மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் சூப்பர் ஸ்டாரின் ’படையப்பா’ – எப்போ தெரியுமா?

Published On:

| By indhu

Superstar's 'Padayappa' to be re-released - Do you know when?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘படையப்பா’ படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக அப்படத்தின் இணை தயாரிப்பாளர் தேனப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் ரீ-ரிலீஸ் படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, திரைப்படங்களை ரீ-ரிலீஸ் செய்வதில் தமிழ் திரையுலகினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வசூல் சாதனையை குவித்த படம் ‘படையப்பா’. ரஜினி காந்த், சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், லட்சுமி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார்.

படையப்பா படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்வது தொடர்பாக அப்படத்தின் இணை தயாரிப்பாளர் தேனப்பன் பேசியுள்ளார்.

அவர் விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ரஜினி சார் எப்பவுமே ஒரே மாதிரிதான். அன்னைக்கு பார்க்கும்போது எப்படி இருந்தாரோ அதேமாதிரி தான் இப்பவும் எளிமையாக இருக்கிறார். அவர் மனசு எப்பவுமே மாறாது.

யாரா இருந்தாலும் எழுந்து நின்னு வரவேற்கிறது…உபசரிக்கிறது… என எல்லாமே அவர்கிட்ட இருந்து கத்துக்கவேண்டிய விஷயங்கள். இதனால் தான் அவர் 40 வருடங்களுக்கு மேலாகவும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்.

நான் ‘படையப்பா’ ரீ-ரிலீஸ் பற்றி பேசியபோதும் ரொம்ப இனிமையாக வரவேற்று எளிமையாக பழகினார். படையப்பா திரைப்படம் இதற்கு முன், ஒருமுறை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது மெஹா ஹிட் அடித்த திரைப்படங்களின் வசூலை படையப்பா படம் ப்ரேக் பண்ணிடுச்சு.

இதுக்கு காரணம், ரஜினி சாரோட நடிப்பும், ஸ்டைலும், கே.எஸ்.ரவிக்குமாரோட அட்டகாசமான இயக்கமும் தான். அதனால், மறுபடியும் அந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம்.

ஆனால், ஒரு வருத்தம் உள்ளது. இந்த படத்தில் நடித்த சிவாஜி, மணிவண்ணன், செளந்தர்யா யாருமே இப்போ இல்ல. அங்களோட சிறப்பான நடிப்பும் படத்தின் வசூலுக்கு ஒரு காரணம்.

3 பேரோட இழப்பு திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்புதான். இவங்க உயிரோட இருந்திருந்தா, ரீ-ரிலீஸின்போது, மக்கள் இந்த படத்தை கொண்டாடுவதை பார்த்து மிகவும் மகிழ்ந்திருப்பார்கள்.

ஆனால், ‘படையப்பா’ ரீ-ரிலீஸ் ஆனா புதுப்படம் மாதிரிதான் வசூலை கொடுக்கும். சவுண்ட், பிக்சர்ன்னு இப்போது இருக்கின்ற டெக்னாலஜிக்கு ஏத்தமாதிரி டிஜிட்டலைஸ் வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் ‘படையப்பா’ படம் உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“எங்களால் முடியாது” : கெஜ்ரிவால் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள்!

எப்படி இருந்த துணை வேந்தர்கள் இப்படியாகி விட்டார்களே!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment