2022 ஆம் ஆண்டு, தென்னிந்திய சினிமா இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் வணிக ரீதியாக வசூலை குவித்து சாதனைகள் பல நிகழ்த்திய ஆண்டாகும்.
இந்நிலையில், தென்னிந்திய சினிமாவுக்கு இந்திய அரசாங்கத்தால் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று இந்திய சினிமாவின் மூத்த நடிகைகள் ஜெயசுதாவும், ஜெயபிரதாவும் தங்கள் கவலையை தெரிவித்துள்ளனர்.
நடிகை ஜெயசுதா நடிகை ஜெயபிரதாவுடன் சமீபத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் அன்ஸ்டாப்பபிள் என்ற டாக் ஷோவில் கலந்து கொண்டார்.
அதில் அவர் திரைப்படத் துறையில் தென்னக கலைஞர்களை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என கூறியதுடன், நடிகை கங்கனா ரனாவத்தை ஒரு உதாரணமாக கூறினார்.
கங்கனா 10 படங்கள் நடிப்பதற்குள் அவருக்கு எவ்வாறு விருது வழங்கப்பட்டது. ஆனால் பல தலைமுறைகளாக தொழில்துறையில் பணியாற்றிய நடிகர்களுக்கு அவர்களின் பணிக்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கூறினார்.

மேலும் அவர், “கங்கனா ரனாவத்துக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததில் எனக்கு கவலையில்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை. இருப்பினும், அவர் 10 படங்கள் நடிப்பதற்குள் அந்த விருதைப் பெற்றார். இங்கு, நாங்கள் பல படங்களில் பணியாற்றிய பின்னும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.
உலகிலேயே அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனராக 2002-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற விஜய நிர்மலாவுக்கு கூட இதுபோன்ற பாராட்டு கிடைக்கவில்லை” என்றார்.

நடிகை ஜெயபிரதா கூறுகையில், ”நாம் விருதுகளை மரியாதையுடன் பெற வேண்டும். அதைக் கேட்டு வாங்க கூடாது. நான் எம்.பி.யாக இருந்தபோது, என்.டி.ஆருக்கு பாரத ரத்னா வழங்கக் கோரிக்கை வைத்தேன். அதை நிறைவேற்ற இன்றுவரை முயற்சி செய்து வருகிறேன்” என்று குறிப்பிட்டார்
தென்னிந்திய நடிகர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பாலகிருஷ்ணா இரு நடிகைகளிடமும் ஒப்புக்கொண்டார்.
இராமானுஜம்
100 நாள் வேலை திட்டம்: வருகைப்பதிவில் மாற்றம்!