விமர்சனம் : சூர்யா’ஸ் சாட்டர்டே!

Published On:

| By Kavi

Surya's Saturday Movie Review

  உதயசங்கரன் பாடகலிங்கம்

சனிக்கிழமை பாட்ஷா வர்றார்.. வழிவிடுங்க..!

’இப்போ ஹீரோ கைய முறுக்குவான் பாரேன்’, ‘காதலிக்கிற பொண்ணு தன் காதலைச் சொல்றப்போ பேக்கு மாதிரி ஹீரோ முழிப்பான் பாரேன்’, ‘அம்மாகிட்ட பண்ண சத்தியத்தை மீறக்கூடாதுன்னு ஹீரோ இப்போ அடிக்க மாட்டான் பாரேன்’, ‘தான் காதலிக்கறதை வெளிப்படையா சொல்ற அளவுக்கு ஹீரோவோட அப்பா ரொம்ப ப்ரெண்ட்லியா இருப்பாரு பாரேன்’ என்று அடுத்தடுத்த காட்சிகளில் இதுதான் நிகழும் என்று யூகிக்கும் அளவுக்குச் சில திரைப்படங்கள் ‘க்ளிஷே’க்களின் குவியலாக இருக்கும்.

ஆனால், அதையும் மீறி அந்த படத்தின் கதையைத் திரையில் சுவாரஸ்யமாகச் சொன்னால் எப்படியிருக்கும்?

நானி, எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா, சாய்குமார், அபிராமி, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஜேக்ஸ் பிஜோய் இசையமைப்பில், விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள சூர்யாஸ்’ சாட்டர்டே திரைப்படம் அப்படிப்பட்ட திரையனுபவத்தையே நமக்குத் தருகிறது. ’சரிபோதா சனிவாரம்’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு இது.

சரி, விவேக் ஆத்ரேயா தந்திருக்கும் சூர்யா’ஸ் சாட்டர்டே திரைப்படம் மேற்சொன்ன மாயாஜாலத்தை எப்படிச் சாத்தியப்படுத்தியிருக்கிறது?

சனிக்கிழமை மட்டும்..!

சூர்யா (நானி) தனது தந்தை சங்கராம் (சாய்குமார்) உடன் வாழ்ந்து வருகிறார். சிறு வயதிலேயே தாய் சாயாதேவி (அபிராமி) உடல் நலக்குறைவால் மரணமடைந்த காரணத்தால், சகோதரி பத்ரா (அதிதி பாலன்) அவரை வழி நடத்துகிறார்.

ஆனால், பத்ராவின் திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நின்று போகிறது. காரணம், சூர்யாவின் கோபப்படும் இயல்பு.

’முணுக்குன்னு கோபம் வந்துவிடும்’ என்று சிலரது முன்கோபத்தைக் குறிப்பிடுவோம் அல்லவா? அப்படிப்பட்ட கோபத்தைக் கொண்டிருப்பவர் சூர்யா. சில சமயங்களில் அது ஆத்திரமாகவும் மாறுகிறது.

சிறுவயதில் அதனைச் சூர்யாவிடம் கவனிக்கும் தாய் சாயாதேவி, ’வாரத்துல ஒவ்வொரு நாளும் உன்னோட கோபத்தை தள்ளிப்போட்டுக்கிட்டே வா’ என்று கூறுகிறார். அப்படிக் கோபம் வருகிற நாட்களைச் சுவரில் எழுதி, அதனைக் கரியால் அழித்து வருகிறார் சூர்யா. ஒருநாள் மீதமிருக்கும்போது, தாய் இறந்துபோகிறார். அன்றைய தினம் சனிக்கிழமை.

