நிஜ வாழ்க்கையில் ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், திரைப்படங்களில் இன்னொரு மனிதராகத் தெரிவார். அதுதான் சினிமா செய்யும் மாயாஜாலம். அப்படியொரு வித்தையைத் திரையில் துல்லியமாகப் பிரதிபலித்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவருக்கு முன்னும் பல நடிகைகள் தங்கள் அழகாலும் நடிப்பாலும் திரைத்துறை இலக்கணங்களுக்கு ஏற்ற குணநலன்களாலும் சாதனையாளர்களாகத் திகழ்கின்றனர்; ஆனால், அவர்களில் ஒருவரைக் கூட ஸ்ரீதேவிக்கு இணையாகச் சொல்ல முடியாது. அதுதான் அவரது தனித்துவம்.
கடினமான பின்னணி!
’கந்தன் கருணை’ படத்தில் அறிமுகமானபோது, ஸ்ரீதேவியின் வயது 4. தான் நடிகையாக முடியவில்லையே என்றிருந்த தாய் ராஜேஸ்வரியின் எண்ணமே, மகளைத் திரைத்துறையில் அறிமுகப்படுத்தும் விருப்பமாக மாறியது. அந்தப் படத்தில், சிறு வயது முருகன் பாத்திரத்தில் நடித்தார் ஸ்ரீதேவி. முருகன் அல்லது அழகு என்ற திரு.வி.க.வின் நூல் தலைப்புக்கேற்ப, அந்த படத்தில் அவர் தோற்றம் இருக்கும். அதன்பிறகு, எம்ஜிஆருடன் நடித்த ‘நம் நாடு’ உட்படப் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக இடம்பிடித்தார் ஸ்ரீதேவி. அவற்றில் பல புராண பாத்திரங்கள்.
குழந்தை நட்சத்திரமாக நடிப்பவர்கள், பதின்ம வயதில் கடினமான காலத்தை எதிர்கொள்வார்கள். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அந்த நியதியை மீற முடியாது. ஒருவேளை உருவ, குரல் மாற்றங்கள் சிறப்பாக அமைந்தால் நாயகனாகவோ, நாயகியாகவோ ‘புரோமோஷன்’ பெறலாம். அந்தச் செயல்முறையில் கொஞ்சம் பிசகினாலும், திரைத்துறை அனுபவங்கள் எல்லாம் கடந்த கால நினைவுகளாகி விடும். அப்படியொரு இக்கட்டில் ஸ்ரீதேவி சிக்கவே இல்லை. 1976இல் ’தசாவதாரம்’, ‘மூன்று முடிச்சு’ என்று இரு படங்களில் நடித்தார் ஸ்ரீதேவி. முதலாவதில் சீதையாகவும், இரண்டாவதில் செல்வி எனும் இளம்பெண்ணாகவும் நடித்தார். அப்போது, அவரது வயது 13. அந்த வயதில் ஒரு பெண் நாயகியாக நடிப்பதென்பது சாதாரண விஷயமல்ல. ஆனாலும், தொடர்ந்து படப்பிடிப்புத்தளங்களை மட்டுமே பார்த்துவந்த ஸ்ரீதேவிக்கு அது மலைப்பைத் தரவில்லை. அதனால்தான், அந்த படத்தில் அவரது தோற்றம் பதின்ம வயதுக்குரிய அப்பாவித்தனத்தைப் பிரதிபலித்தாலும், அவரது நடிப்பு அதற்கு அப்பாற்பட்டதாக அமைந்தது.
சமீபத்தில் நடந்த நடிகை மீனாவுக்கான பாராட்டு விழாவொன்றில், திரையுலகில் தனக்குப் பிடித்த நடிகைகள் என்று அவரையும் ஸ்ரீதேவியையும் குறிப்பிட்டிருந்தார் ரஜினிகாந்த். அப்போது, ‘மூன்று முடிச்சு’ படத்திற்காக இயக்குனர் கே.பாலச்சந்தரை முதன்முறையாகப் பார்க்க வந்தபோது ‘டீச்சர்’ என்று அவர் விளித்ததையும் நினைவு கூர்ந்திருந்தார். அதுவே, ஸ்ரீதேவிக்கு சினிமா உலகமே பள்ளியாகவும் கல்லூரியாகவும் விளங்கியதென்பதைச் சொல்லும். அந்த காலகட்டத்தில், மிகச்சாதாரணமான ஒரு வீட்டிலேயே ஸ்ரீதேவி தன் குடும்பத்தினரோடு வசித்திருக்கிறார். அப்படியொரு கடினமான பின்னணியில் இருந்து வந்தவர், பிற்காலத்தில் பேஷன் உலகின் அடையாளமாகவும் இந்தி திரையுலகின் பெண் சூப்பர்ஸ்டாராகவும் மாறியது ஸ்ரீதேவியின் தனித்துவத்திற்கான அங்கீகாரம்.
தெற்கு டூ வடக்கு!
நாயகியாக நடித்த முதல் படத்திலேயே கமல், ரஜினி இருவரோடும் சேர்ந்து நடித்தார் ஸ்ரீதேவி. அதற்கடுத்த சில ஆண்டுகளில் அவர்களிருவருமே தென்னிந்திய சினிமாவின் தவிர்க்கவியலா அடையாளங்களாக மாறினார்கள். அந்த கால இடைவெளியில், தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யத்தையே இந்தி திரையுலகில் உருவாக்கியிருந்தார் ஸ்ரீதேவி.
எழுபதுகளின் இறுதியில் முன்னணி நாயகர்களாகத் திகழ்ந்த சிவாஜி, ஜெய்சங்கர், விஜயகுமார், சிவகுமார், ஜெய்கணேஷ் போன்றவர்களோடு ஜோடி சேரும் வாய்ப்புகளை அவர் ஏற்கத் தயங்கவில்லை. மூத்த நாயகர்கள், இளம் நாயகர்கள் என்ற வித்தியாசத்தை நோக்கவில்லை. தெலுங்கில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் ஆகியோரோடு சேர்ந்து நடித்தவர், பின்னாட்களில் அவர்களது மகன்கள் பாலகிருஷ்ணா, நாகார்ஜுனாவோடும் ஜோடி சேர்ந்தார். ரசிகர்களும் அதனை ஏற்கத் தயங்கியதே இல்லை. காரணம், அந்தந்த படங்களில் உடன் நடிக்கும் நாயகர்களுக்கேற்ற திரை இருப்பை அவர் வெளிப்படுத்தியதுதான். இன்று, நாம் சொல்வது போல ‘ஹீரோ – ஹீரோயின் கெமிஸ்ட்ரி’ என்ற வார்த்தைகளுக்கு ஸ்ரீதேவி வேலை கொடுத்ததே கிடையாது.
‘16 வயதினிலே’ படத்தை, 1979இல் ‘சொல்வா சாவன்’ என்ற பெயரில் இந்தியில் பாரதிராஜா ரீமேக் செய்தார்; அதிலும் நாயகியாக ஸ்ரீதேவியே நடித்தார். அதன்பிறகு நான்காண்டுகள் கழித்து ‘மூன்றாம் பிறை’ இந்தி பதிப்பான சத்மா, ஹிம்மத்வாலா படங்கள் வெளியாகின. அவற்றின் வெற்றி ஸ்ரீதேவியை நிரந்தரமாகப் பம்பாயில் குடியேற்றியது. அதே காலகட்டத்தில், தமிழில் ‘சந்திப்பு’, ‘அடுத்த வாரிசு’ படங்களில் மட்டுமே நடித்தார் ஸ்ரீதேவி. 1986இல் வெளியான ‘நான் அடிமை இல்லை’ படத்தில் ரஜினியோடு தோன்றினார். அதற்குப் பிறகு ‘புலி’யின் வழியே மீண்டும் தமிழில் முகம் காட்டினார்.
அதேநேரத்தில், அவர் தெலுங்கு படங்களில் நடிக்கத் தயங்கவே இல்லை. அதற்கான காரணம் அவருக்கு மட்டுமே வெளிச்சம். ஸ்ரீதேவியின் சமகாலப் போட்டியாளராகக் கருதப்பட்ட ஜெயப்ரதா, அப்போது தமிழில் முகம் காட்டாமல் தெலுங்கு, இந்திப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அவருக்குச் சவாலாகத் திகழ வேண்டும் என்ற உந்துதலில் கூட, ஸ்ரீதேவி அப்படியொரு முடிவை மேற்கொண்டிருக்கலாம்.
அதன் விளைவாக, ஸ்ரீதேவி நடித்த தெலுங்கு, இந்திப் படங்களின் டப்பிங் பதிப்புகளையும், ‘தேவராகம்’ எனும் மலையாளப் படத்தையும் காணும் வாய்ப்பே நமக்குக் கிடைத்தது.
குறும்பு பாவனைகள்!
பிரபுதேவாவின் படங்களைப் பார்த்தால், அவருடன் ஜோடி சேர்ந்தாடிய பல நாயகிகள் ‘க்யூட் எக்ஸ்பிரஷன்’களை திரையில் வெளிப்படுத்தியதைக் காண முடியும். குஷ்பூ, ரோஜா, நக்மா தொடங்கி, இன்று அவரோடு டூயட் பாடியுள்ள தமன்னா, அமைரா தஸ்தூர் வரை அதுவே நிகழ்ந்திருக்கிறது. நாயகிகளின் நடனத்தோடு, அந்த பாவனைகளும் சேரும்போது ‘ஆஹா’ என்றிருக்கும். ‘அப்படியா, நான் பார்த்ததில்லையே’ என்பவர்கள், ‘ஏழையின் சிரிப்பில்’ படத்தில் வரும் ‘கருகரு கருப்பாயி..’ பாடலைத் தேடி ரசிக்கலாம்; அது போன்று பல உதாரணங்கள் உண்டு. அவ்வாறு பிரபுதேவாவோடு ஆடிய அனைத்து நாயகிகளிடமும் நாம் ஸ்ரீதேவியின் சாயலைப் பார்க்க முடியும்.
ஆமாம், பாடல் காட்சிகளில் நடிகை ஸ்ரீதேவி வெளிப்படுத்திய உதட்டுச்சுழிப்புக்கும் கோணல் பார்வைக்கும் கோணாங்கிச் சேட்டைகளுக்கும் பயங்கரமான அடிமை அவர். அந்த ‘ட்ரிக்’கின் பின்னணியில் சரோஜ்கான் போன்ற இந்தி சினிமா டான்ஸ்மாஸ்டர்கள் இருக்கலாம். ஆனாலும், நாம் அப்பாவனைகளால் கட்டுண்டு போகக் காரணம் ஸ்ரீதேவியே..
ஸ்ரீதேவியின் நடனத்தாலும் அபாரமான பாவனைகளாலும் ஈர்க்கப்பட்ட பிரபுதேவா, தொண்ணூறுகளில் அவரை ஆட்டுவித்தார். ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’, ‘ஷணா ஷணம்’, ‘கோவிந்தா கோவிந்தா’ படங்களின் பாடல்களில் குறும்பு பாவனைகளால் நம்மை ஒருவழியாக்கி விடுவார் ஸ்ரீதேவி. அவையனைத்தும் பிரபுதேவா எனும் ரசிகரின் மனமாச்சர்யத்தைச் சொல்லும்.
