சிரிக்கவும் மிரளவும் மீண்டும் ஒரு ‘பேய்ப்படம்’!
பெண்ணியத்தைப் பேசும் கதைகள் எப்போதுமே பெருவாரியான மக்களிடம் இருந்து விலகி நிற்கும். ஆனால், யதார்த்த உலகில் பெண்கள் நடத்தப்படுவதை, செயல்படுவதை, அவர்களது கனவுகளைச் சுவாரசியமாகச் சொல்லும் படங்கள் எளிதாகக் கவரும்.
அந்த வகையில், ஒரு ’ஹாரர்’ கதையின் வழியே பெண்ணியம் பேசிய ‘ஸ்திரீ’ இந்தி திரைப்படம் புதிய அனுபவமொன்றை ரசிகர்களுக்குத் தந்தது. அதன் திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என்று ஒவ்வொரு அம்சமும் வியப்பில் ஆழ்த்துவதாக அமைந்தது.
தன் மரணத்திற்குக் காரணமான கிராமத்தினரைப் பழி வாங்க, அவர்களது வம்சாவளியினரைப் பேயாக வந்து வதைக்கிறார் ஒரு பெண்மணி. அவரது ஆன்மாவைச் சமாதானப்படுத்தி, அந்தக் கிராமத்தினர் தெய்வமாகப் போற்ற நாயகனும் அவரது நண்பர்களும் என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதைச் சொன்னது ‘ஸ்திரீ’.
நாயக பாத்திரத்தை வடிவமைத்த விதம், கதை நிகழ்வதாகச் சொல்லப்படும் சந்தேரி கிராமம், அங்குள்ள கலாசாரப் பழக்க வழக்கங்கள் என்று ஒரு வித்தியாசமான காட்சியனுபவத்தைத் தந்தது அப்படம்.
அப்படிப்பட்ட ‘ஸ்திரீ’யின் இரண்டாம் பாகம் வெளியாகும்போது, எப்படிப்பட்ட எதிர்பார்ப்பு நம்மில் உருவாகும்? அதனைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அதில் உள்ளடக்கம் இருக்க வேண்டுமே?
இந்த கேள்விகளை எதிர்கொள்ளும் தயார்நிலையோடு ‘ஸ்திரீ 2’ படத்தைத் தந்திருக்கிறது தினேஷ் விஜனின் ‘மேட்டாக் பிலிம்ஸ்’. நிரேன் பட் எழுத்தாக்கத்தில் அமைந்த இதனை, முதல் பாகத்தை இயக்கிய அமர் கௌசிக் இயக்கியிருக்கிறார்.
எப்படியிருக்கிறது ‘ஸ்திரீ 2’?
சந்தேரியை வதைக்கும் ஆண் பேய்!
முதல் பாகத்தில் ’ஸ்திரீ’யை சமாதானப்படுத்தும் ஐடியாவை தந்த பெண் (சாரதா கபூர்) மீது இப்போதும் காதல் கொண்டிருக்கிறார் டெய்லர் விக்கி (ராஜ்குமார் ராவ்). அவரது நண்பர்கள் ருத்ரா (பங்கஜ் திரிபாதி), பிட்டு (அபர்ஷக்தி குரானா) இருவரும், ‘அந்த பேய் உன்னை ஏமாத்திட்டு போயிடுச்சு’ என்று அவரை வெறுப்பேற்றி வருகின்றனர்.
விக்கியின் தந்தை, ‘மகன் இன்னும் கன்னிப்பையனாக இருக்கிறானே’ என்ற வருத்தத்தில் இருக்கிறார். அவர்கள் வாழும் சந்தேரி கிராமத்தில் பயம் மறைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ’ஸ்திரீ’யை ஒரு தெய்வமாகச் சந்தேரி கிராமத்தினர் வழிபடத் தொடங்கி ஓராண்டு பூர்த்தியாகும் காலம் வருகிறது. அங்குள்ள கோயிலில் பத்து நாள் திருவிழா தொடங்குகிறது.
