இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை பத்மஸ்ரீ ஸ்ரீதேவியின் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 24) அனுசரிக்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் இந்திய திரையுலகில் அசைக்கமுடியாத நட்சத்திரமாக உருவெடுத்தவர் நடிகை ஸ்ரீதேவி.
அழகு, திறமை, ஆளுமை என்று 50 வயது கடந்தும் சினிமாத்துறையில் தன்னை முதல் பெண் சூப்பர் ஸ்டாராக தகவமைத்து கொண்டார்.
துபாயில் கடந்த 2018ம் ஆண்டு தனது நெருங்கிய உறவினரின் திருமணத்தில் பங்கேற்க சென்றவர் இதே நாளில் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.
அவரது 5ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரது வாழ்வில் அறியப்படாத சில சுவாரசியமான உண்மைகளை இங்கு காண்போம்.
- ஸ்ரீதேவியின் உண்மையான பெயர்
ஆகஸ்ட் 13, 1963ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள சிவகாசி அருகே மீனம்பட்டி கிராமத்தில் அய்யப்பன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியருக்கு மகளாக பிறந்தார். அவரது இயற்பெயர் ஸ்ரீ அம்மா யங்கர் அய்யப்பன்.
4 வயதில் தொடங்கிய கலைவாழ்வு
1967ம் ஆண்டு வெளியான ‘கந்தன் கருணை’ படத்துடன் நான்கு வயதில் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். 1969ம் ஆண்டு வெளியான துணைவன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக உருவெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 50 வருடங்களுக்கு மேலாக தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு 300க்கும் மேற்பட்ட இந்திய மொழிப்படங்களில் பணியாற்றினார்.
கடைசியாக 2018ம் ஆண்டு வெளிவந்த அம்மா திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை ஸ்ரீதேவி பெற்றார்.
ஹாலிவுட் படத்தை நிராகரித்த ஸ்ரீதேவி
1993 ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ’ஜுராசிக் பார்க்’ திரைப்படத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது அவர் இந்தி திரையுலகில் உச்சத்தில் இருந்ததால் அந்த வாய்ப்பை நிராகரித்தார்.
13 வயதில் ரஜினிகாந்தின் சிற்றன்னை
இந்திய திரையுலகின் உச்சநட்சத்திரங்களான ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 22 படங்களில் இணைந்து நடித்தனர்.
1976ம் ஆண்டு அதாவது தனது 13ம் வயதில் மூன்று முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார். அதில் ரஜினியின் சிற்றன்னை கதாப்பாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதேவிக்கு இந்தி பேச தெரியாது
1979ம் ஆண்டு 16 வயதினிலே திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ’சோல்வா சவான் மூலம் ஸ்ரீதேவி இந்தி திரையுலகில் அறிமுகமானார். அப்போது இந்தி தெரியாததால் சிரமப்பட்ட அவருக்கு ஆரம்பத்தில் ரேகா டப்பிங் செய்துள்ளார்.
பின்னர் 1989ம் ஆண்டு வெளியான சாந்தினி திரைப்படத்தில் தான் முதன்முறையாக இந்தியில் நேரடியாக பேசி நடித்தார்.
ஓவியர் ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி ஒரு தேர்ந்த ஓவியர் என்பது பலரும் அறியாத விஷயம். நடிகை சோனம் கபூரை தான் நடித்த ‘சாவரியா’வில் கதாபாத்திரமாக வரைந்தார்.
பலரையும் கவர்ந்த இந்த ஓவியம் துபாயில் 2018ம் ஆண்டு நடைபெற்ற மோஹித் மர்வாவின் திருமணத்திற்குப் பிறகு ஏலம் விடப்பட இருந்தது. ஆனால் ஸ்ரீதேவியின் மறைவு காரணமாக அது நடைபெறவில்லை.
நடிகர்.. பாடகர்.. தயாரிப்பாளர்
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த ஸ்ரீதேவி, ‘சத்மா’, ‘சந்த்னி’, ‘கரஜ்னா’ மற்றும் ‘க்ஷானா க்ஷனம்’ ஆகியவற்றில் பின்னணி பாடகராக இருந்துள்ளார்.
மேலும் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ‘சக்தி: தி பவர்’ திரைப்படத்தை தயாரித்தவரும் இவரே.
மகள்களின் பெயர் காரணம்
தனது கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூரின் படங்களான ‘ஜுடாய், மற்றும் ‘ஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹை’ படங்களில் உள்ள கதாநாயகிகளின் பெயர்களான ’ஜான்வி’ மற்றும் ’குஷி’ -யை தனது இரு மகள்களுக்கு சூட்டினார்.
நூற்றாண்டு நடிகை
2013 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருது ஸ்ரீதேவிக்கு வழங்கப்பட்டது.
அதே ஆண்டில் நடந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் சி.என்.என்-ஐபிஎன் தேசிய வாக்கெடுப்பின்படி ‘100 ஆண்டுகளில் இந்தியாவின் மிகப் பெரிய நடிகை’ ஆகவும் ஸ்ரீதேவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் : தமிழ் மகன் உசேன் திட்டவட்டம்
பொதுக் குழு செல்லும், ஆனால் தீர்மானங்கள்? உச்ச நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் பன்னீர் தரப்பினர்!