தமிழ் திரையுலகில் பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்ற தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு அதிகளவு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்திருப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி கேரளா மட்டுமின்றி தமிழக திரையுலகையும் உலுக்கியுள்ளது.
நடிகைகள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் முகேஷ், சித்திக்,நிவின் பாலி இயக்குநர் துளசிதாஸ் எனப் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த அறிக்கை வெளியானதற்கு பின்னர் நடிகைகள் ஊர்வசி, ராதிகா, ஷகீலா, சரிதா, குஷ்பு என பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்திருந்தனர்.
சினிமா துறையில் மட்டுமின்றி அனைத்து துறையிலும் இது நடப்பதாகவும் திரை பிரபலங்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுகாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் கொண்ட ‘தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி’ கூட்டம் நேற்று (செப்டம்பர் 4) நடைபெற்றது.
தி.நகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நடிகைகளின் பாதுகாப்பு கருதி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி,
பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.
பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும், அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினரான குஷ்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், “எல்லா துறையிலும் பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கிறது. ஆனால் சினிமா துறையை மட்டும் ஏன் குறிப்பிட்டு பேசுகிறீர்கள். எல்லா துறையிலும் ஹேமா கமிட்டி போன்ற ஒரு கமிட்டி வேண்டும்” என்று கூறினார்.
அப்போது அவரிடம் பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதே, அப்படி என்றால் மன்னித்து விட்டுவிடுவீர்களா என்ற கேள்விக்கு, “ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறீர்களே என்ற கேள்விக்கு, “ஆமாம் சினிமாவை பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் எங்களிடம் வாருங்கள். கமிட்டிக்கு வந்தால் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்று சொல்கிறோம். அதை தவிர்த்து அதற்கு தீனி போட்டுக்கொண்டிருக்கக் கூடாது” என்று குறிப்பிட்டார்.
இதுவரை எங்களுக்கு எந்த பாலியல் புகாரும் வரவில்லை என்றும் தெரிவித்தார் குஷ்பு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
Aus vs Sco: டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்த ஆஸ்திரேலியா
கோலியா? தோனியா? அதிக வரிப் பணம் செலுத்தும் கிரிக்கெட் வீரர் யார்?