அப்போது, அவ்வூரில் இருக்கும் இளம்பெண்கள் மாயமாக மறைந்து போகின்றனர். ஊரில் இருப்பவர்கள், அவர்கள் வெளியூருக்கு எவரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டதாக நினைக்கின்றனர்.
காரணம், அப்பெண்கள் எல்லோருமே படித்தவர்கள்; ஏதேனும் வேலை செய்து சுயாதீனமாக வாழ வேண்டும் என்று எண்ணுபவர்கள்; நவநாகரிகப் பெண்மணியாகத் தங்களை வெளிப்படுத்துபவர்கள்.
இந்த நிலையில், பிட்டுவின் கேர்ள்ப்ரெண்ட் சிட்டி (அன்யா சிங்) கடத்தப்படுகிறார். அதனைச் செய்தது ஒரு பேய் தான் என்பதை அக்கிராமத்தினர் புரிந்துகொள்ளும்விதமாக, அங்கு சில தடயங்கள் கிடைக்கின்றன.
அதே நேரத்தில், ருத்ராவுக்கு ஒரு மர்ம கடிதம் வருகிறது. அதில், ‘சந்தேரி புராணம்’ எனும் புத்தகத்தில் இருந்து கிழிக்கப்பட்ட சில பக்கங்கள் இருக்கின்றன. அதில், ‘சந்தேரி கிராமத்தை விட்டு ஸ்திரீ சென்றுவிட்டால், அவரது மரணத்திற்குக் காரணமானவன் அங்கு வருவான்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட காரணத்தால் அந்த பேய் உடல் தனியாகவும் தலை தனியாகவும் காட்சியளிக்கும்’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
சிட்டி கடத்தப்பட்டதை நேரில் பார்த்த ஒரு பிச்சைக்காரரும், அதே அடையாளங்களை அச்சுப்பிசகாமல் சொல்கிறார். சிட்டியை மீட்கத் தோழர்கள் ருத்ரா, விக்கியின் உதவியை நாடுகிறார் பிட்டு. இது போன்ற விஷயங்களில் ஞான திருஷ்டியைக் காணும் நண்பன் ஜனாவின் (அபிஷேக் பானர்ஜி) மூலமாக, அந்தப் பேய் இருக்குமிடத்தை அறிய எண்ணுகின்றனர்.
டெல்லியில் தனது பெற்றோரால் ஓரிடத்தில் ரகசியமாகத் தங்க வைக்கப்பட்டிருக்கிறார் ஜனா. அவரை மீண்டும் சந்தேரிக்கு அழைத்து வருகின்றனர்.
ஊருக்கு வெளியே இருக்கும் அரண்மனையில் அந்த பேய் இருக்கிறது. ஆனாலும், கடத்தப்பட்ட இளம்பெண்களை அது எங்கு வைத்திருக்கிறது என்றும் தெரியவில்லை.
அங்கு நால்வரும் செல்கின்றனர். அவர்களைக் கொலை வெறியோடு அந்தப் பேய் துரத்துகிறது. அலறியடித்துக்கொண்டு, சந்தேரியின் மையப்பகுதியில் ஸ்திரீ சிலை வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அவர்கள் செல்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருகிறது அந்தப் பேய். தலையைக் கையில் பிடித்துக்கொண்டு, வெற்றுடலுடன் நிற்கிறது. ‘நாம் சாவது உறுதி’ என்று நால்வரும் ஒரு முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.
அப்போது, விக்கி காதலித்த அந்தப் பெண் மீண்டும் அங்கு தோன்றுகிறார். அந்தப் பேயை விரட்டியடிக்கிறார். ஆனாலும், தன்னால் ஒருபோதும் அந்த பேயை ஒழிக்க முடியாது என்று விக்கியிடமும் அவரது நண்பர்களிடம் சொல்கிறார்.
