மம்முட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள காதல் தி கோர் திரைப்படம் பார்த்துவிட்டு ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். suriya congrats to film kaathal the core
தி கிரேட் இண்டியன் கிச்சன் திரைப்படத்தினைத் தொடர்ந்து மலையாள திரையுலகின் பிரபல இயக்குநர் ஜியோ பேபியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் தி கோர்’.
மம்முட்டி மற்றும் ஜோதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த 24ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அனைத்து தரப்பில் இருந்தும் தொடர்ந்து அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
’இந்தாண்டின் சிறந்த திரைப்படம்’ என்று நடிகை சமந்தா நேற்று பாராட்டு தெரிவித்த நிலையில், தற்போது ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யாவும் காதல் தி கோர் திரைப்படம் குறித்து மனம் திறந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
அழகான படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”அழகான மனங்கள் ஒன்றிணைந்தால், ’காதல் – தி கோர்’ போன்ற திரைப்படங்கள் நமக்கு கிடைக்கும். என்ன ஒரு முற்போக்கான படம்.
நல்ல சினிமா மீது மம்மூட்டி சார் கொண்டுள்ள காதல்; சைலண்ட் ஷாட்களை கூட பெரிய அளவில் பேச வைத்துள்ள இயக்குநர் ஜியோ பேபி; யாரும் புரிந்துக்கொள்ளாத உலகத்தை அழகாக நமக்கு காட்டிய எழுத்தாளர்கள் ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் ஸ்கரியா;
மேலும், அன்பு என்றால் என்ன என்பதை மிக உயர்வாக காட்டி அனைத்து இதயங்களையும் வென்ற என் ஓமனா ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!” என்று சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.
Brimming with gratitude for @Suriya_offl sir's thoughtful review of #KaathalTheCore 🙏🏻 Thank you, sir, for your love & support! This review means a lot to us.#Mammootty #Jyotika #JeoBaby #SuriyaSivakumar @mammukka #Suriya pic.twitter.com/KYTa5RPEVt
— MammoottyKampany (@MKampanyOffl) November 27, 2023
இதனையடுத்து படத்தை தயாரித்துள்ள மம்முட்டி கம்பனி, சூர்யாவின் வாழ்த்தை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளது.
அதில், “காதல் – தி கோர் திரைப்படம் பற்றிய சூர்யா சாரின் சிந்தனைமிக்க விமர்சனத்திற்கும், அன்பிற்கும் நன்றி. உங்களது வாழ்த்து பெரும் அர்த்தத்தை சேர்த்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை போல் அழுதேன்!
முன்னதாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியும் உணர்ச்சிப்பூர்வமாக காதல் தி கோர் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
அவர், “ஜியோ பேபி, நீங்கள் எங்கள் ஒரு கதாபாத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளீர்கள்! மமூக்கா, நீங்கள் தொடர்ந்து நடிப்பால் ஆச்சரியப்படுத்துகிறீர்கள், நீங்கள் படம் நெடுக அனுபவித்த வலி, தனிமை, பயம் மற்றும் உங்களின் ஒவ்வொரு பார்வை என்னையும் ஆட்கொண்டது.
இரண்டாம் பாதியில் வந்த ‘எந்த தெய்வமே’ படத்தின் சிறந்த அம்சம். தியேட்டரில் ஒரு குழந்தை போல் அழுதேன். இசையும் பாடல் வரிகளும் மனதை வருடும் வகையில் இருந்தது. ஜோதிகா மேம், ஓமனாவாக எங்களது இதயத்தில் நீண்ட காலம் தங்கப் போகிறீர்கள். காதல் – தி கோர் படக்குழுவினருக்கு நன்றி” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் கருத்துப்படி, முதல்நாளில் உள்நாட்டு சந்தையில், ரூ.1.05 கோடி வசூலித்துள்ள இத்திரைப்படம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முறையே ரூ.1.25 கோடி மற்றும் ரூ.1.75 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி ஆட்சேபனை மனு தாக்கல்!
ஆட்சியர்களுக்கு ED சம்மன் அனுப்பிய வழக்கில் நாளை தீர்ப்பு!
suriya congrats to film kaathal the core