சாந்தமுடன் சென்று அம்மனை மனமுருக வழிபட்ட தமன்னா பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : சுவாதி (18.10.2024 முதல் 15.11.2024 )
என்கவுண்ட்டர் விவகாரம்… கமிஷனர் அருண் விளக்கம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு!