‘ஜிந்தகி நா மிலேகா தோபாரா’, ‘கல்லி பாய்ஸ்’ போன்ற பல பிரபலமான படங்களை இயக்கிய ஜோயா அக்தர் இயக்கத்தில், ‘ஆர்ச்சீ காமிக்’ என்ற அமெரிக்காவின் மிகப்பிரபலமான காமிக் தொடரில் வரும் கதாபாத்திரங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘தி ஆர்ச்சீஸ்’.
முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம்!
இப்படத்தின் மூலம் ஷாரூக் கானின் மகள் சுஹானா கான், ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர், அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா என பல நட்சத்திர குழந்தைகள் சினிமாவுக்குள் கால் பதித்துள்ளனர். இவர்களுடன் வேதங் ரெய்னா, மிஹிர் அஹுஜா, அதிதி டாட், யுவராஜ் மெண்டா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ரிவர்டேல்’ என்ற ஒரு கற்பனை இந்திய நகரத்தில், டீனேஜ் பருவத்தில் உள்ள ஒரு 7 பேரை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கொண்டு, ஒரு அழகான காதலும் இசையும் நிறைந்து, அதே நேரத்தில் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு அழுத்தமான கருத்தையும் கொண்டு தயாராகியுள்ள இந்த ‘தி ஆர்ச்சீஸ்’ திரைப்படம், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 7 அன்று வெளியானது.
தி – ஆர்ச்சீஸ் கதை என்ன?
அது 1964ம் ஆண்டு. அழகான பசுமை நிறைந்த மலைகளுக்கு நடுவே ‘ரிவர்டேல்’ என்ற கிராமம். அந்த கிராமத்தின் ஆணிவேராக திகழும் ‘கிரீன் பார்க்’ என்ற பூங்காவில் தான் இக்கதை துவங்குகிறது. இந்த பூங்காவை ஆணிவேர் என்று குறிப்பிட ஒரு காரணம் உள்ளது. அந்த பூங்காவில் அமைந்துள்ள ஒவ்வொரு மரமும், அந்த கிராமத்தில் வாழும் ஒவ்வொருவரின் பெயரை ஏந்தி நிற்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, கலப்பு திருமணம் செய்துகொண்ட இந்தியர்களும் – பிரிட்டிஷ்காரர்களும், இந்தியாவா? இங்கிலாந்தா? என்ற சூழ்நிலை வந்தபோது, இந்தியாவை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியாக வாழும் ஒரு பகுதிதான் ‘ரிவர்டேல்’. அந்த பகுதியில் ஒரு நடைமுறை இருக்கிறது. அந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 5 வயதை அடையும்போது, அந்த பூங்காவில் வந்து தனது பெயரில் ஒரு மரத்தை நட வேண்டும். அது வெறும் பூங்காவாக இல்லாமல், அங்கு விருட்சமாக வளர்ந்து நிற்கும் ஓவ்வொரு மரங்களும், அவர்களின் முன்னோர்களின் சாட்சியங்களாக உள்ளது.
அந்த கிராமத்தில், சரியாக இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ல் பிறந்த, தற்போது டீனேஜ் பருவத்தில் உள்ள ஆர்ச்சீ (அகஸ்தியா நந்தா), ரோனி (சுஹானா கான்), பெட்டி (குஷி கபூர்), ரெஜி (வேதங் ரெய்னா), ஜுக்கேத் (மிஹிர் அஹுஜா), எத்தல் (அதிதி டாட்) மற்றும் டில்டன் (யுவராஜ் மெண்டா) ஆகிய 7 பேர் அடங்கிய நண்பர்கள் குழுவை சுற்றி இந்த கதை நகர்கிறது.
ஒரு மிகப்பெரிய தொழிலதிபரான லாட்ஜ் என்பவரின் மகளான ரோனி, லண்டனில் இருந்து ரிவர்டேல் திரும்பி தனது நண்பர்கள் குழுவில் இணைகிறாள். ஹை-ஸ்கூல் மாணவர்களான இவர்களின் நட்பு வட்டத்தில் நடக்கும் ரகளைகள், டீனேஜ் பருவத்தில் ஏற்படும் காதல் குழப்பங்கள் ஆகியவற்றுடன் இந்த கதை பயணிக்கிறது.
ரோனி ஊர் திரும்பியதில் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்த இந்த ‘கிளாஸ் ஆஃப் 64’ நண்பர்கள் குழுவுக்கு, ரோனியின் தந்தை மூலமாக இவர்கள் பெயரிலான மரங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போகிறது என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.
ரிவர்டேல்லுக்கு ஒரு மிகப்பெரிய ஹோட்டல் கட்ட வேண்டும் என்ற நோக்கிலேயே ஊர் திரும்பிய லாட்ஜ், அந்த ஹோட்டலுக்காக ‘க்ரீன் பார்க்’ பூங்காவை தேர்வு செய்கிறார். அதை அடையவும் சட்டவிரோதமாக பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார். தன்னிடம் உள்ள பணபலத்தின் மூலம், ஒரு கட்டத்தில் அந்த முயற்சியில் வெற்றியும் பெற்று விடுகிறார்.
இதை அறிந்த அந்த ‘கிளாஸ் ஆஃப் 64’ நண்பர்கள் குழு, அந்த கிராமத்தில் உள்ள மக்களை திரட்டி கிரீன் பார்க் பூங்காவை காப்பாற்ற முயற்சி செய்கிறது. அந்த முயற்சியில், அவர்கள் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதுதான் ‘தீ ஆர்ச்சீஸ்’.
வளர்ச்சி எனும் பெயரில் நுழையும் ஆபத்து!
ஒருவர் தான் வந்த பாதையை ஏன் மறக்கக்கூடாது? இயற்கையை ஏன் அழிந்துபோக விடக்கூடாது? அது அழிந்துபோகும் நிலை வந்தால் ஏன் அதை காக்க இறுதிவரை போராட வேண்டும்? என்பதை இப்படம் வேறு ஒரு கோணத்தில் இருந்து பதிவு செய்கிறது.
ஒவ்வொருவர் வாழ்விலும் அரசியல் என்பது பின்னிப்பிணைந்த ஒன்று, முதலாளித்துவம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன செய்யும்? உங்களை ஒரு மனித உயிராக இல்லாமல், வருவாய் ஈட்ட பயன்படும் இயந்திரம் போலவே பார்க்கும், வளர்ச்சி என்ற பெயரில் அது என்ன ஆபத்துகளை கொண்டுவரும்? போன்ற கருத்துக்களை படத்தின் பயணத்திலேயே எடுத்துரைத்துள்ளார் இயக்குனர் ஜோயா அக்தர்.
படத்தில் கதை எவ்வளவு முக்கிய பங்கு வகித்ததோ, இசையும் முக்கிய பங்கு வகித்துள்ளது. அதில், ஷங்கர்-இஷான்-லோய், ஜிம் சத்யா, அன்கூர் திவாரி, அதிதி சைகல் ஆகியோர் மிகச்சிறப்பான பங்கு வகித்துள்ளனர்.
1960களை கதைக்களமாக கொண்ட இப்படத்திற்கு ஆடை வடிவமைப்பும், கலை இயக்கமும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. அதை இன்னும் சிறப்பாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் நிகோஷ் அண்ட்ரிட்சகிஷ்.
இறுதியாக, நடிப்பில் தங்கள் அறிமுக படத்திலேயே சுஹானா கான், அகஸ்தியா நந்தா, குஷி கபூர் ஆகியோர் அசத்தியுள்ளனர். அகஸ்தியா நந்தா மற்றும் சுஹானா கான் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
உணர்ச்சிகளை அருமையாக வெளிப்படுத்திய குஷி கபூர், படம் முழுவதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகிழ்
வேளச்சேரி 50 அடி பள்ளம்: விடிய விடிய போராடும் மீட்பு படை… ஒருவர் சடலமாக மீட்பு!
திமுக இளைஞர் அணி மாநாடு ஒத்திவைப்பு!