ஒரு ‘மினி பட்ஜெட்’ பேண்டஸி படம்!
’வாழ்க்கையில் மிகப்பெரிய லட்சியங்களை நோக்கிப் பயணிக்கும்போது சின்னச் சின்ன மகிழ்ச்சிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது’ என்கிற ’டயலாக்’கை சிலர் சொல்லிக் கேட்டிருப்போம். அப்படிச் சொல்கிறவர்களும் கூட, அப்படிப்பட்ட சிறிய விஷயங்களுக்காக நேரம் ஒதுக்கத்தான் செய்வார்கள். ஏனென்றால், அதுவே ஒருவரை இயல்பு கெடாமல் இருக்கச் செய்யும்.
அதனை மீறிப் பெரும் லட்சியங்களே தனக்கானது என்று சுற்றியிருக்கும் மனிதர்களையும் இயற்கையையும் அலட்சியம் செய்வது முழுமையான வாழ்வனுபவத்தைத் தராது. இது போன்ற கருத்தாக்கத்தை எழுத்தில் கொணர்வது எளிது. அதையே கருப்பொருளாக்கி ஒரு திரைப்படமாக முனைந்திருக்கிறது ‘ராக்கெட் டிரைவர்’ படக்குழு.
ஸ்ரீராம் அனந்தசங்கர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஸ்வத், சுனைனா, நாக விஷால், காத்தாடி ராமமூர்த்தி, ஜெகன், ராமச்சந்திரன் துரைராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கருத்து சொல்கிற இந்தப் படம் ‘கருத்தாக’ இருக்கிறதா?
வித்தியாசமான கற்பனை!
ராக்கெட் நுட்பத்தைச் செயல்படுத்தும் விஞ்ஞானியாக வேண்டும் என்பது பிரபாகரின் (விஸ்வத்) ஆசை. ஆனால், அவரது தந்தையோ ‘இந்தா, இதை வச்சு பொழச்சுக்கோ’ என்று ஒரு ஆட்டோவை கொடுக்கிறார்.
கல்லூரியில் படிக்க இடம் தராத குடும்பச் சூழல். ‘இந்த வேலைய செஞ்சாத் தான் சோறு’ என்கிற நிலைமை. அதனால், வேண்டா வெறுப்பாக ஆட்டோ ஓட்டுகிறார் பிரபாகர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அவரையே ஆதர்சமாகக் கொண்டு வாழ்கிறார். ’பெரிதாகக் கனவு காணுங்கள்’ என்கிற அவரது வார்த்தைகளே பிரபாகரை ஊக்கப்படுத்துகிற ‘டானிக்’.
ஆனால், அதனைச் செயல்படுத்த முடியாமல் போனதில் இருந்து எப்போதும் எரிச்சலாகவே தென்படுகிறார். ஒருகட்டத்தில் அருகில் இருப்பவர், எதிரே நிற்பவன், போனவர், வந்தவர் என்று எல்லாரிடமும் அதனை வெளிக்காட்டுகிறார்.
பிரபாகரோடு நட்பு பாராட்டுபவர் ட்ராபிக் கான்ஸ்டபிளான கமலா (சுனைனா). அவரோடும் அதே அணுகுமுறையைத்தான் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஒருநாள் தற்செயலாக ஒரு பதின்ம வயதுச் சிறுவனைப் பார்க்கிறார் பிரபாகர். கருப்பு உருவம், நீண்ட தலைமுடி, பொருத்தமற்ற உடைகள், கையில் பழைய தகரப் பெட்டியோடு இருக்கிறார் அச்சிறுவன்.
வழக்கம்போல, வேண்டாவெறுப்பாக அவருக்கு உதவி செய்ய முயல்கிறார். அவரை மெட்ராஸ் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு, தனது பெயர் ‘அப்துல் கலாம்’ என்று சொல்கிறார் அந்தச் சிறுவன். அதனைக் கேட்கும் பிரபாகருக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. ஏனென்றால், அவர் சொல்கிற விவரங்கள் அனைத்துமே அப்துல் கலாமின் வாழ்வில் நிகழ்ந்தவை.
அதையடுத்து, காலத்தைக் கடந்து 1948இல் இருந்து 2024ஆம் ஆண்டுக்கு கலாம் வந்திருப்பதாக உணர்கிறார். முதலில் இதனைக் கமலாவிடம் சொல்கிறார். அவர் நம்புவதாக இல்லை.
கலாமை ஒரு விஞ்ஞானியாக, அறிவியல் சாதனையாளராகவே பிரபாகர் காண்கிறார். ஆனால், அவரோ தன்னளவில் ஒரு பள்ளி மாணவராகவே இருக்கிறார். மீண்டும் தனது தாயைப் பார்க்க வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது.
