விக்ரம் பட் முதல் லலித் மோடி வரை… சுஷ்மிதா சென்னின் காதல் கதை!

சினிமா

கையில் மிதக்கும் கனவாக மாறி தமிழ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் தற்போது லலித் மோடியுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த சுஷ்மிதா சென் அழகிப் போட்டியில் ஐஸ்வர்யா ராயை தோற்கடித்தவர் என்றால் நம்ப முடிகிறதா?

1994-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியின் இறுதிச் சுற்று ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் இடையில் சமனில் முடிந்தது. மற்றொரு சுற்று போட்டி நடத்தப்பட்டு அதில் சுஷ்மிதா சென் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அதே ஆண்டு நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியிலும் அவர் பங்கேற்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிரபஞ்ச அழகி பட்டத்தை தட்டிச் சென்ற முதல் இந்திய பெண் என்கிற பெருமையை பெற்றார் சுஷ்மிதா சென்.

விக்ரம் பட் உடன் திருமணத்தை மீறிய உறவு

1996-ம் ஆண்டு தஸ்தக் என்கிற இந்தி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய விக்ரம் பட் உடன் சுஷ்மிதா சென்னுக்கு காதல் மலர்ந்தது. அப்போது விக்ரம் பட்டுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகியிருந்ததால் சுஷ்மிதா சென்னின் காதல் சர்ச்சையில் சிக்கியது. ஏற்கனவே திருமணமான ஒருவருடன் உறவில் இருப்பது குறித்து நேர்காணல் ஒன்றில் பதில் அளித்த சுஷ்மிதா சென், விக்ரம் பட்டும் அவருடைய மனைவியும் ஒன்றாக வாழவில்லை என்றும் இதற்காக நான் குற்ற உணர்ச்சி அடைய முடியாது என்றும் விளக்கமளித்தார்.

ரந்தீப் ஹூடாவுடன் மலர்ந்த காதல்

2008ஆம் ஆண்டில் கர்மா ஆர் ஹோலி படத்தில் நடித்த சுஷ்மிதா சென், படத்தின் கதா நாயகன் ரந்தீப் ஹூடாவுடன் காதலில் விழுந்தார். இந்த காதல் 3 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ரந்தீப் ஹூடா, சுஷ்மிதா சென்னுடனான பிரேக் -அப் தான் தனது வாழ்க்கையில் நடந்த மிகவும் சிறப்பான சம்பவம் என குறிப்பிட்டிருந்தார்.

வாசிம் அக்ரமுடன் டேட்டிங்

2008ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம்-ஐ சுஷ்மிதா சென் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. ஏக் கில்லாடி ஏக் ஹசினா என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் நடுவர்களாக பங்கேற்ற போது காதல் தீ பற்றிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த காதலும் நீடிக்கவில்லை.

இயக்குநருடன் காதலில் விழுந்த சுஷ்மிதா

2010-ல் துல்ஹா மில்கயா எனும் படத்தில் நடித்த சுஷ்மிதா சென், அப்படத்தின் இயக்குநர் முதஸ்ஸிர் அஜிஸ்-ஐ டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

ரித்திக் பாஸின் உடன் பிரேக்-அப்

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர்  ரித்திக் பாஸின் -ஐ சுமார் 4 ஆண்டுகள் விழுந்து விழுந்து காதலித்தார் சுஷ்மிதா சென். பாலிவுட் நடிகர்களின் திருமணங்களுக்குக் கூட ஒன்றாகவே சென்ற இவர்களது காதல் 2017ம் ஆண்டு திடீரென பிரேக் -அப் ஆனது

இன்ஸ்டாவில் உருவான இன்ஸ்டன்ட் காதல்

2018ல் ரோமன் ஷால் என்கிற இளைஞரை டேட்டிங் செய்வதாக அறிவித்தார் சுஷ்மிதா சென்.

இன்ஸ்டாகிராம் மூலம் ரோமன் ஷாலுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இருவருக்கும் இடையில் 15 வருட வயது வித்தியாசம் இருந்ததால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதில் கவனம் செலுத்தாமல் காதலில் மூழ்கினார் சுஷ்மிதா சென். பின்னர், கடந்த 2021-ம் ஆண்டு ரோமன் ஷால் உடனான உறவு முடிவுக்கு வந்துவிட்டதாகவும் ஆனால் காதல் மட்டும் அப்படியே தொடர்வதாகவும் தெரிவித்தார்.

லண்டனில் லலித் மோடியுடன் டேட்டிங்

இந்நிலையில் தான் லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் டேட்டிங் செய்யும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் போட்டிகளில் பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள லலித் மோடி, இந்தியாவில் இருந்து தப்பி லண்டனில் வசித்து வருகிறார்.

நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட அவர், புதிய தொடக்கம், புதிய வாழ்க்கை என பதிவிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் பேசிக்கொண்ட பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றன. அதில், தனது குறுஞ்செய்திக்கு பதிலளிக்குமாறு சுஷ்மிதா சென் -ஐ குறிப்பிட்டு லலித் மோடி பதிவிட்டிருக்கிறார்.

இந்த ஜோடியின் காதல் அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்துள்ளன. 56 வயதில் லலித் மோடிக்கு காதல் தேவையா எனவும் 46 வயதில் வேறு யாரை மாற்றப்போகிறீர்கள் என சுஷ்மிதா சென் -ஐ குறிப்பிட்டும் நெட்டிசன்கள் கேள்விகளை வீசி வருகின்றனர்.

ஆனால், விமர்சனங்களை கண்டுகொள்ளாத சுஷ்மிதா-லலித் ஜோடி லண்டனில் தங்களது டேட்டிங்-ஐ என்ஜாய் செய்து வருகின்றனர்.

~அப்துல் ராபிக் பகுருதீன்

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *