இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான ‘அமரன்’ திரைப்படம் நடிகர்கள் சூர்யா, சிவக்குமார், நடிகர் ஜோதிகா அகியோருக்கு தனியாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த இந்த ஸ்டார் குடும்பம் படக்குழுவை பாராட்டியுள்ளது.
இதுகுறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘ அமரன் மிகவும் பிடித்தது. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் ரெபெக்காவின் உண்மையான உலகத்தைக் காண முடிந்தது. படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களின் இதயத்தின் ஒரு பகுதியை இப்படத்திற்காக அர்ப்பணித்துள்ளனர் என்றே தெரிகிறது’ எனப் பாராட்டியுள்ளார்.
நடிகை ஜோதிகா, ‘ ‘அமரன்’திரைப்படத்திற்கும் படக்குழுவிற்கும் சல்யூட். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, எப்படியான ஒரு வைரத்தை படைத்துள்ளீர்? ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இடம்பெறும் மற்றொரு கிளாசிக் திரைப்படம். சிவகார்த்திகேயன் இந்தக் கதாபாத்திரத்திரமாக மாறுவதற்கு எத்தகைய உழைப்பை தந்திருப்பார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சாய் பல்லவி, எப்பேற்பட்ட நடிகை நீங்கள்? அந்த கடைசி 10 நிமிடத்தில் என் மூச்சே நின்றுவிட்டது. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.
மேஜர் முகுந்த் வரதராஜன், எங்களை நீங்கள் தற்போதும் பார்த்துக்கொண்டிருப்பீர்கள், அனைத்து குடிமக்களும் உங்களின் வீரத்தைக் கொண்டாடுகின்றனர். எங்களின் குழந்தைகளை உங்களைப் போலவே பெருமைமிக்க பிள்ளைகளாக வளர்த்தெடுக்க விரும்புகிறோம்’ எனத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
’அமரன்’ திரைப்படத்தில் புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், உமைர், கீதா கைலாசம் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சாய் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டீபன் ரிட்சர் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃப்லிம்ஸ் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் சிவகார்த்திகேயனின் திரை வாழ்விலேயே அதிகமாக வசூல் செய்த படமாக வசூல் ரீதியாக பல சாதனைகளைப் படைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா