டைட்டில் ஹீரோவுக்கானதா, வில்லனுக்கானதா?
ஒரு படத்தின் டைட்டிலை பார்த்தவுடனே, அதனைக் கண்டு ரசிக்க வேண்டுமென்ற உள்ளுணர்வு பூக்க வேண்டும். அது, அந்த திரைப்படத்திற்கான வரவேற்பைப் பெற்றுத் தரும். சில வேளைகளில் அதுவே படத்திற்கு எதிரானதாகவும் மாறிவிடுவதுண்டு. இந்த தலைப்புக்கும் படத்தின் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க வைத்துவிடும் (முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் இதில் விதிவிலக்கு). அந்த வகையில், ‘சத்தமின்றி முத்தம் தா’ என்ற பெயரே இது ஒரு ரொமான்ஸ், ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் என்று கட்டியம் கூறியது. அதற்கேற்ப இப்படம் அமைந்துள்ளதா?
ஸ்ரீகாந்த், ஹரிஷ் பேரடி, பிரியங்கா திமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ராஜ்தேவ் இயக்கியுள்ளார். ஜுபின் இதற்கு இசையமைத்துள்ளார்.
’த்ரில்’ தரும் தொடக்கம்!
சந்தியா (பிரியங்கா திமேஷ்) என்றொரு பெண் சாலையில் அடிபட்டுக் கிடக்கிறார். காரில் வரும் ஒரு நபர் (ஸ்ரீகாந்த்), அந்த பெண்ணை அருகில் வந்து பார்த்ததும் மனம் பதைபதைக்கிறார். அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்கிறார். விபத்துக்குள்ளான பெண்ணின் பெயர் ‘சந்தியா’ என்றும், தான் அவரது கணவர் ‘ரகு’ என்றும் சொல்கிறார்.
கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பிறகு, ஓரளவுக்கு நடுமாடும் நிலையை எட்டுகிறார் சந்தியா. ஆனால், விபத்தில் கீழே விழுந்தபோது பின்னந்தலையில் அடிபட்டதால் சந்தியா தன்னைக் குறித்த நினைவுகளை இழந்துவிட்டதாகச் சொல்கிறார் மருத்துவர்.
சந்தியாவைத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் அந்த நபர். ஆனால், அவர் அடிபட்டது குறித்து அவர் போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில் இருந்து வழங்கப்பட்ட தகவலைக் கொண்டு இன்ஸ்பெக்டர் எட்வர்ட் (ஹரீஷ் பேரடி) விசாரணை மேற்கொள்ள வந்தபோது, அந்த நபர் நழுவிவிடுகிறார்.
வீடு திரும்பினாலும், அதனைத் தான் வாழ்ந்த இடமாகச் சந்தியாவால் எண்ண முடிவதில்லை. ’நீங்கள் தான் எனது கணவரா’ என்று கேட்பதில் இருந்தே, தன்னை அழைத்து வந்தவர் ரகுதானா என்று அவர் சந்தேகப்படுவது தெரிகிறது.
போலவே, சந்தியாவின் உடல் ஸ்பரிசத்தைத் தவிர்க்க முயற்சிக்கிறார் அந்த நபர். அது பற்றிச் சந்தியா கேட்கையில், ‘உனக்கு முழுசா ஞாபகம் வந்தபிறகு நீ இப்படி நடந்துக்கறதுதான் சரியா இருக்கும்’ என்கிறார்.
இந்த நிலையில், அந்த வீட்டில் தனது பள்ளிக்கால புகைப்படங்கள் இருக்கும் ஆல்பமொன்றை பார்க்கிறார் சந்தியா. அதில் தன்னுடன் இருப்பவர்களை எல்லாம் பார்த்து ரசிக்கும் சந்தியா, ‘நீ விக்னேஷ் தானே’ என்று அந்த நபரிடம் கேட்கிறார். ‘நீ எப்ப ரகுன்னு பேரை மாத்திக்கிட்ட, எப்ப என்னை கல்யாணம் பண்ணே’ என்று அவரிடம் பல கேள்விகள் கேட்கிறார். எதற்கும் அவர் பதில் சொல்வதில்லை.
அதேநேரத்தில், காவல் நிலையமொன்றில் தனது மனைவி சந்தியா காணாமல்போய் ஒரு மாதம் ஆவதாக ஒருவர் புகார் கொடுக்கிறார். அவரது பெயர் ரகு (வியான் மங்கலசேரி). அதனை அறிந்ததும், ரகுவைத் தேடிச் செல்கிறார் எட்வர்ட். விசாரணை முடிவில், ரகு ஏதோ ஒன்றை மறைப்பதாக அவர் உணர்கிறார்.
