தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு இன்று உயிரிழந்த தனது தாயாருக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் மகேஷ்பாபு. இவரது தாயார் இந்திரா தேவி.
கடந்த ஒரு வாரமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திராதேவி இன்று அதிகாலை 4மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது உடல் ஹைதராபாத்தில் உள்ள பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து தற்போது மகா பிரஸ்தானத்தில் இறுதி சடங்கில் மகேஷ்பாபு தனது தாயாருக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்திய காட்சி காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
இந்திரா தேவியின் மறைவுக்கு தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் விஜய் தேவரகொண்டா, வெங்கடேஷ், நாகர்ஜூனா, மோகன்பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும் ஜூனியர் என் டிஆர், ரவி தேஜா, நந்தமுரி பாலகிருஷ்ணா, ஹரிஷ் ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் மகேஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
உச்ச நட்சத்திரமான மகேஷ் பாபு, அவரது சகோதரர் ரமேஷ் பாபு ஆகியோர் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மற்றும் இந்திராதேவிக்கு பிறந்தவர்கள்.
பின்னர் கிருஷ்ணா இந்திராவைப் பிரிந்து விஜய நிர்மலாவை மணந்தார். இதனால் தனது மகன் மகேஷ் பாபுவுடன் தனியாக வாழ்ந்து வந்தார் இந்திராதேவி.
இந்திரா தேவியின் மூத்த மகனான ரமேஷ் பாபு இந்தாண்டு ஜனவரி மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்திராதேவியும் தற்போது உயிரிழந்தது மகேஷ் பாபு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா