“சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்து விட்டது” – எஸ்.ஆர்.பிரபு
திரைப்பட வணிகத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்து விட்டது என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசிய காக்கா, கழுகு கதை தான் இணையத்தில் இன்று முக்கிய விவாத பொருளாக உள்ளது.
இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசும்போது, “காக்கா எப்பவும் கழுகை சீண்டிக்கிட்டே இருக்கும். ஆனா, கழுகு எப்பவுமே அமைதியா இருக்கும். பறக்கும் போது கழுக பார்த்து காக்கா உயரமா பறக்க நினைக்கும். இருந்தாலும் காக்காவால அது முடியாது.
ஆனா, கழுகு இறக்கையை கூட ஆட்டாம எட்டமுடியாத உயரத்துல பறந்துகிட்டே இருக்கும். உலகின் உன்னதமான மொழி மெளனம் தான்.
இப்போ நான் காக்கா கழுகுன்னு சொன்ன உடனே இவர தான் சொல்றேன்னு சோஷியல் மீடியால சொல்வாங்க. குரைக்காத நாயுமில்ல…குறை சொல்லா வாயுமில்ல…இரண்டும் இல்லாத ஊருமில்ல. நம்ம வேலையை பார்த்துட்டு போய்கிட்டே இருக்கணும்” என்று தெரிவித்திருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்கள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய், அஜித் குறித்த விமர்சனம் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திரைப்பட வணிகத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்து விட்டது என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திரைப்பட வணிகத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்துவிட்டது. ஒவ்வொரு நடிகர்களுக்கும் மார்க்கெட் உள்ளது.
ஒரு படத்திற்கான வெளியீட்டு தேதி, கதை, அன்றைய தேதியில் வெளியாகும் மற்ற படங்கள் போன்றவை வணிகத்தை தீர்மானிக்கின்றன.
இதை நாம் புரிந்துகொள்ளும்போது ஒட்டுமொத்த சினிமா சந்தையும் எல்லைகளை தாண்டி விரிவடைகிறது. இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் தெலுங்கு இண்டஸ்ட்ரி.
நடிகர்கள், ரசிகர்கள், திரைப்பட தொழிலில் உள்ளவர்கள் இதை புரிந்து கொண்டால் ஒட்டுமொத்த இந்திய திரைப்பட துறையும் சிறந்த தரத்திற்கு உயரும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
உணவு தட்டுப்பாடு: என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ஜெயக்குமார் வேண்டுகோள்!
“ஸ்டாலினுக்கு துரைமுருகன்… உதயநிதிக்கு நான்” – ஆ.ராசா