பாலிவுட் நடிகையும் 1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவருமான சுஷ்மிதா சென் ’தாலி பஜாவுங்கி நஹி, பஜ்வாங்கி’ என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
கணேஷாக பிறந்து புனேயில் வளர்ந்து மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலரும், திருநங்கைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஸ்ரீ கெளரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து வெப் சீரிஸ் எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ கெளரி சாவந்த் என்ற திருநங்கையின் கேரக்டரில் நடிகை சுஷ்மிதா சென் நடித்து வருகிறார்.
தாம் நடித்துவரும் இந்த வெப்சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த சுஷ்மிதா சென், “நான் கைதட்ட மாட்டேன். ஆனால் மற்றவர்களை அவ்வாறு செய்ய வைப்பேன்.
இந்த அழகான நபரின் கதாபாத்திரம் மற்றும் அவரது கதையை உலகிற்கு கொண்டு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை பெரும் பாக்கியமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன்.
வாழ்வதற்கும், கண்ணியத்துடன் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. நான் உங்களை நேசிக்கிறேன். இது போராட்டம் , சகிப்புத்தனமை மற்றும் அடங்காத சக்தியின் கதையை விவரிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இந்த தொடரை இயக்கியுள்ளார். இத்தொடரை அர்ஜுன் சிங் பரன், கார்ட்க் டி நிஷாந்தர் மற்றும் நாடியாட்வால ஆகியோர் தயாரித்துள்ளனர்.

யார் இந்த ஸ்ரீ கெளரி சாவந்த்
புனேவில் கணேஷ் என்ற பெயரில் பிறந்த கெளரி சாவந்த், இந்தியாவில் திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடும் திருநங்கைகளில் ஒருவர்.
இவர் 2000 ஆண்டுமுதல் திருநங்கையருக்காக, ‘சாகி சார் சவுகி’ என்ற அறக்கட்டளையை நடத்திவருகிறார். இதன்மூலம் பாதுகாப்பான பாலினத்தை ஊக்குவிப்பதையும், திருநங்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதையும் செய்துவருகிறார்.

அனாதை சிறுமியை பராமரிக்கும் திருநங்கை தாயாக சாவந்த் விக்ஸ் விளம்பரத்திலும் நடித்தார்.
அவர், ’கவுன் பனேகா குரோர்பதி’யில் வென்ற பரிசுத் தொகையை கார்கருக்கு அருகில் பாலியல் தொழிலாளர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்து உள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்