4 ஆண்டுகள் விவேக்குடன் பேசாத சுந்தர்.சி – காரணம் தெரியுமா?
நடிகர் விவேக்குடன் 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தேன் என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் அனைவராலும் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். இவர் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவால் விவேக் காலமானார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் சுந்தர்.சி. மறைந்த நடிகர் விவேக் பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர், “விவேக் என்னுடைய சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனக்கு தெரிந்து இந்த கருத்து வேறுபாடு காரணமாக நாங்கள் ஒரு 3 முதல் 4 ஆண்டுகள் வரை எந்த படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை.
நான் இயக்கிய வின்னர் படத்தில் நகைச்சுவை நடிகராக விவேக் தான் முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதன்பின்னர் தான் வடிவேலு தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து வீராப்பு படத்திலும் முதலில் காமெடியனாக சந்தானத்தை தான் புக் செய்து இருந்தோம். அவர் அப்போது தான் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்தார்.
இதனிடையே இந்த படத்தின் இயக்குநர் பத்ரி திடீரென வீராப்பு படத்தில் ஒரு காமெடி ட்ராக் தனியாக இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். அப்போது நாங்கள் நெல்லையில் ஷூட்டிங்கில் இருந்தோம்.
பத்ரி என்னிடம் விவேக்கை காமெடியனாக போடலாம் என சொன்னார். எனக்குள் ஒரு தயக்கம் இருந்தது. ஏனெனில், விவேக் மூத்த நடிகர். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்துகொண்டு படப்பிடிப்பிற்கு அவரை வர சொல்வது கஷ்டமான விஷயமாக தோன்றியது.
அப்படியே அவர் வந்தாலும் என்ன செய்யப்போகிறார் என தெரியாது என பல சிந்தனைகள் இருந்தது. இறுதியில் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன மாதிரி’ என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு காமெடி ட்ராக் பண்ணலாம் என்று விவேக்கை அணுகினோம்.
அவர் எந்தவித காரணமும் சொல்லாமல் உடனடியாக நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். விவேக்கும், அவருக்கு காமெடி ட்ராக் எழுதுபவரும் ஒரே நாளில் காமெடி காட்சிகளை எழுதினார்கள்.
அதன்பின்னர், நானும், விவேக்கும் எத்தனையோ திரைப்படங்கள் இணைந்து நடித்தோம். கடைசியாக நான் இயக்கிய ‘அரண்மனை 3’ படத்தில் விவேக் நடித்தார்.
அந்த படத்திற்காக 25 நாட்கள் குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் அரண்மனை கெஸ்ட் ஹவுஸில் தங்கி நடித்து கொடுத்தார் விவேக். அங்கு டிவியோ, செல்போன் சிக்னலோ எதுவும் இருக்காது.
சுற்றி காட்டுப்பகுதியாக இருக்கும் நிலையில் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி நடைபயிற்சி எல்லாம் சென்றார். பின்னர், அரண்மனை படம் டப்பிங் பேசிவிட்டு வெள்ளிக்கிழமை எனக்கு போன் செய்தார். ‘ஒரு டயலாக் மாற்ற வேண்டி இருக்கு. நான் திங்கட்கிழமை வந்து மாற்றி தருகிறேன்’ என சொன்னார்.
ஆனால், அவர் வரவே இல்லை. விவேக் மறைந்து விட்டார். அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த இழப்பு” என இயக்குநர் சுந்தர்.சி கூறினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“மண்ணாங்கட்டி” ஷூட்டிங் ஓவர்: கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா