தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு!

சினிமா

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் இன்று (செப்டம்பர் 8) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது. முன்னதாக செயற்குழு கூட்டம் முடிவடைந்த பின் நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் கருணாஸ் மற்றும் நடிகர் நடிகைகள், நாடக நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொதுக்குழு கூட்டத்தில், பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றத் தடை விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களை அளிக்க சிறப்பு எண்களும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக கருத்துக்களைத் தெரிவித்தால் சைபர் கிரைமில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் பணிகள் நடந்தால் நடிகர் சங்க கட்டுமான பணிகள் பாதுக்கும் என்பதால் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், ‛‛பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிக மிக அவசியமாகும். புகார் தந்தவர் குறித்த பெயரை சொல்ல மாட்டோம். புகார் மீது நிர்வாக குழு நடவடிக்கை எடுக்கும். பாலியல் தொந்தரவு சினிமா துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது” எனக் கூறினார்.

மீ டு சர்ச்சையின் போது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம். நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முன்பு ஊடகத்தில் பேசுவதால் எந்த பயனும் இல்லை. நடிகர் சங்கத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களை, அதற்கென அமைக்கப்பட்ட குழு விசாரிக்கிறது.

எங்களுக்கு புகாரளிப்பதற்காக 2019-ஆம் ஆண்டே நடிகர் சங்க விசாகா கமிட்டி உருவாக்கப்பட்டது. திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்கள், மனநல ஆலோசகர்கள், தன்னார்வலர்களும் இந்த கமிட்டியில் உள்ளனர்.

புகார் கொடுப்பவர்கள் யார் என்பதை வெளியே தெரியப்படுத்த மாட்டோம். பாலியல் தாக்குதல் நடந்தால் தைரியமாக இருங்கள். அதற்கு அடிபணிய வேண்டிய அவசியம் திரைத்துரையில் இல்லை. திரையுலகம் பற்றி அவதூறு பேசப்படுகிறது.

சில புகார்கள் வந்தது. அந்த விவகாரம் வெளியே தெரியகூடாது என்பதற்காக அதனை வெளியே சொல்லவில்லை. எங்கு இருந்தாலும் நம் உறுப்பினர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்தால் புகாரளிக்க முன்வாருங்கள். திரைத்துறையில் பாலியல் புகார்களை அளிக்க பிரத்யேக எண் வழங்க இருக்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சைக்கிள் ரைடு… விஜய்யை காப்பி அடித்தாரா விஷால்? – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அடுத்த ஏழு நாட்கள்… வானிலை மையம் முக்கிய அப்டேட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *