சூர்யா கதாநாயகனாக நடிக்கும் 42 ஆவது படத்தின் தொடக்க விழா நேற்று (ஆகஸ்டு 21) காலை நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.
பாலா இயக்கும் வணங்கான் படத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது.
இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு, சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.
தொடக்கத்தில் அந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருந்தது. அதன்பின் தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.
ஆனால், கடைசிநேர மாற்றமாக, யுவி கிரியேசன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஆகிய இரு நிறுவனங்களுமே இணைந்து தயாரிக்கட்டும் என முடிவாகியுள்ளது. இதனால் இருவருமே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தெலுங்கு மார்க்கெட்டும் சூர்யாவுக்கு ஏறிக் கொண்டே போவதால் தெலுங்கு தயாரிப்பாளரையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
சென்னை இராமாவரத்திலுள்ள அகரம் ஃபவுண்டேசன் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற தொடக்கவிழாவில் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவாளர் வெற்றி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தப் படத்தில் இந்தி நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
–இராமானுஜம்
பாலா – சூர்யா கூட்டணி: வெளியான படத் தலைப்பு!