மரணவீட்டில் தாய்மாமன் வந்து சண்டையிடுகிறார். தனது மனைவியையும் மகளையும் சாயாதேவி வெளியூருக்கு அனுப்பி வைத்துவிட்டதாகப் புலம்புகிறார். சகோதரி என்றும் பாராமல், மரணித்துக் கிடக்கும் சாயாதேவியை அசிங்கமான வார்த்தைகளால் திட்டுகிறார். அவ்வளவுதான்.

தனது கோபத்தை வெளிப்படுத்தச் சனிக்கிழமையைத் தாய் காட்டிவிட்டதாக உணர்கிறார் சூர்யா. தாய்மாமனைப் பொளந்து கட்டுகிறார். அன்று தான், சூர்யாவின் கோபம் ரௌத்திரமாக மாறிய சுபதினம்.

அன்று தொடங்கி ஒவ்வொரு சனிக்கிழமையும் தன்னைக் கோபப்படுத்திய அல்லது கோபம் வரக் காரணமாகிற அளவுக்குத் தன்னைச் சார்ந்தவர்களுக்குத் துன்பம் இழைத்தவர்களைப் புரட்டி எடுக்கத் தொடங்குகிறார் சூர்யா.

அப்படித்தான், சகோதரியின் திருமணத்தன்று தவறாகப் பேசிய அவரது மாமனாரையும் பொளந்து கட்டுகிறார். அன்று முதல் சகோதரி முகம் கொடுத்துப் பேசுவதில்லை.

இப்படிப்பட்ட சூர்யா, சிறு வயது முதல் தன் நெஞ்சில் நினைவுகளாக வைத்திருக்கும் மாமன் மகளை மீண்டும் சந்திக்கிறார். ஆனால், இவர் இன்னார்தான் என்று இருவருக்குமே தெரியவில்லை.

அந்தப் பெண்ணின் பெயர் சாருலதா (பிரியங்கா மோகன்). அவர் ஒரு காவல்நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருக்கிறார். அந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் தயானந்த் (எஸ்.ஜே.சூர்யா).

அந்த தயானந்த், காரணமே இல்லாமல் பிறரிடம் கோபப்படுபவர். ஒருநாள் அந்த தயானந்தின் கொடுமைகளைச் சூர்யா நேரில் காண நேர்கிறது.

பொதுவாக, தன்னைக் கோபப்படுத்தும் நபர்களின் பெயர்களை ஒரு டைரியில் எழுதுவது சூர்யாவின் வழக்கம். ஞாயிறு முதல் வெள்ளி வரை அவ்வாறு எழுதிவைத்துவிட்டு பொறுமை காப்பவர், சனிக்கிழமையன்று நிதானித்து அந்த பெயர்களை ஒவ்வொன்றாக மனதுக்குள் யோசித்துப் பார்ப்பார். அப்போதும் அதே கோபம் மீதமிருந்தால், டைரியில் அந்தப் பெயரை வட்டமிட்டு வைத்துவிட்டு, கையை முறுக்கிக் கொண்டு கிளம்பிவிடுவார்.

அப்படித்தான் தயானந்தின் பெயரையும் வட்டமிட்டு வைக்கிறார். ஊரே அதிரும் அளவுக்கு ஒரு கொடூரனோடு மோதுகிறானா தன் மகன்’ என்று யோசிக்கும் அவரது தந்தை, அதனைத் தடுக்க முயற்சிக்கிறார்.

அதன் பின் என்னவாகிறது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

ஹீரோ நல்லவன், வில்லன் கெட்டவன் என்று நாம் கண்ட ஆயிரத்து சொச்சம் படங்களில் இருந்து சூர்யா’ஸ் சாட்டர்டே கதை வேறுபட்டதல்ல.
ஆனால், அக்கதையிலிருக்கும் ‘க்ளிஷே’வான விஷயங்களை ‘கலர்ஃபுல்’லாக சொன்ன வகையில் வேறுபட்டு நிற்கிறது இப்படம். இயக்குனர் விவேக் ஆத்ரேயாவை ‘யார் இவர்’ என்று கேட்க வைத்திருக்கிறது.