சந்தேரியை விட்டு ஸ்திரீ சென்றுவிட்டால், அந்த அசுரப் பேய் வருமென்று கடிதம் அனுப்பியவரால் மட்டுமே அதற்குத் தீர்வு காண முடியுமென்று அவர்கள் உணர்கின்றனர். அந்த நபரைத் தேடிச் செல்கின்றனர். ஆனால், அவரோ ஒரு மனநல மருத்துவமனையில் நோயாளியாக இருக்கிறார்.
அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘ஸ்திரீ 2’வின் மீதி.
முதல் பாகத்தில் பெண் பேய் வதைத்தது என்றால், இதில் ஆண் பேய் தனது மூர்க்கத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால், இரண்டு கதைகளுக்குமான முடிச்சை ஓரளவுக்குத் திருப்தி தரும் வகையில் வடிவமைத்திருக்கிறது இப்படக்குழு.
மிரட்சியும் சிரிப்பும்..!
’ஸ்திரீ’ படம் எப்படி மிரட்சியையும் சிரிப்பையும் ஒருசேரத் தந்ததோ, மீண்டும் அது போன்றதொரு அனுபவத்தைத் தருகிறது இந்த இரண்டாம் பாகம்.
முதல் பாகத்தில் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், சந்தேரி கிராமத்தின் கலாசாரம், சமகாலத்தில் பெண்களுக்குத் தரப்படும் மரியாதை, ‘ஸ்திரீ’ என்றழைக்கப்படும் பேயின் தொடக்க கால வரலாறு, அக்கிராமத்தினரின் முந்தைய தலைமுறையினர் அப்பெண்ணை அவமானப்படுத்திய விவரங்கள் சொல்லப்பட்டிருந்தன.
ஆனால், ‘ஸ்திரீ 2’வில் வெறுமனே அதன் சாரம்சம் மட்டுமே உள்ளது. ஆண் பேய் குறித்த விவரணைகள் பெரிதாக இல்லை. வெறுமனே பேய் வரும் காட்சிகளில் மிரட்சியைத் தந்து, நம்மைச் சிரிக்கவும் வைக்கிறது திரைக்கதை. அந்த வகையில், முதல் பாகத்தை விட இதன் தரம் ‘ஒரு மாத்து’ கம்மி தான்.
காட்சியாக்கத்தைப் பொறுத்தவரை, இப்படம் ஒரு படி மேலே இருக்கிறது. ஜிஷ்ணு பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவு, ஹேமாந்தி சர்காரின் படத்தொகுப்பு, மயூர் சர்மாவின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் டிஐ, விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட இதன் தொழில்நுட்பப் பணிகள் ஒன்றிணைந்து இதன் உள்ளடக்கத்தை செறிவானதாக மாற்றியிருக்கிறது.
குறிப்பாக, ஒரேநேரத்தில் எப்படி ‘ஹாரர்’, ‘காமெடி’ கலந்த சித்தரிப்பை ரசிப்பது என்ற சந்தேகத்தைத் தூள்தூளாக்குகிறது ஜஸ்டின் வர்க்கீஸின் பின்னணி இசை.
சச்சின் ஜிகர் இசையில் ‘ஆஜ் கி ராத்’, ‘தும்ஹரே ஹி ரஹேங்கே’ பாடல்கள் நம்மைச் சுண்டியிழுக்கின்றன. அவற்றின் காட்சியாக்கம் ‘ஆவ்சம்’ ரகம். அதிலும் ‘ஆஜ் கி ராத்’ பாடலில் தமன்னா போடும் ஆட்டம் ஜெயிலரின் ‘காவாலா’வை மிஞ்சி நிற்கிறது. என்ன, ’ஒரிஜினலா, ஏஐ பயன்படுத்தப்பட்டிருக்கிறதா’ எனும் அளவுக்கு அதில் தமன்னாவின் தோற்றம் அமைந்திருக்கிறது.
கிளைமேக்ஸ் காட்சிக்குப் பிறகு திரையில் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வருகின்றன. அவற்றில் ’ஆயி நை’ ஈர்க்கிறது; ‘கூப்ஸூரத்’ பாடல் படத்தின் கதைக்கருவையே கேவலப்படுத்துவதாக இருக்கிறது.
நடிப்பைப் பொறுத்தவரை, இப்படத்தில் சிறு பாத்திரங்களில் தோன்றியவர்களும் கூட அசத்தியிருக்கின்றனர்.
முதல் பாகம் போலவே ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, அபிஷேக் பானர்ஜி, அபர்ஷக்தி குரானா கூட்டணி நம்மை சிரிப்பலையில் தள்ளுகிறது.
படபடவென்று வசனம் பேசுவதாகட்டும், அப்பாவித்தனமான முகத்துடன் தோன்றுவதாகட்டும்; ராஜ்குமார் ராவ் கலக்கியிருக்கிறார். சாரதா கபூர் இதில் அழகுப்பதுமையாகத் தோன்றி, ஒரு மோகினிப்பேயின் இருப்பை தனது நடிப்பு வழியே நமக்குக் கடத்தியிருக்கிறார். இவர்கள் தவிர்த்து சுமார் ஒன்றரை டஜன் பேராவது இப்படத்தில் முகம் காட்டியிருப்பார்கள்.
தயாரிப்பாளர் தினேஷ் விஜன், இயக்குனர் அமர் கௌஷிக் கூட்டணி, ‘ஸ்திரீ2’வில் ’கில்லி’யாகச் சொல்லியடித்திருக்கிறது.
முதல் பாகத்திற்கு ஈடாகுமா..?
ஏற்கனவே சொன்னது போல, இந்தப் படத்தில் வணிக வெற்றியை நோக்கமாகக் கொண்டு சில அம்சங்கள் பார்த்து பார்த்துச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவை திரையில் பலன் தந்திருக்கின்றன.
ஆனால், முதல் பாகத்தின் உள்ளடக்கம் எந்தளவுக்கு நேர்த்தியாக இருந்ததோ, அதனை இதில் எதிர்பார்க்க முடியாது. அந்த கதை சொல்லல் நிச்சயமாக இதில் கிடையாது. பல புகழ்பெற்ற திரைப்படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றன.
போலவே, முதல் பாகத்தில் பெண்மையின் இயல்பைப் போற்றிய அளவுக்கு இதில் விரிவான விவரணைகள் இல்லை. அதனால், ‘ஸ்திரீ 2’ முதல் பாகத்திற்கு ஈடாக இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.
அதே நேரத்தில், தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று திரையைப் பார்த்து பயந்தும் சிரித்தும் மகிழலாம். கிளைமேக்ஸ் பாடல்கள் மட்டுமே திருஷ்டிப் பொட்டாக அமைந்துள்ளன. மற்றபடி, ஒரு கொண்டாட்டமான திரையனுபவமான ‘ஸ்திரீ 2’ இருக்கும்!
உதயசங்கரன் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’சிறந்த நடிப்பு என்பது என்ன தெரியுமா?’ : தேசிய விருது வென்ற நித்யா மேனன் நச் விளக்கம்!
சமத்துவம், சமூக நீதி, கூட்டாட்சி: அதிகாரத்தைப் பரவலாக்குவது எப்படி?
ஹெல்த் டிப்ஸ்: பகல் நேர உறக்கம்… உடல் எடையை அதிகரிக்குமா?
ஆவணி மாத நட்சத்திர பலன் – உத்திரட்டாதி! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)
டோக்கியோவில் வெள்ளி பதக்கம்: மாதவிடாயால் பாரிசில் தோற்ற மீராபாய்
ரீல்ஸ்: வீலிங் செய்த பைக்கை பாலத்தில் இருந்து கீழே வீசிய மக்கள்!