விமர்சனம்: தலைநகரம் 2

Published On:

| By Kavi

வன்முறை மிகுந்த ‘கொலை’ நகரம்!

எப்போதுமே ஒரு படத்தின் இரண்டாம் பாகம் அல்லது அதற்கடுத்த பாகங்கள் வெளியாகும்போது எதிர்பார்ப்பு பலமாக இருக்கும். ஆனால், எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியான முதல் பாகம் பெற்ற வெற்றியை, தந்த திருப்தியை அவற்றால் ஒருபோதும் ஈடு செய்ய முடியாது.

அப்படியிருந்தும், இப்படிப்பட்ட படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களின் புருவங்களை உயர்த்த வைக்கின்றன. அந்த படங்களைப் பார்த்தபிறகும் அப்படியொரு பாவனையை வெளிப்படுத்த முடிந்தால் மகிழ்ச்சி. சுந்தர்.சியின் நடிப்பில், வி.இசட்.துரை இயக்கியுள்ள ‘தலைநகரம் 2’வும் அப்படி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறதா?

கொலைகள் விழும் நகரம்!

தலைநகரமா, கொலைநகரமா என்று கேட்கும்படி சென்னையின் தெற்கு, மத்திய, வட பகுதிகளில் நஞ்சுண்டா, வம்சி, மாறன் மூவரும் சட்டவிரோதமான தொழில்களைச் செய்து வருகின்றனர். மூவரும் ஒருவரையொருவர் தீர்த்துக் கட்டத் துடிக்கின்றனர். இந்த நிலையில், நடிகை சிதாரா (பாலக் லால்வானி) கடத்தப்படுகிறார். அவர் வம்சியின் கேர்ள்ப்ரெண்ட். நஞ்சுண்டனின் அடியாட்கள் வம்சியைப் பழி வாங்க அவரைக் கடத்துகின்றனர்.

மயக்க நிலையில் இருக்கும் அவர் நஞ்சுண்டனின் பாலியல் வேட்கைக்கு இரையாகிறார். பழியில் இருந்து தப்பும் வகையில், மனம் திருந்தி வாழும் ஒரு பழைய ரவுடியின் மீது எதிரிகளின் கவனத்தைத் திருப்பலாமா என்று கேட்கிறார் நஞ்சுண்டனின் வழக்கறிஞர். அதைக் கேட்டதும், ‘ரைட் மீது கைய வச்சா உங்க கதையே தொலைஞ்சது. அவன் வீட்டு நாயைக் கூட தொட முடியாது’ என்கிறார் ஒரு பெரியவர்.

நஞ்சுண்டனின் அடியாட்களுக்கு அது ரௌத்திரத்தை உண்டாக்குகிறது. அடுத்த நாளே, ரைட் எனும் சுப்பு (சுந்தர்.சி) வளர்த்து வரும் நாயைத் தூக்கி வருகின்றனர். அதற்கடுத்த சில மணி நேரத்தில், நாய்க்குப் பாதுகாப்பாக இருந்த ஆறு பேரை அடித்து துவம்சம் செய்கிறார் ரைட். அதுவும் 17 நொடிகளில்..

sundar c thalainagaram 2 review

மாலிக் பாய் (தம்பி ராமையா) என்பவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் ரைட், எந்த வம்புதும்புக்கும் போகாமல் இருக்கிறார். தன் மகள் பர்வீன் டாக்டர் ஆக பணியாற்றுவதற்காக, ஒரு மருத்துவமனை கட்ட இடம் பார்க்கிறார் மாலிக். அதற்காக கொடுத்த முன்பணத்தில் 5 லட்சம் ரூபாய் கள்ள நோட்டு இருப்பது தெரிய வருகிறது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் மாலிக்கை கைது செய்கின்றனர். அந்த பணத்தை மாறனின் வலதுகையான மெய்யப்பனின் நிதி நிறுவனத்தில் இருந்து மாலிக் பெற்ற தகவலும் கிடைக்கிறது. அதையடுத்து மெய்யப்பனைச் சரணடையச் சொல்லி எச்சரிக்கிறார் ரைட்.

கள்ள நோட்டு விவகாரத்தில் மாறன், நடிகை கடத்தப்பட்ட விஷயத்தில் வம்சி என்று இருவரும் ரைட் நோக்கி தங்களது பார்வையைத் திருப்புகின்றனர். அதேநேரத்தில், தன் ஆட்களை அடித்த காரணத்திற்காக ரைட்டை கொல்லத் துடிக்கிறார் நஞ்சுண்டன். மூன்று பக்கமிருந்தும் பாயும் பகையை எதிர்த்து ரைட் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே ‘தலைநகரம் 2’வின் கதை.

ஹீரோ என்றில்லை,இந்த படத்தில் சாதாரண பாத்திரங்கள் கூட சண்டையிட்டுக்கொண்டும் கொலை செய்துகொண்டும் இருக்கின்றன. அதேநேரத்தில், காக்கி உடையணிந்த காவல் துறையினர் வெறுமனே திரையில் நடமாடிக்கொண்டிருக்கின்றனர்.

தலைநகரம் முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரி பாத்திரங்களுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இதில் அப்படி எதுவும் இல்லை.

sundar c thalainagaram 2 review

மீண்டும் சுந்தர்.சி

ஒரு இயக்குனராகத் தொடர்ந்து வெற்றிகள் தந்தாலும், தலைநகரம் போன்ற ஒரு வெற்றிப்படத்தை மீண்டும் சுந்தர்.சி தரவே இல்லை. முத்தின கத்தரிக்காய், இருட்டு போன்ற படங்கள் கொஞ்சம் வேறுவிதமாக அவரைக் காட்டின. ஆனாலும் பெரிதாகப் பலன் இல்லை. இந்த நிலையிலேயே, மீண்டும் ‘ரைட்’ ஆக அடியெடுத்து வைத்திருக்கிறார் சுந்தர்.சி. முதல் படம் போலவே, இதில் சிரிப்பு கொஞ்சம் கூட இல்லாமல் மிக சீரியசாக தோன்றியிருக்கிறார். அவரது பாத்திரத்திற்கான பில்டப்பை ஈடு செய்கின்றன முன்பாதி சண்டைக்காட்சிகள்.

கேங்க்ஸ்டர் உடன் சுற்றும் நடிகை என்ற தைரியமான பாத்திரத்தில் தோன்றியுள்ளார் பாலக் லால்வானி. அவர் கஷ்டப்பட்டு வசனம் பேசினாலும், ஒரு அழகுப்பொம்மை வாய் திறப்பது போலவே நமக்குத் தோன்றுகிறது. நிச்சயம் இது பாராட்டு அல்ல.
தம்பி ராமையா தன் பாணியில் அழுத்தமாக வசனத்தை உச்சரித்து ஆங்காங்கே சிரிப்பூட்டுகிறார். அவரது மகளாக நடித்துள்ள ஐரா, கிளைமேக்ஸ் காட்சியில் அழுது நடிக்கும்போது கவனம் ஈர்க்கிறார். நஞ்சுண்டாவாக வரும் பிரபாகர், மாறனாக வரும் ஜெய்ஸ் ஜோஸ், வம்சியாக வரும் விஷால் ராஜன் மூவருமே பவர்புல்லான வில்லன்களாக வலம் வருகின்றனர்.

டான்ஸ் மாஸ்டர் விஜி சதீஷ் உடன் வரும் இரண்டு பெண்களும் கூட வில்லத்தனத்தை மிரட்டலாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். இவர்கள் தவிர்த்து அடியாட்கள், போலீசார், பழைய ரவுடிகள் என்று பெருங்கூட்டமே திரையில் ஆங்காங்கே வந்து போகிறது.
கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு அழகுறக் காட்சிகளைப் பதிவு செய்திருப்பதோடு ஆங்காங்கே யதார்த்தத்தையும் நிரப்பியிருக்கிறது.

இடைவேளைக்கு முன் வெகு சீராகவும் வேகமாகவும் படம் பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது ஆர்.சுதர்சனின் படத்தொகுப்பு; இடைவேளைக்குப் பிறகு அது சுத்தமாக இல்லை. ஏ.கே.முத்துவின் கலை வடிவமைப்பு ஒவ்வொரு பிரேமையும் உற்றுநோக்க வைத்திருக்கிறது.

ஜிப்ரானின் இசையில் ’அசத்துறா அசத்துறா’ பாடல் சட்டென்று ஈர்க்கிறது. மற்ற பாடல்கள் காட்சிகளின் பின்னணியில் ஒலித்து நம் மனதில் இருந்தும் மறைகின்றன. அதேநேரத்தில், பின்னணி இசையில் வேகம் கூட்டி காட்சிகளை பரபரப்பானதாக மாற்றியிருக்கிறார் ஜிப்ரான். கிட்டத்தட்ட ராம்கோபால் வர்மாவின் ‘சர்கார்’ பார்த்த தாக்கத்தைப் பிரதியெடுக்க உதவியிருக்கிறார்.

sundar c thalainagaram 2 review

வெற்றி பெறுமா?

ஒரு படத்தின் இரண்டாவது பாகத்தை வேறொரு கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் உருவாக்குவது சாதாரண விஷயமல்ல; நிச்சயம் முதல் பாகத்துடனான ஒப்பீடு அவர்களை ‘டேமேஜ்’ ஆக்கும். அந்த பொறுப்புகளை மனமுவந்து ஏற்றிருக்கிறார் வி.இசட்.துரை.

மூன்று வில்லன்களின் அறிமுகம், அதையடுத்து காட்டப்படும் நாயகன் என்று அமர்க்களமான ஆரம்பத்தைத் தந்திருக்கிறார் துரை. இடைவேளை வரை அந்த ‘டெம்போ’ குறையாமல் இருக்கிறது. அதன்பிறகு ‘த்ரில்’ குறைந்து ‘ட்ராமா’ திரையில் நிறைகிறது. பின்பாதியில் யார் எவரைச் சாய்க்கத் திட்டமிடுகின்றனர் என்பது விவாலாரியாகச் சொல்லாமல் அவசர அவசரமாக நகர்கிறது திரைக்கதை. அதைச் செதுக்கிச் சீர்படுத்தியிருந்தால், ஒரு முழுமையான, நேர்த்தியான கேங்ஸ்டர் படமாக மாறியிருக்கும் ‘தலைநகரம் 2’.

கேங்க்ஸ்டர் படம் என்ற போர்வையில் திரையில் வன்முறையை அதிகம் காட்டியிருக்கிறார் துரை. அதற்காக, ஒருவரது குடலை உருவி ‘இந்தா பாருங்க’ என்று கண்காட்சிக்கு அழைப்பு விடுப்பதெல்லாம் ரொம்பவே ஓவர். அவை பயமுறுத்துவதற்குப் பதிலாக அருவெருப்பூட்டுகின்றன என்பதே உண்மை.

‘இதுவரை நான் விரும்பியோ விரும்பாமலோ பல பேரோட படுக்கைக்குப் போயிருக்கேன். ஆனா, எனது அனுமதியில்லாமல் ஒருத்தர் கூட என்னை தொட்டதில்லை’ என்பது போன்ற ‘போல்டான’ வசனங்கள் இதில் நாயகிக்கு உண்டு. ஆனால், இப்படியொரு சீரியசான படத்தில் சுந்தர்.சி – லால்வானி இடையே காதல் முளைப்பதாகக் காட்டுவது தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. அந்த இடத்தில் இயக்குனர் கொஞ்சம் ‘கத்திரி’ போட்டிருக்கலாம்.

ரைட் என்ற நாயக பாத்திரம், ரவுடியிசம் நிறைந்த வாழ்வு, சில பல ரவுடிகளின் மோதல் என்று ‘தலைநகரம்’ படத்தின் கருவை எடுத்துக்கொண்டு, அதில் இருந்த வடிவேலுவின் காமெடியை நீக்கிவிட்டு, ஒரு முழுமையான ‘கேங்க்ஸ்டர் ஆக்‌ஷன்’ படம் தர முனைந்திருக்கிறார் இயக்குனர்.

ரவுடிகளின் வாழ்க்கையைப் பார்க்கும் ரசிகர்கள் விலகி நின்றுவிடக் கூடாது என்று தம்பிராமையா – ஐரா சம்பந்தப்பட்ட ‘செண்டிமெண்ட்’ காட்சிகளைப் புகுத்தியிருக்கிறார்.

என்னதான் கனகச்சிதமாக வடிவமைத்திருந்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதை தடுமாறுவதை மறுக்க முடியாது. ’இது போதும்’ என்ற நோக்கில் கிளைமேக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனைச் சீர்படுத்தியிருந்தால் ‘தலைநகரம் 2’, தமிழில் ’பழைய’ ராம்கோபால் வர்மா படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்திருக்கும்..!

தேவர் மகன் சர்ச்சை: மாரி செல்வராஜ் விளக்கம்!

”அதிமுக ஆட்சியில் ’கலைஞர்’ கட்டிட பெயர்கள் மாற்றப்படும்”:ராஜன் செல்லப்பா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel