இளம் தலைமுறையைப் பிரதிபலிக்கிறதா?!
கமர்ஷியல் படங்களை வித்தியாசமானதாக உணர வைக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவராகத் திகழ்பவர் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல தந்தவர். சிறு இடைவெளிக்குப் பிறகு ‘பாண்டிய நாடு’, ‘ஆதலால் காதல் செய்வீர்’ படங்களைத் தந்தார். Suseenthiran 2k love story
பிறகு கென்னடி கிளப், சாம்பியன் போன்ற படங்களைத் தந்தாலும், அவை பெருவாரியான ரசிகர்களைச் சென்றடையும் வகையில் சிறப்பான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. இதோ இப்போது, மீண்டும் ஒரு இடைவெளிக்குப் பிறகு ’2கே லவ் ஸ்டோரி’யை உருவாக்கியிருக்கிறார்.

புதுமுகம் ஜகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பாலசரவணன், ஆண்டனி பாக்யராஜ் உட்படப் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். டைட்டிலுக்கு ஏற்றாற்போல, இப்படம் 2கே கிட்ஸ்களின் காதலைப் பேசுகிறதா?
காதலா, நட்பா?
ஒரு ஆண், ஒரு பெண். இருவரது நட்பும் மிக இறுக்கமாக, தெளிவானதாக, அதேநேரத்தில் சுற்றியிருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாத வகையில் இருக்கிறது.
எல்கேஜி படிக்கும்போது தொடங்கி கல்லூரி காலத்திற்குப் பின்னர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு நிறுவனத்தை நடத்தலாம் என்று முடிவெடுத்து, அதனைச் செயல்படுத்திக் காட்டுகிற அளவுக்கு அவர்களது நட்பு வலுவானதாக உள்ளது. அதேநேரத்தில், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது காதலாகத் தெரிகிறது. ‘இவங்க ப்ரெண்ட்ஸா, லவ்வர்ஸா’ என்று சந்தேகப் பார்வையை வீசுகின்றனர். அப்படியிருக்க, உடனிருக்கும் தோழமைகள், உறவுகள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா?
’உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறோம்’ என்று இருவரது பெற்றோரும் சொல்ல, இருவருமே அதனை ஏற்பதாக இல்லை.
முடிவில், இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரியைத் திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். அது நிகழ்ந்ததா, இல்லையா என்பதே ‘2கே லவ் ஸ்டோரி’யின் கதை.
’என்னடா முழு கதையையும் சொல்லிட்டாங்களே’ என்று யோசிக்க வேண்டாம். இந்தக் கதையில் நாயகனுக்கு ஒரு காதல் அத்தியாயம் உண்டு. அது சோகத்தில் முடிகிறது.
அந்த சோகத்தில் இருந்து அவரை மீட்டெடுப்பது நாயகிதான். பிறகு, அவருக்கே ‘நான் இவனைக் காதலிக்கிறேனா’ என்ற சந்தேகம் எழுகிறது.

அந்த வகையில், இந்தக் கதையை ஏற்ற இறக்கங்களுடன் கூடிய இனிய சாலைப் பயணமாக மாற்றுவதற்கான அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. அது சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
2கே லவ் ஸ்டோரி’ என்றவுடன், ஒரேயொரு விஷயம் மட்டுமே பலரது மனதில் விஸ்வரூபமெடுக்கும். அது பற்றி வெளிப்படையாகப் பேசினால், கலாசாரக் காவலர்கள் படத்தைப் பிறாண்டிவிடுவார்களோ என்று பம்மியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். ‘ஆதலால் காதல் செய்வீர்’ படம் தந்தவரிடம் இருந்து அப்படியொரு ஏமாற்றத்தை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அதுவே இப்படத்தில் ஏமாற்றம் தருகிற விஷயம். ’அதுதானே இக்கதையின் யுஎஸ்பி ஆக இருந்திருக்க வேண்டும்’ என்பவர்களுக்கு இப்படம் நிச்சயம் ஏமாற்றம் தரும்.
பயணம் தொடர்கிறது!
புதுமுகம் ஜகவீர் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். மீசை தாடியுடன் பார்க்கும்போது இளமையாகத் தெரிபவர், ‘க்ளீன் ஷேவ்’ முகத்துடன் காணும்போது கொஞ்சம் வயதானவராகத் தெரிகிறார். துருத்தலாகத் தெரியாத அளவுக்கு, நாம் பொதுவெளியில் எதிர்கொள்கிற ஒரு இளைஞராகத் தென்படுவது அருமை.
மீனாட்சி கோவிந்தராஜன் நல்ல அழகு. அதனை அடிக்கோடிடும்விதமாகத் திரையில் தோன்றியிருப்பதோடு, தேவையான நடிப்பையும் தந்திருக்கிறார்.
இப்படியொரு படத்தில் நிச்சயம் நகைச்சுவைக்கு இடமளிக்கப்பட வேண்டும். பாலசரவணன், ஆண்டனி பாக்யராஜ் கூட்டணி அதனைச் செய்திருக்கிறது. அதேநேரத்தில், ஆண்டனி பாக்யராஜ் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது போல திரைக்கதை நகரும் உத்தியைப் படம் முழுக்க இயக்குனர் பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
பின்பாதியில் சிங்கம்புலி, முருகானந்தம், ’ஜோ’ புகழ் கவின் ஆகியோர் நம்மை சிரிக்க வைத்திருக்கின்றனர்.
இதில் நாயகனின் பெற்றோராக வருபவர்களுக்குப் பெரிதாக வேலையில்லை. நாயகியின் தாயாக நடித்துள்ள வினோதினிக்கும் தந்தையாக வருபவருக்கும் ஓரளவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
அதே போல, பின்பாதியில் வரும் துஷ்யந்த், அவரது சகோதரியாக நடித்தவர், ஜெயபிரகாஷுக்கு அதீத முக்கியத்துவம் தந்திருக்கும் இயக்குனர், அக்குடும்பத்தைப் பற்றிய முழு சித்திரத்தை உருவாக்கத் தவறியிருக்கிறார்.
ஜகவீரின் காதலியாக, பவித்ரா எனும் பாத்திரத்தில் லத்திகா பாலமுருகன் நடித்திருக்கிறார். அவரது பாத்திரமும் சரி, நடிப்பும் சரி அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நல்லதொரு புது வரவு.
நாயகன் நாயகியின் தோழியாக வரும் நிவேதிதா ராஜப்பனின் பாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் கவனம் தந்திருந்தால், திரைக்கதையில் அழுத்தம் கூடியிருக்கக் கூடும்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் இமானின் இசை. பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, திரைக்கதையைத் தாங்கிப் பிடிக்கிற வகையில் அமைந்துள்ளது.
வி.எஸ்.அனந்தகிருஷ்ணனின் ஒளிப்பதிவு ஒரு விளம்பரப் படத்தை இரண்டரை மணி நேரம் பார்த்த உணர்வைத் தருகிறது. தியாகுவின் படத்தொகுப்பு கதை சீராகத் திரையில் விரிய உதவியிருக்கிறது. இப்படியொரு படத்தில் கலை இயக்குனரின் பெயரைத் தேட வேண்டியிருக்கிறது. காரணம் என்னவென்று தெரியவில்லை.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். உண்மையைச் சொன்னால், விக்ரமனின் ‘ப்ரியமான தோழி’யை இருபது ஆண்டுகள் கழித்து எடுத்தாற் போலிருக்கிறது இப்படம்.
மீனாட்சி கோவிந்தராஜன், லத்திகா பாலமுருகன், ஜகவீர் மூவரது பாத்திரங்களைத் தெளிவாக வடிவமைத்திருப்பது சிறப்பு. போலவே, அவர்களைச் சுற்றியிருக்கும் பெற்றோர், நண்பர்கள் பாத்திரங்களையும் அமைத்திருக்கிறார். ஆனால், பின்பாதியில் ஜெயபிரகாஷ் குடும்பத்தினரை காட்டியதில் ‘செயற்கைத்தனம்’ தெரிகிறது.
ஒரு இயக்குனர் தான் விரும்பியவாறு ஒரு பாத்திரத்தைக் காட்ட முடியும். ஆனால், அதற்கான ’நியாயப்படுத்தல்’ திரைக்கதையில் இருந்தாக வேண்டும். அது ‘மிஸ்’ ஆகியிருக்கிறது.
மலையாள இயக்குனர் கமலின் ‘பிரியாத வரம் வேண்டும்’ படத்திற்கும் ‘ப்ரியமான தோழி’க்கும் சிற்சில வித்தியாசங்களே உண்டு. ஆனால், அவை அப்படங்களின் முடிவை நியாயப்படுத்துவதாக இருக்கும். அது ‘2கே லவ் ஸ்டோரி’யில் பலவீனமாகக் கையாளப்பட்டிருக்கிறது.
இந்தக் கதையில் ‘ப்ரெண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ்’ உட்பட இன்றைய தலைமுறையின் காதல், நட்புக்கான வரையறைகளை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் இயக்குனர் சுசீந்திரன். பாலசரவணன் பாத்திரம் வழியே காமெடியாக, அந்த சீரியஸ் விஷயத்தைக் கையாண்டிருக்கிறார்.

அதே போன்று நாயகன் நாயகி நட்பை அல்லது அவர்களைச் சார்ந்தவர்களின் எண்ணக் கோணங்களைப் படத்தில் இயக்குனர் எடுத்தாண்டிருப்பார் என்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பவர்களை இப்படம் ஏமாற்றியிருக்கிறது. ’தில் சாஹ்தா ஹை’ பாணியில் அமைய வேண்டிய ஒரு திரைப்படத்தை, அனைத்து தரப்பு ஆடியன்ஸும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று சில விஷயங்களைத் தவிர்த்து, சிலவற்றைச் சேர்த்திருக்கிறார். அது, கதையின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கிறது.
’ஒரு ஹிட் வேண்டுமே’ என்று தான் கற்ற வித்தைகளை இறக்கியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். அதன் பலனாக, இப்படத்தில் சில காட்சிகள் ‘செம்மையாக’ இருக்கின்றன. ஒரு படமாகக் காண்கையில் திருப்தி ஏற்படுவதில்லை.
’பெண்களின் பார்வையில் கதை சொல்கிறேன் பேர்வழி’ என்று ஆணாதிக்கத்தைச் சில இயக்குனர்கள் திரையில் திணிப்பார்கள். அந்த வகையில், இதில் இளைய தலைமுறையினரின் வாழ்கைப் பார்வையை முந்தைய தலைமுறையின் மூளையில் இருந்து உதித்தது போன்று காட்டியிருக்கிறார் சுசீந்திரன். ’ஆதலால் காதல் செய்வீர்’ போன்று ஒரு கதையை மூன்றாம் மனிதரின் பார்வையில் இருந்து காணத் தவறியிருக்கிறார்.
அதனைப் பொருட்படுத்தாவிட்டால், ‘2கே லவ் ஸ்டோரி’யை ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்! Suseenthiran 2k love story