ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 முடிந்து, ஜனவரி 1 பிறக்கும்போது நாம் என்ன செய்தோம் என்று நினைத்துப் பார்த்து பதில் கண்டறிவது கடினம். அன்றைய தினம் என்னவெல்லாம் செய்தோம் என்பது அடுத்த நாளே மறந்து போயிருக்கும். ஆனால், அன்று நம் காதில் விழுந்த விஷயங்களில் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் வரும் ‘ஹேப்பி நியூ இயர்’ பாடலும் ஒன்று என்பதைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். வானொலி, தொலைக்காட்சி, இதர ஊடகங்கள், சமூகவலைதளங்கள் என்று எல்லா இடங்களையும் கவிஞர் வாலியால் எழுதப்பட்ட அந்த பாடலே குத்தகைக்கு எடுத்திருக்கும்.
ஏனென்றால், அந்தப் படம் வெளியானது முதல் இன்று வரை ஒவ்வொரு புத்தாண்டிலும் நம்மை வாழ்த்தும் குரல்களில் முதலாவதாக இருப்பது அப்பாடல் தான். அதுவும், இரவு மணி 12 மணியை நெருங்கும் வேளையில் பலரது மனதுக்குள் அந்தப் பாடலே சுற்றிச் சுழன்றாடும். பிறகு, நிஜமாகவே அந்தப் பாடலைக் கேட்க நேரும்போது ரத்தம் சூடேறும். நரம்புகள் முறுக்கேறும். மூளைக்குள் உற்சாகம் பீறிடும். அப்புறமென்ன, ‘இனி வருஷமெல்லாம் வசந்தம் தான்’ என்ற எண்ணம் மனம் முழுக்க நிறைந்து வழியும்.’எந்தப் புத்தாண்டானாலும் இந்தப் பாடலுக்குதான் முதலிடமா’ என்று பல பாடல்கள் அந்த இடத்தைப் பிடிக்கச் சண்டையிட்டாலும், மாற்றம் எதுவும் நிகழ்ந்தபாடில்லை. இளமை இதோ இதோ’வில் எஸ்.பி.பி. கொட்டிய குதூகலக் கொப்பளிப்பைக் காட்டிலும், அதன் தொடக்கத்தில் வரும் ’ஹேய் எவ்ரிபடி விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்’ என்றொலிக்கும் அவரது குரல் நம் அட்ரினல் சுரப்பியை எகிறச் செய்யும். அது ஒவ்வொரு முறையும் நிகழ்வதுதான் எஸ்.பி.பி எனும் மகாகலைஞனின் மாயாஜாலம்.
தற்செயலாக நிகழ்ந்த விஷயம்!

‘சகலகலா வல்லவன்’ பட நினைவுகள் குறித்து சித்ரா லட்சுமணனுக்குத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அளித்த பேட்டியில், ‘அந்தப் பாடலில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலுக்கு முன்னாடி அப்படி சொன்னது தற்செயலாக நிகழ்ந்தது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பாடலை கம்போஸிங் செய்து, இளையராஜா தனது குரலில் ஒரு ட்ராக்கை பாடியிருக்கிறார். அப்பாடலைப் பாட வந்த எஸ்.பி.பி. அதனைக் கேட்டிருக்கிறார்.
’தொடக்கத்தில் வருமிடம் கொஞ்சம் காலியாக இருக்கிறது. அதில் ‘புத்தாண்டு வாழ்த்துகளைச் சொல்வதாகச் சேர்த்துக் கொள்ளலாமா’ என்று சரவணனிடம் அவர் கேட்டிருக்கிறார். இவரும் ‘சரி’ என்று சொல்லவே, ‘ஹேய் எவ்ரிபடி’ என்று உச்ச ஸ்தாயியில் ஒலித்திருக்கிறது அவரது குரல். அந்த இடத்தில் அவர் வெளிக்காட்டிய உற்சாகம், பாடல் முழுவதும் வெள்ளமாகக் கரை புரண்டு ஓடியிருக்கும்.
நிகழ்ந்த மாற்றங்கள்!

