சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சூர்யா நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை எதிர்கொண்ட நிலையில் 2001 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படம் சிறந்த நடிகருக்கான அங்கீகாரத்தை சினிமா வட்டாரத்தில், பொதுவெளியில் பெற்று தந்தது.
இதுவரை இவர் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றி தோல்விகளை சம அளவில் எதிர்கொண்டு வந்தாலும் இவர் கதாநாயனாக நடித்த படங்களின் வணிக மதிப்பு உயர்ந்து கொண்டுவருகிறது.
2007 ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு வரலாற்று புனைவுக்கதையாகும். அப்படத்தில் மன்னர் காலம், நவீனம் என இரண்டு காலங்களை கொண்ட திரைக்கதையில் சூர்யா நடித்திருந்தார்.
அதற்கு பின் தற்போது 1500 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை மைய திரைக்கதையாக கொண்டு உருவாகிவரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இவரது திரையுலக வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் கங்குவா தயாரிக்கப்படுகிறது.
அகில இந்திய, மற்றும் சர்வதேச சினிமா சந்தையில் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜீத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் குழலில் அந்த பட்டியலில் இடம்பிடிக்கும் முயற்சி கங்குவா படம் அறிவிக்கப்பட்டது முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
‘கங்குவா’ சூர்யாவின் 42-வது படமாகும். அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை திஷா பதானி, மற்றும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கின்றனர்.
வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
10 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா 5 விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் இப்படத்தின் வரலாற்று கால காட்சிகள் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகும் என்ற அறிவிப்புடன் சூர்யா கைகளில் தழும்புகளுடன் வாளேந்திய படி இருக்கும் போஸ்டர் ஒன்றைப் படக்குழு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இதையடுத்து கிளிம்ப்ஸ் வீடியோவை உருவாக்குவதற்காக சில வாரங்களுக்கு முன்னர் சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள ஈவிபி ஃபிலிம்சிட்டியில் 1500 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்துக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடந்தது.
இதில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஜிம்பாய்ஸ் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சூர்யாவின் பிறந்த நாளான இன்று ‘கங்குவா’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று நள்ளிரவு 12:01 மணிக்கு வெளியிட்டிருக்கிறது படக்குழு.
அதில் காடு, மலை தாண்டி வீரர்கள் மடிந்திருக்கும் நிலையில், ஒருவரை சூர்யா கொல்லும் காட்சியுடன் உடன் கங்குவா கிளிம்ப்ஸ் தொடங்குகிறது சிறுத்தை சிவா பாணியில் மூச்சு விடாமல் பேசும் வசனம், சூர்யாவின் தோற்றம் பிரம்மிக்கவைத்து கவனம் ஈர்க்கிறது.
இறுதியில் நலமா என சூர்யா கேட்கும் வித்தியாசமான தொனியுடன் முடிகிறது. கிளிம்ப்ஸ் வீடியோ முழுக்க கிராபிக்ஸ் பிரமாண்டம் தெரிகிறது.
இராமானுஜம்
“உக்ரைனுக்கு பலனளிக்காத மேற்கத்திய நாடுகளின் ஆதரவு”: புதின்
பழங்குடியின மாணவர்கள் வெளிநாட்டில் பயில உதவித்தொகை!