‘த்ருஷ்யம்’ நினைவிருக்கிறதா?
கமல்ஹாசன், கவுதமி, ஆஷா சரத் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படம் நினைவிருக்கிறதா? அதனைப் பார்த்தவர்களுக்கு, அதன் மலையாள மூலமான ‘த்ருஷ்யம்’ காணும் விருப்பம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியான ‘த்ருஷ்யம் 2’ கண்ட பிறகு, அதில் வரும் ஜார்ஜ் பாத்திரம் மீது மலைப்பு பெருகியிருக்கும். அப்படத்தின் மூன்றாம் பாகம் அடுத்த ஆண்டு வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.
சரி, அதற்கும் தற்போது வெளியாகியிருக்கும் ‘கருடன்’ படம் குறித்த விமர்சனத்திற்கும் என்ன சம்பந்தம்? இந்த படம் பார்த்து முடித்தபிறகு, நிச்சயமாக உங்களுக்கு அந்த படம் நினைவுக்கு வரும். அது ஏன்?
உச்ச நட்சத்திரங்களின் மோதல்!
ஹரீஷ் மாதவ் (சுரேஷ் கோபி) ரொம்பவே நேர்மையான, மிகச்சிறப்பாக விசாரணை நடத்தக்கூடிய ஒரு காவல் துறை அதிகாரி. இளம்பெண் தெரசா (சைதன்யா பிரகாஷ்) பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான வழக்கை விசாரிக்கும் பொறுப்பு அவரிடம் தரப்படுகிறது.
கட்டுமானப்பணி நடைபெறும் இடமொன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அந்த நேரத்தில் அங்கு காவலாளி இல்லை. பணியை முடித்துச் சென்ற கட்டுமானத் தொழிலாளர் சலாம் தற்செயலாக அங்கு வந்ததாலேயே, அந்த மர்மநபரால் தெரசா கொலையாவது தடுக்கப்பட்டிருக்கிறது. போலவே, கலைவிழா ரிகர்சலில் பங்கேற்றுவிட்டு தெரசா வரும் நேரமும் குற்றவாளிக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்க வேண்டுமென்பதை விசாரணையில் அறிகிறார் ஹரீஷ்.
ஆனாலும், எத்தனை கோணத்தில் விசாரணையை மேற்கொண்டாலும் அந்த வழக்கில் தீர்வு கிட்டுவதில்லை. ஒருகட்டத்தில் குற்றவாளியின் டிஎன்ஏவை வைத்து ஏன் விசாரிக்கக் கூடாது என்ற எண்ணம் ஹரீஷை தொற்றுகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதும் டிஎன்ஏ சோதனைக்குத் தந்த மாதிரிகளுடன் குற்றவாளியின் டிஎன்ஏ ஒப்பிடப்படுகிறது. அதில், ஹைதராபாத்தில் இருக்கும் சுதேஷ் என்பவருடன் அது ஒத்துப்போவது தெரிய வருகிறது. அவரை விசாரிக்கையில், தனது தாத்தாவின் தம்பி வழி உறவினர் ஒருவர் கேரளாவில் இருப்பதாகச் சொல்கிறார். அந்த நபர், தெரசா படிக்கிற கல்லூரியில் பேராசிரியராக இருந்துவரும் நிஷாந்த் (பிஜு மேனன்).
இளம் மனைவி, கைக்குழந்தை என்று ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்கிறார் நிஷாந்த். அவரைத் தீவிரமாகக் கண்காணிக்கும் போலீசார், அவரது டிஎன்ஏவை சோதிக்கும் ஆதாரங்களைக் கைப்பற்றுகின்றனர். சோதனை முடிவில், குற்றவாளியின் டிஎன்ஏவோடு நிஷாந்தின் டிஎன்ஏ நூறு சதவிகிதம் பொருந்துவது உறுதி செய்கின்றனர். அது மட்டுமல்லாமல், தெரசா கடத்தப்பட்டபோது நிஷாந்த் தங்களுடன் இல்லை என்று அவரது நண்பர்களும் சாட்சியம் அளிக்கின்றனர். அதன்பிறகே, அவர் கைது செய்யப்படுகிறார். நீதிமன்ற விசாரணையின் முடிவில், அவருக்குச் சிறை தண்டனை வழங்கப்படுகிறது.
ஏழாண்டு சிறை வாசத்திற்குப் பிறகு வெளியே வரும் நிஷாந்தை அவரது மனைவி ஏற்பதில்லை. சுற்றியிருப்பவர்களும் ஏளனமாக நோக்குகின்றனர். அந்தச் சூழலில், தனது வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்று கோரி அவர் உயர்நீதிமன்றத்தை நாடுகிறார். அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதே, சிறையில் இருந்தவாறே நிஷாந்த் சட்டம் படித்து முடித்தது தெரிய வருகிறது.