இந்தக் கதையில் சனிக்கிழமை மட்டும்தான் ஹீரோ தன்னுடைய ரௌத்திரத்தை வெளிப்படுத்துவார். அதனால், வில்லன் அவரை ‘சனிக்கிழமை பாட்ஷா’ என்றழைப்பார்.

’அப்போ மீதி ஆறு நாள் அவர் என்ன பண்ணுவார்’ என்ற கேள்வி ரசிகர்களிடம் நிச்சயமாக எழும். அக்கேள்விகளுக்கு விலாவாரியாகப் பதில் சொல்கிறது திரைக்கதை.

அதுவே, முன்பின்னாக நகரும் காட்சிகளையும் தாண்டி இக்கதையோடு உணர்வுப்பூர்வமாக ஒன்ற வைக்கிறது. அதுவே, இந்த ‘சனிக்கிழமை பாட்ஷா’வின் யுஎஸ்பி.

நீண்ட நாட்களுக்குப் பிறகு..!

ஒரு கமர்ஷியல் மசாலா படம் என்றால் ஹீரோயினை கவர்ச்சியாகச் சில பாடல்களுக்கு ஆட வைக்க வேண்டும். ஹீரோயின் தவிர்த்து வேறு சில பெண் பாத்திரங்களும் க்ளிவேஜ் தெரியும்படி உடையணிய வேண்டும். இரட்டை அர்த்த நகைச்சுவை வேண்டும்.

முதல் காட்சியில் ஆபாசத்தைக் கொட்டிவிட்டு, அடுத்த காட்சியே அம்மா சென்டிமெண்டில் அழ வைக்க வேண்டும். வில்லனைக் கொடூரனாகக் காட்ட, திரையில் ரத்தத்தை வழியச் செய்ய வேண்டும். ஹீரோவை ஒரேநேரத்தில் மிக நல்லவனாகவும், மிக கெட்டவனாகவும் காட்ட வேண்டும். இப்படி எத்தனையோ ‘க்ளிஷே’க்கள் கமர்ஷியல் சினிமாவுலகில் பின்பற்றப்படுகின்றன.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உட்படப் பல மொழிகளில் அவற்றின் அளவு சில சதவிகிதத்தில் வித்தியாசப்படுகிறது.
நல்லவேளையாக, அப்படியொரு கமர்ஷியல் சினிமாவாக ‘சூர்யாஸ் சாட்டர்டே’ இல்லை. அதனால், அப்படிப்பட்ட அம்சங்களை எதிர்பார்ப்பவர்கள் இப்படத்தில் ஏமாற வாய்ப்புண்டு.

அதேநேரத்தில், ‘சும்மா ஜிவ்வுன்னு தலை கிறுகிறுக்கிற மாதிரி கொஞ்சம் வித்தியாசமான கமர்ஷியல் படம் பார்க்கணும்’ என்பவர்களுக்கு ஏற்ற படம் இது. அந்த வகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு அப்படியொரு திரையனுபவத்தை சூர்யா’ஸ் சாட்டர்டே தந்திருக்கிறது.

ஏற்கனவே சொன்னது போல கதை, திரைக்கதை, வசனத்தில் இயக்குனர் விவேக் ஆத்ரேயா காட்டியிருக்கும் கவனச் செறிவு அதனைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. என்னதான் க்ளிஷே காட்சிகள் உண்டென்றாலும், மிகச்சில இடங்களில் திருப்பங்களைப் புகுத்தி நம்மை ‘வாவ்’ சொல்ல வைக்கிறது திரைக்கதை.

முரளி ஜி இப்படத்தின் ஒளிப்பதிவாளர். திரையில் எல்லா வண்ணத்தையும் கொட்டாமல், கதையின் மைய இழை திரிந்துவிடாமல் இருக்கும் வகையில் சில வண்ணங்களை மட்டும் அதிகப்படுத்திக் காட்டியிருக்கிறார். அந்த உத்தி நிறையவே பலன் தந்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் இக்கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்ல ‘வாய்ஸ் ஓவர்’ உத்தியைப் பயன்படுத்தி இருக்கிறார். அதனால், கிளைமேக்ஸ் காட்சியைக் காட்டி திரைக்கதை தொடங்குகிறது. இடைவேளை கூட அதைப் பயன்படுத்தியே சொல்லப்படுகிறது.

அதனால், அடுத்தது என்ன என்று கேட்கும் வகையிலேயே முழுப்படமும் நகர்கிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் 50 நிமிடங்கள் படம் ஓடுவதை நாம் மறக்க, படத்தொகுப்பாளர் வெகுவாகப் போராடியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நாயகன், வில்லனின் உலகத்தைக் காட்ட, அவர்களது வசிப்பிடங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் கலை இயக்குனர் ஜி.எம்.சேகர்.

பொதுவாகத் தெலுங்கு படங்களில் சண்டைக்காட்சிகள் வந்தாலே ரத்த வாடை வீசும். இதில் அந்த அளவு வழக்கத்தை விடக் குறைவு என்பது ஆறுதல் தரும் விஷயம். அதற்காக ரியல் சதீஷ், ராம் – லட்சுமணுக்கு ஒரு விருது கொடுக்கலாம்.

இன்னும் டிஐ, விஎஃப்எக்ஸ், காஸ்ட்யூம் டிசைன், ஒலி வடிவமைப்பு என்று பாராட்டப் பல விஷயங்கள் உண்டு.

‘உண்மையான கோபம் பயத்தை கொடுக்கக் கூடாது; நாலு பேருக்கு தைரியத்தை கொடுக்கணும்’ என்பது போன்ற வசனங்கள் இப்படத்துடன் ஒன்ற வைக்கின்றன. தமிழில் வசனங்கள் எழுதியவர் பெயரை கவனிக்கவில்லை.

அது மட்டுமல்லாமல், தெலுங்கு எழுத்துகள் வருமிடங்களில் கூடக் கவனமாகத் தமிழை விஎஃப்எக்ஸில் புகுத்தியிருப்பது ’இது டப்பிங் படம்’ என்ற எண்ணத்தை மட்டுப்படுத்துகிறது. அப்படி நாம் உணர இன்னொரு காரணமாக இருக்கிறது, எஸ்.ஜே.சூர்யாவின் இருப்பு.

இந்த படத்தின் நாயகன் நானி என்றபோதும், அவரது பாத்திரத்திற்கு தரப்பட்ட முக்கியத்துவம் இதுவரை தெலுங்கு சினிமா காணாதது. பின்பாதிக் காட்சிகளில் மனிதர் பின்னிப் பெடலெடுத்து இருக்கிறார். இனி அவரைத் தமிழ் சினிமாவில் காண்பது அபூர்வம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது எஸ்.ஜே.சூர்யாவின் பெர்பார்மன்ஸ்.

அதேபோல, மிகச்சில காட்சிகளில் வந்தாலும் ‘அண்டரேட்டட்’ ஆக வந்து அசரடித்திருக்கிறார் முரளி சர்மா. அவருடன் வரும் அஜய் மற்றும் சுபலேக சுதாகருக்கு அந்த அளவுக்கு ‘ஸ்கோப்’ தரப்படவில்லை.

அதேநேரத்தில், எஸ்.ஜே.சூர்யா உடன் சுற்றும் ஹர்ஷவர்தன் அசத்தியிருக்கிறார். ‘அலா வைகுண்டபுரம்லோ’ படத்திற்குப் பிறகு இது அவருக்குப் பெயர் சொல்லும் வாய்ப்பு. சாய்குமார், அதிதி பாலன் பாத்திரங்களும் சரியான அளவில் திரைக்கதையில் இடம்பெற்றுள்ளன.

முன்பாதியில் காமெடியும் வில்லத்தனமும் கலந்து தோன்றும் அஜய் கோஷ் உட்படச் சிலரது நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படியாக உள்ளது.
பிரியங்கா மோகன் இதில் வழக்கமான தெலுங்கு சினிமா நாயகியாக வந்து போகவில்லை. இப்படிப்பட்ட பாத்திரம் மிக அரிதாகத்தான் வாய்க்கும். அது தனக்குக் கிடைத்திருப்பதை உணர்ந்து நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தின் நாயகன் நானி, ஒரு கமர்ஷியல் படம் எந்த மீட்டரில் இருந்தால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பதை உணர்ந்து திரையில் தோன்றியிருக்கிறார். அதற்காவாவது நம்மூர் நாயகர்கள் இப்படத்தைக் காண வேண்டும்.

தமிழில் ‘நான் மகான் அல்ல’, ‘மீகாமன், ‘பாண்டியநாடு’, ‘இரும்புத்திரை’ போன்ற ஒரு சில படங்கள் ஏற்கனவே அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன. 2000களில் ’தில்’, ‘தமிழ்’ போன்றவை அந்த மீட்டரில் அமைந்திருக்கின்றன.

கமர்ஷியல் படங்களில் வருகிற விஷயங்கள் செயற்கையானவை, யதார்த்தத்தில் இருந்து பல கிலோமீட்டர் விலகியவை என்றபோதும், திரையில் அதனைக் காணும்போது நாம் ஒன்றிப்போக வேண்டுமென்பது மிகப்பெரிய சவால். நானி இதில் அதனைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார். அது மிகப்பெரிய விஷயம்.

வித்தியாசம் உண்டு!

‘சோகுல பாலம்’ பகுதியில் வசிப்பவர்கள் என்று சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, நலிந்த நிலையில் வாழும் சிலரைக் காட்டுகிறது ‘சூர்யாஸ் சாட்டர்டே’. அந்தக் காட்சிகள், நமக்கு ‘ஷோலே’ படம் பார்த்த எபெக்டை தான் தருகிறது.

அதையும் மீறி, ‘மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே அநீதியை எதிர்ப்பது சாத்தியம்’ என்று உரக்கச் சொன்ன வகையில் வித்தியாசப்படுகிறது இப்படம்.

கமர்ஷியல் படம் என்பதால் எதிர்காலத்தில் ‘லொள்ளு சபா’ பாணியில் இதனைக் கிண்டலடிக்கத் தேவையான பல விஷயங்கள் திரைக்கதையில் கொட்டிக் கிடக்கின்றன. அப்படிக் கிண்டலடிக்கும் அளவுக்கு இந்தப் படம் புகழ் ஈட்டும் என்பதே இந்த ரசிகனின் முன்கணிப்பு.

அந்த விஷயங்களைச் சிலர் குறைகளாகவும் எண்ணலாம். அப்படிப்பட்டவர்கள் தவிர்த்து மற்றனைவரும் குடும்பத்தோடு இப்படத்தைக் காணலாம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, வித்தியாசமானதொரு கமர்ஷியல் படம் தந்த இயக்குனர் விவேக் ஆத்ரேயா மற்றும் ‘சூர்யாஸ் சாட்டர்டே’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விமர்சனம்: ஃபுட்டேஜ்!

அதர்மக்கதைகள்: விமர்சனம்!

பங்குச் சந்தையில் புதிய உச்சம் : இன்று கவனம் செலுத்தும் நிறுவனங்கள்!

எத்தனை கோடி கொடுத்தா என்ன? பான்மசாலா விளம்பரம் வேண்டாம் : நடிகர் மாதவன் முடிவின் பின்னணி!

தங்கம் விலை சரிவு…நகை பிரியர்கள் மகிழ்ச்சி!

ரூ.3.6 கோடி கடன்: வட்டியுடன் செலுத்த நடிகர் விமலுக்கு உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel