இயக்குநர் லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அவரை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இன்று (ஜனவரி 20) உத்தரவிட்டுள்ளது.
பிரபல ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கிய, ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி அதில் இடம்பெற்றிருந்த நிலையில் நாடு முழுவதும் பலத்த சர்ச்சை எழுந்தது.
இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்டதாக கூறி இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக டெல்லி, உத்தரகாண்ட் உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்து அமைப்புகளின் சார்பில் லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, லீனா மணிமேகலையை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும், அவரது தயாரிப்பு நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டும் சர்ச்சைக்குரிய போஸ்டர் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் தன் மேல் பதியப்பட்ட வழக்கை எதிர்த்து லீனா மணிமேகலை உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவை தாக்கல் செய்தார். அதில் லுக்அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு டெல்லி உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், லீனா மணிமேகலையின் கோரிக்கையை ஏற்று அவரை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவருடைய மனு தொடர்பான வாதத்திற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்ட டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
”அவமானப்படுத்திவிட்டார் கலெக்டர்” -முதல்வர் வரை புகார் செய்த மத்திய அமைச்சர் முருகன்
கார் பேனட் மீது சிக்கிய நபர்: ஒரு கி.மீ. இழுத்துச் சென்ற பெண்!