தனது வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் அனைத்தும் நம்பகத்தன்மை அற்றது என்ற வாதத்தை அவர் முன்வைக்கிறார். அதில் உண்மை இருப்பதாகக் கருதும் நீதிபதி, நிஷாந்த் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்குகிறார். கூடவே, அவருக்கு வழங்கப்படும் நஷ்ட ஈட்டின் ஒருபகுதியை ஹரீஷ் வழங்க வேண்டுமென்றும் உத்தரவிடுகிறார்.
அது, ஹரீஷின் குடும்பத்தை ஸ்தம்பிக்க வைக்கிறது. காரணம், சரியாக அந்த காலகட்டத்தில்தான் அவர் விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். ஓய்வூதிய பணத்தைக் கொண்டு, தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார். அனைத்துக்கும் மேலாக, தான் மேற்கொண்ட விசாரணை தவறு என்று உலகமே சொல்வதை ஹரீஷால் கொஞ்சம் கூட ஏற்க முடியவில்லை.
மிக முக்கியமாக, உடனடியாக நீதிமன்றத்தை அணுகாமல் ஏழாண்டு இடைவெளிக்குப் பிறகு நிஷாந்த் அந்த வழக்கைக் கையிலெடுத்தது ஏன் என்ற யோசனை அவரது மனதைக் குடைகிறது.
நிஷாந்த் குற்றவாளியா இல்லையா? அப்படியானால், அந்த வழக்கில் சாட்சியங்கள் பிறழ்ந்தது எப்படி? இந்த கேள்விகளுக்கு விறுவிறுப்பான காட்சிகளின் துணையோடு பதில் சொல்கிறது ‘கருடன்’.
முன்பாதி வேகமாகவும், பின்பாதி சற்று மெதுவாகவும் நகரும் இந்த திரைக்கதையில் ஹரீஷ், நிஷாந்த் பாத்திரங்களில் சுரேஷ் கோபி, பிஜு மேனன் என்ற இரு உச்ச நட்சத்திரங்கள் நடித்திருப்பதுதான் ‘கருடனின்’ சிறப்பு. இருவரும் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் நிச்சயம் அவரது ரசிகர்களைக் குதூகலப்படுத்தும்.
சுரேஷ்கோபியின் கம்பேக்!
அறுபதைத் தொட்டபிறகும் மம்முட்டி, மோகன்லால் போல நம்மூர் கமலும் ரஜினியும் தொடர்ந்து ஹிட் படங்கள் தந்து வருகின்றனர். அக்கட தேசத்து பாலகிருஷ்ணா கூட ‘பகவந்த் கேசரி’யில் சொல்லி அடித்திருக்கிறார். இந்த சூழலில், தன் பங்குக்கு கருடனில் அதகளம் செய்திருக்கிறார் சுரேஷ்கோபி.
தொண்ணூறுகளில் வெளியான கமிஷனர், தி சிட்டி, பத்ரம் படங்களில் சுரேஷ்கோபி நடிப்பைப் பார்த்து சூடேறிப்போன ரசிகர்களுக்கு ’கருடன்’ நிச்சயம் விருந்தாக அமையும். இதில் அவர் கேமிரா பார்த்து ’ஆங்கில பஞ்ச்’கள் உதிர்ப்பதைக் குறைத்திருப்பதையும் ஆக்ஷன் காட்சிகளை முற்றிலுமாகத் தவிர்த்திருப்பதையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அந்த வகையில், சுரேஷ்கோபியின் ‘கம்பேக்’ படம் இது.
பிஜு மேனனைப் பொறுத்தவரை இது இன்னொரு வெற்றிப் படம். இமேஜ் பற்றிக் கவலைப்படாமல், அந்த பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைத் தந்திருக்கிறார்.
அபிராமி, திவ்யா, சைதன்யா ஆகியோர் உட்பட இதில் வரும் பெண் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் குறைவே. தலைவாசல் விஜய், சித்திக், ஜகதீஷ், ஜெயன் சேர்தலா, மேஜர் ரவி, திலேஷ் போத்தன், தினேஷ் பிரபாகர், நிஷாந்த் சாகர் என்று பெரும்பட்டாளமே இதில் நடித்துள்ளது.
இருளும் ஒளியும் சரிசமமாக இருக்கும் வகையில் ஒவ்வொரு பிரேமையும் வடிவமைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் அஜய் டேவிட் கச்சப்பள்ளியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அவரது திறன்மிகு பணியால், நம்மால் திரையை விட்டுக் கண்களை நகர்த்த முடிவதில்லை. அனீஸ் நாடோடியின் கலை இயக்கம் அதற்குப் பேருதவி செய்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய், தனது பேருழைப்பைக் கொட்டி முன்பாதிக் காட்சிகளில் விறுவிறுப்பைக் கூட்டுகிறார். அதேநேரத்தில், பின்பாதி பின்னணி இசையில் ஷாரூக்கானின் டான், மிஷன் இம்பாசிபிள் உட்பட நிறைய படங்களின் சாயல் தென்படுகிறது. அதனைத் தவிர்த்திருக்கலாம்.
சீராகக் கதை நகர உதவியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங். இசை மற்றும் ஒளிப்பதிவோடு இணைந்து விறுவிறுப்பு கூட்டும் முயற்சியில் அவரது பங்களிப்பும் கணிசம்.
’அஞ்சாம் பதிரா’ படத்தை விறுவிறுப்பான த்ரில்லர் ஆக்கிய மிதுன் மேனுவல் தாமஸ், இதற்குத் திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். அதற்காக, எம்.ஜினேஷின் கதையை மூலமாகக் கொண்டிருக்கிறார்.
சுரேஷ்கோபியின் ரசிகர்கள் மகிழும்படியாக திரைக்கதையில் ஹீரோயிசத்திற்கு இடம் தந்தவர், லாஜிக் மீறல்கள் இல்லாமல் ஒரு த்ரில்லர் அமையுமாறு கவனம் பாய்ச்சியிருப்பது சிறப்பு. அதேநேரத்தில், சுரேஷ்கோபியும் பிஜு மேனனும் நேருக்குநேர் சந்திக்கும் கிளைமேக்ஸ் காட்சியில் தனது எழுத்தில் வெளிப்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியிருக்கிறார்.
இயக்குனருக்கு சபாஷ்!
இந்த படத்தை புதுமுக இயக்குனர் அருண் வர்மா இயக்கியுள்ளார். முதல் படம் என்ற எண்ணமே எழாத வகையில், முதல் பிரேம் முதல் கடைசி வரை செறிவானதொரு காட்சியனுபவத்தைப் பெற வைத்திருக்கிறார். இரண்டு பிரதான பாத்திரங்களுக்கு இடையிலான ‘டக் ஆஃப் வார்’ தான் திரைக்கதையாக விரிகிறது என்றபோதும், இதர பாத்திரங்களுக்குத் தேவையான அளவுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்.
இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் என்றபோதும், பாதிக்கப்பட்ட பெண்ணை அரை நிர்வாணமாகவோ, கோரமாகவோ காட்டாதது ஆறுதல். அந்த பெண்ணின் தந்தை பாத்திரத்தை மட்டுமே காட்டி, நம்முள் சோகத்தை ஊட்டியிருப்பது அருமையான உத்தி.
’கருடன்’ பார்க்கும் எவர்க்கும், உண்மையிலேயே அந்த குற்றத்தைச் செய்தது யார் என்ற கேள்வி எழும். அதுவே இயல்பு. அதற்கேற்றவாறு, கிளைமேக்ஸில் பல்வேறு திருப்பங்களை முன்வைக்கும் திரைக்கதையைக் கொஞ்சமும் சொதப்பாமல் காட்சிப்படுத்தியிருப்பதற்குத் தனியாக ஒரு ‘சபாஷ்’ சொல்ல வேண்டும்.
இதற்கு மேல் சொல்லப்படும் தகவல்கள் ‘ஸ்பாய்லராக’ அமையும் என்பதால், படம் பார்க்காதவர்கள் இந்த பத்தியைப் படிக்க வேண்டாம். மோகன்லாலின் ‘த்ருஷ்யம் 1 & 2’வையும், வினீத் சீனிவாசனின் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ படத்தையும் நினைவூட்டுகிறது இந்த ‘கருடன்’. ’த்ருஷ்யம்’ படத்தில் ஒரு நாயகனின் குயுக்திகளை ரசித்த நமக்கு, அதே இடத்தில் ஒரு வில்லன் இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்ற யோசனை நிச்சயம் வந்திருக்கும். அதற்கு விடையளித்திருக்கிறது இந்த ‘கருடன்’.
இன்ஸ்பிரேஷனுக்கும் காப்பிக்குமான வித்தியாசம் தெரியாத சூழலில், ஒரு படம் நமக்கு நல்லதொரு காட்சியனுபவத்தை வழங்குகிறதா என்று நோக்குவதே சாலச் சிறந்தது. அதனை நூறு சதவிகிதம் தந்திருக்கிறது இந்த ‘கருடன்’!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
‘அவங்க வாழட்டும் விடுங்க…’- பிக் பாஸ் பிரதீப் வேண்டுகோள்!
கொடநாடு வழக்கு : எடப்பாடிக்கு நீதிமன்றம் விலக்கு!