தமிழ்நாட்டில் சினிமா தியேட்டர்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழ்நாடு திரையரங்குகள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி சேலத்தில் நடைபெற்றது.
அதில் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், தலைவர் சுப்பிரமணியம், பொருளாளர் இளங்கோவன் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள ஏராளமான திரையரங்கு உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு, ஓடிடி ரிலீஸ் தள்ளிவைப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சினிமா டிக்கெட் கட்டணம் உயர்வு!
தற்போது தமிழ்நாட்டில் சினிமா தியேட்டர்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, மல்டிபிளக்ஸ் மற்றும் சிங்கிள் ஸ்கிரீன் என அனைத்து விதமான தியேட்டர்களிலும் அதிகபட்ச கட்டணமாக 190 ரூபாய் என்று உயர்த்தி இருக்கிறார்கள்.
தமிழக அரசு தரப்பிலிருந்து சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வு குறித்து எந்த விதமான உத்தரவும் வராத நிலையில் தியேட்டர்களில் இப்படி கட்டணத்தை உயர்த்தி இருப்பது சினிமா ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிக்கெட் எவ்வளவு உயர்வு?
முன்னதாக மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கும், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களுக்கும் இதுவரையில் கட்டணங்களில் வித்தியாசம் இருந்தது.
இதுநாள் வரையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் அதிக பட்ச கட்டணமாக 160 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அது 30 ரூபாய் உயர்த்தப்பட்டு 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.
சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் 130 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது. தற்போது 60 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.
குறைந்த பட்ச கட்டணமாக 60 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்ததில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
பெரு மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என ஒவ்வொரு இடங்களுக்கும் கட்டணங்களில் வித்தியாசம் இருக்கும்.
ஆனால், இப்போது அனைத்து விதமான தியேட்டர்களிலும் ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடிவாங்கிய சர்தார், பிரின்ஸ் முன்பதிவு!
தீபாவளியை முன்னிட்டு நாளை சர்தார், ப்ரின்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால் தீபாவளிக்கு வெளியாகும் இரு படங்களுக்கும் தமிழக சினிமா வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு டிக்கெட் முன்பதிவு வெகுமந்தமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.
சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி!
அதே வேளையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 21ம் தேதி முதல் வரும் 27ம் தேதி வரை 7 நாட்கள் திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பன்னீர் – பழனிசாமியை இணைக்கும் திமுக?
பரம எதிரிகள் மோதல் ! காத்திருக்கும் ’தி ராக்’