அதனை எப்படிச் சாத்தியப்படுத்துவது என்று தெரியாமல் முழிக்கிறார் பிரபாகர். அதற்காகத் தனக்குத் தெரிந்த சிலரை அணுகுகிறார். அவர்களும் சரியான பதிலைச் சொல்வதாக இல்லை.
பிறகு, ’பேய் படங்களில் வருவது போல நீங்கள் காலம் கடந்து வந்ததற்கும் ஏதாவது காரணம் இருக்கும்’ என்று கலாமிடம் சொல்கிறார் பிரபாகர். இருவரும் அதற்கான காரணங்களை அலசத் தொடங்குகின்றனர்.
கலாம் தான் தவறவிட்ட ஏதோ ஒரு விஷயத்தைக் கண்டறிந்தாக வேண்டுமென்ற வேட்கையோடு இருக்கிறார். பிரபாகரோ ‘கலாமின் அறிவியல் கண்டுபிடிப்பு தொடர்பான விஷயங்களில் ஏதோ ஒன்றை அவர் செய்ய மறந்திருக்கலாம்’ என்று கருதுகிறார்.
இருவரது முயற்சிகளும் பலனளிக்காமல் போக, இருவரும் பேருந்து ஏறி ராமேஸ்வரம் செல்கின்றனர். அங்கு கலாமின் பால்ய நண்பர் சாஸ்திரியை (காத்தாடி ராமமூர்த்தி) காண்கின்றனர்.
அதன்பிறகாவது இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கிடைத்ததா, கலாம் மீண்டும் கடந்த காலத்திற்குச் சென்றாரா என்று சொல்கிறது ‘ராக்கெட் டிரைவர்’ படத்தின் மீதி.
உண்மையைச் சொன்னால், இது ஒரு வித்தியாசமான கற்பனை. மிகச் சுவையானதும் கூட. அதேநேரத்தில், எழுத்தில் எளிதாக இருக்கும் இக்கற்பனையைத் திரைப்படம் ஆக்குவது சுலபம் அல்ல.
அதுவும் குறைந்த பட்ஜெட்டில் அதனைச் சாத்தியப்படுத்துவது மிகக்கடினம். அப்படியொரு முயற்சியைச் செய்து பார்த்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீராம் அனந்தசங்கர். அதுவே இப்படத்தின் மாபெரும் ப்ளஸ்.
ஈர்க்கும் ‘பேண்டஸி’!
இந்தப் படத்தில் பிரபாகர் என்ற முதன்மை பாத்திரமாகத் தோன்றியிருக்கிறார் விஸ்வத். எரிச்சல், விரக்தி, வேதனையை மிகச்சாதாரணமாகத் திரையில் வெளிக்காட்டியிருக்கிறார். அதேபோலத் தான் அப்துல் கலாமைச் சந்தித்துவிட்டதாக உணர்கிற காட்சியில் அவரது நடிப்பு அருமை. அடுத்தடுத்த படங்களில் குறிப்பிடத்தக்க நடிகராக வெளிப்படுவார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது இப்படம்.
ட்ராபிக் கான்ஸ்டபிளாக வரும் சுனைனாவுக்கு அதிகக் காட்சிகள் இல்லை. ஆனால், தோன்றும் இடங்களில் எல்லாம் நம்மை வசீகரிக்கிற அளவுக்கு நடித்திருக்கிறார். அப்பாத்திரத்தின் பின்னணியை விளக்குகிற காட்சிகளையும் இடம்பெறச் செய்திருந்தால் ’இம்பாக்ட்’ அதிகமாகியிருக்கும்.
’கேடி என்ற கருப்புதுரை’ திரைப்படத்தில் மு.ராமசாமியோடு மல்லுக்கட்டும் சிறுவனாக நடித்த நாக விஷால், இதில் கலாம் ஆக வருகிறார். அப்பாவித்தனம், மிரட்சி, மேதைமையான சிந்தனையை வெளிப்படுத்தும்போது, ‘நான் தான் கலாம்’ என்று உணர வைக்கிறார்.