அப்படி ஸ்ரீதேவி நடித்த பாடல்கள் அனைத்தையும் அடுத்தடுத்துப் பார்க்கும் ஒருவருக்கு, ‘குறும்புகளின் பெண் முகம் இவர்’ என்று தோன்றாமலிருந்தால் தான் ஆச்சர்யம். இல்லை என்பவர்கள் ‘மிஸ்டர் இந்தியா’, ‘சால்பாஸ்’, ‘சாந்தினி’, ‘ஜுடாயி’ என்று பல படங்களை உற்றுநோக்கலாம். தமிழில் கூட ‘குரு’, ‘மூன்றாம் பிறை’, ’போக்கிரி ராஜா’, ‘வாழ்வே மாயம்’ உட்படப் பல படங்களின் பாடல் காட்சிகள் அந்த உண்மையை உரக்கச் சொல்லும்.
புதிரான பெண்மணி!
திரையில் எவ்வளவுக்கெவ்வளவு ஆர்ப்பாட்டமும் குதூகலமும் மிகுந்தவராக வெளிப்பட்டாரோ, சொந்த வாழ்க்கையில் அதற்கு நேரெதிரான குணநலன்களுக்காக அறியப்படுபவர் ஸ்ரீதேவி. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் திரையுலகில் கோலோச்சிய பலர், அவரைக் குறித்த தங்களது உரையாடல்களில் ‘அமைதியாக இருப்பார்’, ‘யாருடனும் பேசமாட்டார்’, ‘பிறருடன் நெருங்கிப் பழகமாட்டார்’ என்றே குறிப்பிடுகின்றனர். அது ஸ்ரீதேவியின் சுபாவமாக இருந்ததில் தவறில்லை. அதேநேரத்தில், சினிமா தொடர்பான விழாக்களில் கலந்துகொண்டபோதும் மேடையேறியபோதும் அவர் தனது திரை பிம்பத்தையே பிரதிபலிக்க விரும்பினார். பெரும்பாலான மனிதர்கள் விரும்புவது போல, தொழில் வாழ்க்கைக்கும் தனிப்பட்ட விருப்பங்களுக்குமான இடைவெளியைக் காக்க விரும்பினார். அதுவே, ‘புதிர் போன்றவர்’ எனும் எண்ணத்தை ஊடக உலகில் உண்டாக்கியது. 2018ஆம் ஆண்டு அவர் மரணமடைந்தபிறகும் அது தொடர்ந்தது.
இன்றும், ஸ்ரீதேவி நடித்த ஏதோ ஒரு காட்சியை, பாடலைப் பார்க்கும்போது நம் மனது சிறகடிக்கிறது. வணிகப்படங்கள், கலைப்படங்கள் என்ற வேறுபாட்டைத் தாண்டி, ஆகச்சிறந்த கலைஞர்களால் மட்டுமே அப்படிக் காலம் கடந்தும் ரசனைக்கு உள்ளாக முடியும். அதில் ஒருவராகத் திகழும் ஸ்ரீதேவிக்கு இன்று 60வது பிறந்தநாள். ரசிகர்கள் மட்டுமல்ல, சமகாலக் கலைஞர்களும் கூட அவரை ஆராதித்துக் கொண்டாடியிருக்க வேண்டிய நாள் இது. என்றென்றும் தன்னைத் திரையில் கண்டு கொண்டாட வேண்டுமென்று விரும்பியவர் ஸ்ரீதேவி. இன்று டிவியிலும் மொபைலிலும் இன்னபிற சாதனங்களின் திரைகளிலும் அவரைக் கண்டு ரசிக்கும் தருணங்களை, ஆராதிக்கும் மனங்களை, பிரபஞ்சத்தின் ஏதோ ஒருபுள்ளியில் நின்றுகொண்டு அவரது ஆன்மா பார்த்து ஆனந்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும். அப்போதும், திரையில் தெரியும் அழகைக் கண்டு அவரே மயங்கிப் போவது நிச்சயம்!
உதய் பாடகலிங்கம்
“மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகே நீட் விலக்கு”: திருச்சி சிவா