எஸ்.பி.பி பாடிய பிறகு அந்தப் பாடல் என்ன மாற்றங்களைச் செய்திருக்கும்? நிச்சயமாக, கொரியோகிராபர் புலியூர் சரோஜாவை அலற விட்டிருக்கும். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தனது ஒளிப்பதிவாளர் பாபு, படத்தொகுப்பாளர் விட்டல், கலை இயக்குனர் சலம் என்று அனைவரிடமும் இப்பாடல் குறித்து நிச்சயம் விவாதித்திருப்பார்.ஒவ்வொருவரும் ‘புத்தாண்டு பாடலாக’ இதனை மாற்ற என்ன செய்யலாம் என்று யோசித்திருப்பார்கள். அப்படித்தான், ஏற்கனவே ஒரு கன்னடப்படத்திற்காக இடப்பட்டிருந்த செட்டில் சிற்சில மாற்றங்களைச் செய்து ‘பைவ் ஸ்டார் ஹோட்டல்’ ஆக மாற்றியிருக்கிறார் சலம்.கமலின் ஆட்டத் திறமையை மனதில் கொண்டு கேமிரா நகர்வுகளை அமைத்திருக்கிறார் பாபு.
இந்தப் பாடலில் செட், நடனம், கமலின் பாவனைகள் என அனைத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் விட்டலின் படத்தொகுப்பு.
எஸ்.பி.பி முதன்முறையாக இந்த கம்போஸிங்கை இளையராஜாவின் குரலில் கேட்டபோது கூட, ‘இது இன்னொரு டிஸ்கோ பாடல்’ என்றுதான் நினைத்திருப்பார். ஆனால், தன்னார்வத்தோடு எஸ்.பி.பி. சேர்த்த ஒரே ஒரு வாக்கியம் அதனைக் காலாகாலத்திற்குமான புத்தாண்டு கொண்டாட்டப் பாடலாக மாற்றிவிட்டது.
இதன் விளைவு என்ன என்று கேட்கிறீர்களா? இன்றுவரை பல தமிழ் ரசிகர்களுக்குக் கமலின் பிற படங்கள் குறித்து தகவல் தெரியாவிட்டாலும், சகலகலா வல்லவன் குறித்து கண்டிப்பாகச் சில விஷயங்கள் தெரிந்திருக்கும். காரணம், இந்தப் பாடல் தான்.
முகத்தில் கொட்டிய ரத்தம்

இந்த பாடலில் நடனத்தின் போது, கமல்ஹாசன் உண்மையாகவே ஒரு கண்ணாடியை உடைப்பார். கமல்ஹாசன் கண்ணாடியை உடைச்சுகிட்டு வெளியே வந்தவுடன். முகத்தில் அடி பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. பின்னர், சிகிச்சை எடுத்துக் கொண்டு நடித்து கொடுத்துள்ளார். இது குறித்து நடன மாஸ்டர் புலியூர் சரோஜா கூறுகையில், சகலகலா வல்லவன் வெற்றி விழா நிகழ்ச்சியின் போது , மேடை ஏறிய என்னை கமல்ஹாசன் கையிலேயே தூக்கிட்டாரு. என்னை தூக்கிட்டாரு. மாமியாரே… கலக்கீட்டிங்க என்று மனதார பாராட்டினார் . அந்த பாடல் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கண்ணாடி உடைக்கும் காட்சியை பற்றி படத்தின் இயக்குநர் எஸ்.பி முத்துராமன் கூறுகையில், கண்ணாடி உடைக்கும் காட்சியை நான் டூப் போட்டுதான் எடுக்க திட்டமிட்டிருந்தேன். எங்கிட்ட வந்து அந்த காட்சியை எப்போ எப்போனு கமல் கேட்டுட்டே இருந்தான். நான் கடைசில வச்சுக்கலாம்னு சொன்னேன். டூப்பு போடாமல் அவனே உடைச்சுட்டு வெளியே வந்தான். பார்த்தா முகத்துல காயம்பட்டு ரத்தமா இருக்குது. உடனே , என் முன்னாடி நிக்காம ஓடி போய் விஜயா மருத்துவமனைல படுத்துகிட்டான். பின்னர், முகத்தில் தையல் போடாமல் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தோம் என்று நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
சென்னையில் தொடர்ந்து ஆயிரம் காட்சிகள் ‘ஹவுஸ்ஃபுல்’லாக ஓடிய பெருமையைக் கொண்டது ‘சகலகலா வல்லவன்’. அப்படத்தில் ரசிகர்களை ஈர்த்த பல விஷயங்கள் இருந்தாலும், அதிலொன்றாக இப்பாடலுக்கும் இடமுண்டு என்பதை மறக்க முடியாது.
‘பெரிய இடத்துப் பெண்’ உட்பட ஏற்கனவே வெளிவந்த சில தமிழ் படங்களின் சாயலைக் கொண்டது இப்படம். ‘கமலுக்காகவே நாங்க கதை, காட்சிகள் எழுதி உருவாக்குன படம் தான் இது. அந்த டைட்டில் கூட அவருக்காகவே வச்சதுதான்’ என்று பலமுறை பேட்டியளித்திருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

’இளமை இதோ இதோ’ பாடலை படமாக்கும்போது அவர் என்ன நினைத்திருப்பாரோ தெரியாது. ஆனால், அவரது அர்ப்பணிப்புமிக்க உழைப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்தப் பாடல் காலத்தோடு இயைந்து கலந்திருக்கிறது.
‘ஹேப்பி நியூ இயர்’ என்று கத்திக்கொண்டு எத்தனை பாடல்கள் தமிழ் திரையுலகில் ஒலித்தாலும், ஒவ்வொரு புத்தாண்டும் ‘இளமை இதோ இதோ’ என்று எஸ்.பி.பி குரலை காற்றில் நிறைத்துக்கொண்டுதான் விடியும்..!
உதய் பாடகலிங்கம்
யார் அந்த சார்? அமைச்சர்கள் யாரையோ காப்பாற்றுகிறார்கள் : எடப்பாடி குற்றச்சாட்டு!
தடையை மீறி போராட்டம்… நாம் தமிழர் நிர்வாகிகள் கைது : சீமான் கண்டனம்!