இந்தப் படத்தில் காத்தாடி ராமமூர்த்தியின் இருப்பு மிக முக்கியமானது. ‘டேய்..’ என்று பதின்ம வயதுச் சிறுவன் ஒருவன் எண்பது வயது முதியவரைப் பார்த்துக் கூப்பிடும்போது, அருகில் இருப்பவர்கள் துணுக்குறுவது இயல்பு. அந்தக் காட்சியில், அவர் அந்த முதியவர் பாத்திரத்தின் எண்ணவோட்டத்தைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
எதிரே நிற்பது இளம் வயதில் தான் பார்த்த நண்பன் என்று தெரிந்ததும், அவரது குரலும் உடல்மொழியும் மாறுகிற தொனி அசத்தல். அதன்பிறகு, ‘கலாம் காலம் கடந்து வந்திருக்கிறார்’ என்ற எண்ணத்தை நம்முள் ஆழப் பதித்து விடுகிறது அவரது நடிப்பு.
ஜெகன், ராமச்சந்திரன் துரைராஜ் போன்றோர் இதில் ஒரு காட்சியில் தோன்றியிருக்கின்றனர். அவர்களது இருப்பும் நினைவில் கொள்ளும்விதமாகவே இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரெஜிமெல் சூர்யா தாமஸ், படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன், வடிவமைப்பாளர் பிரேம் கருந்தமலை உட்படத் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் இயக்குனர் வேலை வாங்கியிருக்கும் விதம் வழக்கத்திற்கு மாறான திரையனுபவத்தைத் தருகிறது.
இசையமைப்பாளர் கௌஷிக் கிரிஷ், தனது பின்னணி இசையால் மெலிதான நகைச்சுவையை நாம் உணரச் செய்கிறார். ‘சிரிக்கலாமா வேண்டாமா’ என்று நம்முள் இருக்கும் தயக்கத்தை அது உடைத்தெறிகிறது.
இயக்குனர் ஸ்ரீராம் அனந்தசங்கர் கொஞ்சம் வித்தியாசமான கதை சொல்லலைக் கையாண்டிருக்கிறார். திரைக்கதை, வசனங்களை ஆக்குவதில் அவருடன் அக்ஷய் பொல்லா, பிரசாந்த் இணைந்து பணியாற்றியிருக்கின்றனர்.
பெரிதாகப் பிசகுகளோ, துருத்தல்களோ இல்லாமல், எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்தை நேர்த்தியாகக் காட்சியாக்கம் செய்கிற வகையில் இவர்களது எழுத்தாக்கம் அமைந்திருப்பது சிறப்பு.
இதில் லாஜிக் மீறல்கள் உண்டு. பதின்ம வயதில் இருக்கும் ஒருவர், வாழ்வின் கரைகளைக் கண்டவர் போன்று பேசுகிற இடங்கள் அதனை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அந்த இடங்களைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம்.
நெஞ்சைத் தொடுகிற சென்டிமெண்ட், விழுந்து விழுந்து சிரிக்கிற காமெடி, உணர்வெழுச்சியூட்டும் வசனங்கள், உண்மைக்கு நெருக்கமான பாத்திரச் சித்தரிப்பு என ‘ஹிஸ்டாரிகல் பேண்டஸி’ படங்களுக்கே உரிய உள்ளடக்கத்தைத் தவிர்த்து வேறுவிதமாகக் கதை பேசுகிறது.
இயக்குனரின் இந்த பாணி தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதாக இருக்கலாம். ஆனால், அதுவும் சுவையாகத்தான் தெரிகிறது.
’டைம் ட்ராவல்’ கதையாக்கத்தில் மிகச்சில படங்கள் இதற்கு முன்னர் வந்திருக்கின்றன. அவற்றை ஒப்பிடுகையில், மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவானது இதுவாகத்தான் இருக்கும். இரண்டையும் சாத்தியமாக்கிய வகையில் கவனத்தை ஈர்க்கிறார் ஸ்ரீராம் அனந்தசங்கர்.
முதியவரை ஒருமையில் பேசுவது, ஒரு சாதனையாளரின் பால்யத்தை தன்னிஷ்டத்துக்கு கற்பனை செய்திருப்பது என்று இதில் விவாதத்திற்குரிய சில விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
போலவே, மெதுவாக நகரும் காட்சிகள் மட்டுமல்லாமல், ‘வாழ்வில் சிறிய விஷயங்களும் அவசியம்’ என்று சொல்கிற கருத்தாக்கமும் பலருக்கு உவப்பற்றதாக இருக்கலாம். அவற்றைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்பவர்களுக்கு இந்த ‘ராக்கெட் டிரைவர்’ பிடிக்கும். பெயரில் ’ராக்கெட்’ இருந்தாலும், இப்படம் தருவதென்னவோ சுகமான ‘ரோடு ரோலர்’ பயண அனுபவம் தான்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
போலி நீதிமன்றம்… போலி நீதிபதி… இப்படியும் நடக்குமா?
சென்னை பெண்களுக்காக ‘பிங்க் ஆட்டோ’ : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?