“மறைந்த பாடகர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தி பாடல்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், தனது தந்தையின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்த அனுமதி தரமாட்டேன்” என்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண் தெரிவித்துள்ளார்.
சில திரைப்படங்களில் மறைந்த பாடகர்களின் குரல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. ‘வேட்டையன்’ படத்தில் இடம்பெற்ற ‘மனசிலாயோ’ பாடலில் மலேசியா வாசுதேவனின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ‘கோட்’ படத்தில் பவதாரணி குரல் இடம் பெற்றது. மேலும், ரஜினிகாந்த் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர் ‘பம்பா பாக்யா’ குரல் பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், விகடன் வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் எஸ்.பி. பாலசுப்ரமணியன் மகன் சரண் கூறியிருப்பதாவது, “எனது தந்தையின் குரலை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்த பலர் என்னிடம் கேட்டு வருகின்றனர். எந்த நிலையில் இருந்தாலும், நான் யாருக்கும் எனது தந்தையின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்த அனுமதி கொடுக்க மாட்டேன். அவரது குரலை ஏஐ தொழில்நுட்பத்தில் கேட்க எங்களுக்கு விருப்பமில்லை. இத்தகையை தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் குரல் உணர்வு பூர்வமாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகர், டிவி பிரபலம், இசை அமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர், திரைப்பட தயாரிப்பாளர் என தான் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றிக் கொடி நாட்டியவர் எஸ்.பி.பி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் காலத்தால் அழிக்க முடியாத , ஆயிரக்கணக்கான பாடல்களை தனது காந்த குரலால் பாடியுள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி கொரோனா பாதிப்பால் எஸ்.பி.பி உயிரிழந்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
‘செக்யூலர்’ ‘சோஷலிஸ்ட்’ ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் அங்கங்களா?
ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் உதயநிதி