மருத்துவமனை சிசிடிவி பதிவுகளில் இருந்து சந்தியாவை அழைத்துச் செல்லும் நபர் யார் என்று போலீசாரால் கண்டுபிடிக்க முடிவதில்லை. ஆனால், மருத்துவமனை எதிரேயுள்ள ஒரு கட்டடத்தின் சிசிடிவியில் அந்த நபரின் உருவம் பதிவாகியிருப்பது கண்டறியப்படுகிறது. அதனைப் பார்க்கும் எட்வர்ட், ‘இவன் தான் நான் தேடிக்கிட்டு இருக்குற கில்லர்’ என்கிறார்.
விக்னேஷ் எனும் அந்த நபர் ஏன் சந்தியாவைக் கடத்த வேண்டும்? அவரிடம் தனது பெயர் ரகு என்று ஏன் சொல்ல வேண்டும்? உண்மையான ரகு போலீசாரைக் கொண்டு ஏன் பம்முகிறார்? இது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இப்படத்தின் மீதி.
வீட்டில் இருக்கும் சந்தியாவை ஒரு மர்ம நபர் கொல்ல முயற்சிக்க, அங்கிருந்து தப்பித்துச் சாலைக்கு வரும் அவர் மீது ஒருவர் காரை ஏற்றுவதாகப் படம் தொடங்குகிறது. ‘ஆரம்பமே அமர்க்களம்’ என்பது போல அடுத்தடுத்த காட்சிகளும் ’த்ரில்’ கூட்டுகின்றன. ஆனால், அதற்குப் பிறகு ’சவசவ’ என்று நகரும் திரைக்கதை இறுதி வரை அதே பாதையில் பயணிக்கிறது.
எல்லாமே இருந்தும்..!
’எல்லாமே இருந்தும் எதுவுமே இல்லாதது மாதிரி இருக்கு’ என்று சிலர் தங்களது வாழ்வு குறித்து விரக்தியடைந்து வசனம் பேசுவதைப் பழைய படங்களில் பார்த்திருப்போம். ‘சத்தமின்றி முத்தம் தா’ பார்த்தபிறகு நாம் அதே வார்த்தைகளைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
படத்தில் ஒவ்வொரு பிரேமையும் அழகுறக் காட்ட முயற்சித்திருக்கிறது எம்.யுவராஜின் ஒளிப்பதிவு. கேமிரா நகர்வுகள் அனைத்தும் ஒரு ‘த்ரில்லர்’ படத்துக்கானதாக அமைந்துள்ளன. டிஐ உள்ளிட்ட நுட்பங்களும் கூட, ஒவ்வொரு பிரேமையும் அழகூட்ட முயற்சித்திருக்கின்றன.
திரையில் தொய்வு தெரிந்துவிடக் கூடாது என்று ‘செறிவாக’ ஷாட்களை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜி.மதன்.
இசையமைப்பாளர் ஜுபின் தந்திருக்கும் ’செம்பரம்பாக்கம் ஏரி போல’ பாடலைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், ‘இது ஓகே ரகம்’ என்றே தோன்றும். ஆனால், தாமரை இலையில் ஓடும் தண்ணீர் போலத் திரைக்கதையுடன் பொருந்தாமல் அது துருத்திக் கொண்டு நிற்கிறது.
ஜுபின் அமைத்துள்ள பின்னணி இசை கூடப் பெரும்பாலான காட்சிகளில் பரபரப்பை அதிகப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
என்னதான் அலங்காரங்கள் அற்புதமாக இருந்தாலும், உள்ளடக்கம் சரியாக இருந்தால் மட்டுமே எந்தவொரு படைப்பும் நம் மனதில் பதியும். அந்த இடத்தில்தான் ரொம்பவே தடுமாறியிருக்கிறார் இயக்குனர் ராஜ்தேவ். கதையின் ‘அவுட்லைனை’ கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தவர், கதாபாத்திரங்களையும் களங்களையும் சரிவர வடிவமைக்காமல் நம்மைப் பாடாய் படுத்துகிறார்.
இந்த படத்தில் நாயகனாக ஸ்ரீகாந்தும் நாயகியாக பிரியங்கா திமேஷும் நடித்துள்ளனர். இன்ஸ்பெக்டராக தோன்றியுள்ள ஹரீஷ் பேரடி பெரும்பாலான காட்சிகளில் இடம்பெறுகிறார். வியன் மங்கலசேரி, நிகாரிகா பத்ரோ இருவரும் பின்பாதியில் அதிகம் வந்து போகின்றனர்.
பிரதானமாக வரும் இவர்கள் ஐந்து பேரைத் தாண்டி பத்து பேர் திரையில் தோன்றியிருந்தால் அதிகம் என்பதாகவே திரைக்கதையின் நிலைமை உள்ளது. ஆனால், பல ஆயிரம் பேர் நடமாடும் உலகினில் இவர்கள் ஐந்து பேரும் வாழ்வதாகச் சொல்கிறது படத்தின் கதை. அந்த இடத்தில் தோன்றும் முரண், வசனங்களைக் கேலிக்குரியதாக்கி இவர்களது நடிப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
களத்தை மாற்றியமைத்திருக்கலாம்!
இதற்கு மேல் இடம்பெறும் தகவல்கள் எல்லாம் ‘ஸ்பாய்லர்’ ரகத்தில் சேரும்.
‘ஒரு ஊர்ல ஒரு கில்லர் இருப்பாராம். அவரைப் பிடிக்கறது மட்டுமே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வேலையா இருக்குமாம். அந்த நேரத்துல ஒரு பொண்ணு விபத்துல அடிபட்ட கேஸ் வர, அதைப் பத்தி அவரு விசாரிக்க ஆரம்பிப்பாராம்.
அந்த பொண்ணுகிட்ட ‘நான் தான் உன்னோட புருஷன்’னு சொல்லி கூட்டிகிட்டுப் போனதே அந்த கில்லர்தான்னு அப்புறமா தான் தெரியுது. பொறவு என்ன, அந்த பொண்ணைக் கண்டுபிடிச்சு அந்த கில்லரை கொல்றதுதான் அந்த இன்ஸ்பெக்டரை கடமையா ஆயிருது. வேற வேலை வெட்டி எதையும் பார்க்காம, அதை அவர் செஞ்சாரா இல்லையா? இந்த கதை எவ்ளோ புதுசா இருக்கு’ என்று முன் பெஞ்சில் படம் பார்க்கும் ரசிகர் எளிதாக விவரிக்கும் அளவுக்கு ‘சத்தமின்றி முத்தம் தா’ திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ராஜ்தேவ். ஆனால், அந்த ‘டைமிங்’ என்ற வஸ்து மட்டும் அவர் வசப்படவில்லை. அதுவே மொத்தப் படத்தையும் கிண்டலுக்கு உள்ளாக்குகிறது.
‘இந்த இன்ஸ்பெக்டருக்கு வேற கேஸே கிடையாதா’ என்ற கேலிக்குரல் தியேட்டரில் எதிரொலிப்பது படத்தின் மைனஸ்.
இதே கதையைப் பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லாத மலைப்பிரதேசத்தில் அல்லது பசுமையான இயற்கைப் பரப்பில், மிகச்சில மனிதர்கள் மட்டும் வாழ்வதாகக் காட்டியிருந்திருக்கலாம். பல அலுவல்களுக்கு இடையே மீண்டும் மீண்டும் இந்த வழக்கின் விசாரணையில் ஈடுபட வேண்டிய கட்டாயம் அந்த இன்ஸ்பெக்டருக்கு ஏற்படுவதாகச் சொல்லியிருக்கலாம்.
மிக முக்கியமாக, நாயகன் ஒரு கூலிப்படை கொலையாளி என்பதைத் திரைக்கதையின் நடுவே ஒரு ரகசியமாகப் புதைத்து வைத்திருக்கலாம். அவையனைத்தும் நம் மனதில் பட்ட குறைகளை மட்டுப்படுத்தியிருக்கும். அது நிகழாமல் போனதால், இப்படி ஆதங்கப்பட வேண்டியிருக்கிறது. அந்த வகையில், புதிதாகப் படம் இயக்க நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாகவும அமைந்திருக்கிறது.
இந்த படத்தில் ஹரீஷ் பேரடி, வியான், நிகாரிகா பேசும் வசனங்களில் பல ஆங்கிலத்தில் அமைந்துள்ளன. ’தமிழில் அதே வசனங்களைப் பேசினால் க்ளிஷேவாக தெரிந்துவிடுமோ’ என்ற பதற்றத்தில் இயக்குனர் அவ்வாறு மாற்றம் செய்திருக்கலாம். பூவை ‘பூ’ என்றாலும், ‘புய்ப்பம்’ என்றாலும், அதை முகர்ந்து பார்ப்பவரிடம் எந்த மாற்றமும் இருக்காது என்பதே நிதர்சனம்.
அனைத்தையும் தாண்டி, ‘சத்தமின்றி முத்தம் தான்னு இந்த படத்துக்கு ஏன் பேர் வச்சாங்க’ என்ற கேள்வி முந்திக்கொண்டு மேலெழுகிறது. படத்தில் ஹீரோ சத்தமின்றி தரும் முத்தம் ஒரு பாடலோடு முடிந்துவிடுகிறது. வில்லன் தரும் சத்தமான முத்தமே மொத்தக் கதைக்கும் காரணமாக இருக்கிறது; அவர் மட்டும் சத்தமின்றி முத்தம் தந்திருந்தால் இந்த கதைக்கான தேவையே இருந்திருக்காது. அது நமக்குப் பிடிபடுவதற்குள் படமே முடிந்துவிடுகிறது..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
’எந்த தொகுதி கொடுத்தாலும் ஜெயிப்போம்!’ : ஜவாஹிருல்லா
விளவங்கோடு திருக்கோவிலூரில் இடைத்தேர்தலா? : சத்யபிரத சாகு பதில்!