தமிழர்களின் மனதோடு கலந்துவிட்ட, காலத்தால் அழியாத பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியவர் ’பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
இன்று (செப்டம்பர் 25) எஸ்.பி.பி.யின்இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது.
எஸ் பி.பாலசுப்பிரமணியம் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை இங்கு பார்க்கலாம்…
எஸ்.பி.பி. முதன்முதலில் சாந்தி நிலையம் படத்துக்காக
’இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி’ என்ற பாடலை தான் பாடினார்.
ஆனால், திரைக்கு முதலில் வந்தது அடிமைப் பெண்’ படப் பாடலான
ஆயிரம் நிலவே வா’!
1969ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப் பெண் படத்தில் வரும் ஆயிரம் நிலவே வா பாடலை பாட வாய்ப்பு கிடைத்தது.
பாடல் ரெக்கார்டிங் நடைபெற இருந்த நாளன்று திடீரென எஸ்.பி.பி.க்கு காய்ச்சல் ஏற்பட்டது.
இதனால் அவர் ரெக்கார்டிங்குக்கு செல்ல முடியவில்லை. இதனைக் கேட்ட எம்.ஜி.ஆர், உடனே ரெக்கார்டிங்கை கேன்சல் செய்தார்.
2 மாத சிகிச்சைக்கு பின் தான் அந்த பாட்டு ரெக்கார்டிங் செய்யப்பட்டது.
அப்போது எஸ்பிபி, “நீங்கள் எவ்வளவு பெரிய ஹீரோ ஏன் எனக்காக காத்திருந்தீர்கள்?” என்று எம்ஜிஆரிடம் கேட்டார்.
அதற்கு எம்.ஜி.ஆர், ”என் படத்துல ஒரு பாட்டு பாடப்போறேன்னு பெருமையா உங்களுக்கு தெரிஞ்சவங்ககிட்டே சொல்லியிருப்பீங்க.
உங்களுக்கு பதிலா வேற ஒருத்தர பாட வைச்சிருந்தா, அது உங்களுக்கும் உங்கள நேசிக்கிறங்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமா போயிடும்.
அதை செய்ய நான் விரும்பல, அதனாலதான் இந்தப் பாட்டு உங்களுக்காக காத்திருந்தது” என்று கூறி எஸ்.பி.பி.யின் முதுகில் எம்ஜிஆர் தட்டிக்கொடுத்துள்ளார்.
மேலும் எஸ்.பி.பி. பாடிய பாடல்களில் ”ஆயிரம் நிலவே வா” பாடல்தான் தனக்கு பிடித்தது என்று நடிகர் திலகம் சிவாஜியும் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.பி. பாடல்களை மூச்சுவிடாமல் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவர்.
1990 ஆம் ஆண்டு வெளிவந்த இயக்குனர் வசந்தின் முதல் திரைப்படமான கேளடி கண்மணி படத்தில் எஸ்.பி பாலசுப்ரமணியம் ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் ‘மண்ணில் இந்த காதலன்றி’ பாடலை தான் அவர் மூச்சு விடாமல் பாடி இருந்தார்.
அதற்காக தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை பெற்றார்.
1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான அமர்க்களம் திரைப்படத்தில் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடலை வைரமுத்து எழுதியிருந்தார்.
இந்த பாட்டை தான் எஸ்பிபி மூச்சு விடாமல் பாடியிருந்தார்.
முதலில் ‘சத்தம் இல்லாத தனிமை வேண்டும்’ என்று எழுதப்பட்ட பாடல், பிறகு ஒவ்வொரு முடிவிலும் கேட்டேன் என்று மாற்றப்பட்டது.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தமிழ் மட்டுமின்றி இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழியில் பாடிய பாடல்களுக்காக மொத்தம் 6 முறை தேசிய விருதை வென்றுள்ளார்.
‘சங்கராபரணம்’ என்ற தெலுங்கு படத்துக்காக தனது முதல் தேசிய விருதை வாங்கிவிட்டு, ‘எனக்குக் கர்நாடக சங்கீதம் தெரியாது’ என்று சொன்னார்.
இதனை கேட்டு கர்நாடக சங்கீத வித்வான்களே ஆடிபோய்விட்டனர்.
அதேபோல் ‘ஏக் துஜே கேலியே’ படத்துக்காக இரண்டாவது தேசிய விருது வாங்கிவிட்டு, ‘எனக்கு இந்தி தெரியாது’ என்றார். இதை கேட்டு அப்போது பாலிவுட் உலகமே படபடத்தது.
அதனைத் தொடர்ந்து மின்சார கனவு திரைப்படத்தில் பாடிய தங்க தாமரை மகளே பாட்டுக்காக தேசிய விருதை பெற்றார்.
1985 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் முதல் மரியாதை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் இணைந்து ராதா, வடிவுக்கரசி நடித்த இத்திரைப்படம் அப்போது மிகப்பெரிய வெற்றியடைந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
ஆனால் முதல் மரியாதை திரைப்படத்தில் நடிக்க சிவாஜிக்கு பதிலாக பாரதிராஜா முதலில் அணுகியது எஸ்பிபியை தான்.
ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது.
பெரும் வெற்றி பெற்ற முதல்மரியாதை படத்தில் எஸ்பிபி நடித்திருந்தால் ஒருவேளை தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகராகவும் வலம் வந்திருக்க கூடும்.
திரையுலகில் சுமார் இதுவரை 42,000 பாடல்களுக்கு மேல் எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி உள்ளிட்ட 16 மொழிகளில் தனது குரலால் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
உலகின் அதிக பாடல்களை பாடிய சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
அத்துடன் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனையையும் தன் வசப்படுத்தியவர்.
கிறிஸ்டோபர் ஜெமா
சேலம் – உளுந்தூர்பேட்டை சாலை :நடைபயணம் மேற்கொள்ளும் ஈ.ஆர்.ஈஸ்வரன்
தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: பெட்ரோல் குண்டு வீசுபவர்களுக்கு டிஜிபி எச்சரிக்கை!