கருடன்: விமர்சனம்!

உதயசங்கரன் பாடகலிங்கம்

வழக்கமான கதை; சிறப்பான காட்சியாக்கம்!

சூரி கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் இடம்பெறுகின்றனர். இந்த தகவலே, ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியுள்ள ‘கருடன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பினைப் பெருகச் செய்தது. அதற்கேற்ப அப்படத்தின் ட்ரெய்லரும் வித்தியாசமான கோணத்தில் அவர்களைக் காட்டியது. தற்போது ‘கருடன்’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது.

’விடுதலை’ படத்திற்குப் பிறகு, சூரியை ஒரு வெற்றிகரமான நாயகனாக உயர்த்திப் பிடித்திருக்கிறதா ‘கருடன்’? வாருங்கள், பார்க்கலாம்!

கர்ணன் – துரியோதனன் நட்பு!

சென்னையிலுள்ள ஒரு பகுதியில் பரந்துவிரிந்த நிலம் இருக்கிறது. சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலமானது, தேனியில் உள்ள கோம்பையம்மன் கோயிலுக்குச் சொந்தமானது. அது சம்பந்தமான பட்டயம் ஒன்று, வங்கி லாக்கரில் கோயில் நகைகளுடன் இருக்கிறது. அதனைத் திருடி வருவதற்காக, நாகராஜ் (மைம் கோபி) என்பவரை அழைத்துப் பேசுகிறார் தமிழக அமைச்சர் ஒருவர் (ஆர்.வி.உதயகுமார்).
அமைச்சரின் உத்தரவையடுத்து, அப்பகுதி டிஎஸ்பி (சமுத்திரக்கனி) கோயில் நிர்வாகக் குழுவில் பொறுப்பு வகிக்கும் கருணா (உன்னி முகுந்தன்), ஆதி (சசிகுமார்) குறித்து விசாரிக்கத் தொடங்குகிறார்.

ஆதியும் கருணாவும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள். கருணாவின் குடும்பம் ‘ஜமீன்’ வம்சத்தைச் சார்ந்திருந்தாலும், தற்போது பெரிதாக வசதி இல்லை. ஊரார் மத்தியில் வெறுமனே பெயர் மட்டும் மிச்சமிருக்கிறது. அதனால், பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற வேட்கையுடன் இருக்கிறார் கருணா. ஆனால், அவரது பாட்டிக்கு (வடிவுக்கரசி) அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. நல்ல வாழ்வு வாழ்ந்தாலே போதும் என்றிருக்கிறார்.

லாரிகள் சிலவற்றுக்கு உரிமையாளராக இருந்துவரும் ஆதியின் கைகளில் கொஞ்சம் காசு புரள்கிறது. ஆனாலும், அவர் கருணாவிடம் கொண்டிருக்கும் நட்புக்கே முதலிடம் கொடுக்கிறார்.

இவர்களது இறுக்கமான நட்பையும் தாண்டி, கருணாவுக்கு ஒரு அரண் போல இருக்கிறார் சொக்கன் (சூரி). சிறு வயதில் கோயில் சத்திரத்தில் சாமியார்களோடு தங்கியிருந்தவரைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்தவர் கருணா. அதனால், அவர் மீதான விசுவாசம் மட்டுமே சொக்கன் மனதில் எப்போதும் உண்டு.

இந்தச் சூழலில், கருணாவின் பாட்டி இறந்து போகிறார். அவர் மரணத்திற்குப் பிறகு, அவர் வகித்த கோயில் நிர்வாகக் குழு தலைவர் பொறுப்பு யாருக்கு என்ற கேள்வி எழுகிறது. அப்போது, அது தனக்கு வேண்டும் என்கிறார் நாகராஜ் . அதனை கருணாவின் ஆதரவாளர்கள் எதிர்க்கின்றனர். முடிவில், தேர்தல் நடத்தப்படுகிறது. நாகராஜை எதிர்த்து நின்று வெற்றி பெறுகிறார் சொக்கன்.

அதன்பிறகு நாகராஜின் குயுக்திகளால் ஆதி – கருணா இடையே பிளவு முளைக்கிறது. கருணாவின் மனைவி (ரோஷிணி), மச்சான் (துஷ்யந்த்), மாமனார் (முத்துராமன்) ஆகியோர் அதற்குத் தூபம் இடுகின்றனர். அதனால் நாகராஜ் சொல்வதை ஏற்கும் மனநிலையை அடைகிறார் கருணா. ஆதியை எதிர்க்கத் துணிகிறார். கோயில் திருவிழாவின் போது அந்த மோதல் உச்சமடைகிறது.

வங்கியில் இருக்கும் நகைகளை எடுத்துவரச் செல்கிறார் சொக்கன். துணைக்கு ஆதியும் உடன் செல்கிறார். வழியில் அந்த வாகனத்தை மறித்து பட்டயத்தைப் பறிப்பதுதான் நாகராஜ் கும்பலின் திட்டம். ஆனால், வேறு வழியில் பயணித்து அதனைத் தவிடுபொடியாக்குகிறார் ஆதி.
இறுதியில், கோயிலில் வைத்து அந்த பட்டயத்தைத் திருட முயற்சிக்கின்றனர் நாகராஜின் ஆட்கள். அப்போது ஏற்படும் மோதலில், கருணாவின் மச்சான் கையை வெட்டிவிடுகிறார் சொக்கன்.

அதன்பிறகு என்னவானது? ஆதி – கருணா இடையேயான பிளவு பெரிதானதா? சொக்கனைக் கருணாவின் குடும்பம் என்ன செய்தது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

‘மகாபாரதம்’ கதையில் வரும் கர்ணன் – துரியோதனன் நட்பை லேசாக பிரதிபலிக்கிறது இக்கதை. ஆனால், இப்படத்தில் வரும் ஆதி, கர்ணா, சொக்கன் மூவருமே அவ்விரு பாத்திரங்களையும் கலந்துகட்டிய குணாதிசயங்களுடன் திரையில் தோன்றியிருக்கின்றனர். அதுவே இப்படத்தின் சிறப்பம்சம்.

அழுத்தமான பாத்திர வார்ப்பு!

சசிகுமார் நடித்த ஆதி, உன்னி முகுந்தன் நடித்த கருணா மற்றும் சூரியின் சொக்கன் பாத்திரங்களே இக்கதையின் மையப்புள்ளிகளாக உள்ளன. மூன்றும் மூன்று திசைகளில் அமைந்து ‘ஃ’ போன்ற உருவில் இக்கதையை நகர்த்திச் செல்கின்றன.

குறிப்பாக சசிகுமார், உன்னி முகுந்தன் பாத்திர வார்ப்பு அழுத்தமாக அமைந்திருப்பதால், முன்பாதியில் ஒரு காட்சியில் கூட நம்மால் கண்களை வேறுபக்கம் திருப்ப முடிவதில்லை. அதுவே அவர்களது நடிப்பு எப்படி அமைந்துள்ளது என்பதைச் சொல்லிவிடும்.

அப்பாவியா, அடப்பாவியா என்று சொல்ல முடியாத வகையில் இதில் சூரியின் பாத்திரம் அமைந்துள்ளது. உன்னி முகுந்தன் அதட்டியதும், ‘என்ன நடந்தது’ என்று அவர் விவரிக்கும் இடங்கள் தியேட்டரில் கைத்தட்டலை அள்ளுகின்றன.

ஷிவதா, ரோஷிணி, வடிவுக்கரசி, பிரிகிடாவை விட ஒருபடி ஜாஸ்தியாக திரையில் வந்து போயிருக்கிறார் சூரியின் ஜோடியாக நடித்துள்ள ரேவதி.

இவர்கள் தவிர்த்து சமுத்திரக்கனி, ஆர்.வி.உதயகுமார், மைம் கோபி, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ’வழக்கு எண்’ முத்துராமன், எஸ்.ஐ.சுப்புராஜாக நடித்தவர் என்று பலர் இதில் சிறப்பாகத் தங்களது பங்களிப்பைத் தந்துள்ளனர்.

ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவு, வண்ணமயமாக இக்கதையைக் காட்ட உதவியிருக்கிறது. அது, யதார்த்தமும் சினிமாத்தனமும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தாற்போல இருப்பது சிறப்பு.

கலை இயக்குனர் துரைராஜ், படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ், சண்டைப்பயிற்சியாளர் மகேஷ் மேத்யூ மற்றும் டிஐ, விஎஃப்எக்ஸ் குழுவினர், ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனையாளர் என்று பலரது பங்களிப்பு இதில் கனகச்சிதமாக அமைந்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையின் பாடல்கள் ஓகே ரகத்தில் அமைந்தாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறது. குறிப்பாக, இடைவேளை ‘ப்ளாக்’ ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.

இப்படத்தின் எழுத்தாக்கத்தினைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். வழக்கமான ஒரு கதை வித்தியாசமான திரைக்கதை ட்ரீட்மெண்டுடன் திரையில் விரியும் வகையில் அவரது எழுத்தாக்கம் அமைந்துள்ளது.

வன்முறை தேவையா?

‘கருடன்’ கதையில் பிளாஷ்பேக் ஆங்காங்கே சில ஷாட்களாக இடம்பெறுகிறது. அதில் கருணா, ஆதி, சொக்கன் மூவரையும் ஒரே வயதினராகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். போலவே, சொக்கனுக்கும் அவரது ஜோடியாக வரும் விண்ணரசி பாத்திரத்திற்கும் கூட பெரிய வயது வித்தியாசமில்லை.

ஆனால், பிளாஷ்பேக்கில் காட்டப்படுவதற்கு மாறாக சமகாலக் கதையில் அப்பாத்திரங்கள் காட்டப்பட்டிருப்பது அதிர்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சூரி – ரேவதி சம்பந்தப்பட்ட காட்சிகள் அந்த ’ஜெர்க்’கை அதிகப்படுத்துகின்றன.

பின்பாதியில் வரும் சண்டைக்காட்சிகளில் வன்முறை அதீதம். சில இடங்களில் குழந்தைகள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுவதாகக் காட்டியிருப்பது ரொம்பவே ‘ஓவர்’! அதனை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு பல கோரங்களைத் திரையில் நிகழ்த்த சிலர் முன்வந்தால் தியேட்டரில் எப்படி குடும்பத்தோடு அப்படங்களை ரசிக்க முடியும்?

’கேஜிஎஃப்’, ‘விக்ரம்’, ‘ஜெயிலர்’ பாதையில் அந்த உத்திதான் அதிக வசூலுக்கான யுஎஸ்பி என்று ‘கருடன்’ படக்குழு நினைத்ததா? தெரியவில்லை. முடிந்தவரை அதனைத் தவிர்த்திருந்தால், இன்னும் கொஞ்சம் ‘பீல்குட்’ எபெக்டை ஊட்டியிருக்கும் இப்படம். அது ‘ஜஸ்ட் மிஸ்’ ஆகியிருக்கிறது.

மற்றபடி, நல்லதொரு சினிமா கண்ட அனுபவத்தை நிச்சயம் ஊட்டும் இந்தப் படம். இதில் லாஜிக் மீறல்களைத் தேட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், தியேட்டரில் அமர்ந்திருக்கையில் அப்படியொரு எண்ணம் எழாத அளவுக்குச் சுவையான காட்சியாக்கத்தைக் கொண்டிருக்கிறது இந்த ’கருடன்’.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல்: டி.ஆர்.பாலு தகவல்!

சந்தைக்கு வந்த தாய்ப்பால்… எங்கே போகிறது தமிழ்நாடு? ஷாக் ரிப்போர்ட்!

“குமரியில் மோடி போட்டோஷூட்” – பிரகாஷ்ராஜ் தாக்கு!

ஸ்டாலின் இல்லாமல் டெல்லியில் ’இந்தியா’ கூட்டம்: அஜெண்டா என்ன?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts