ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள சொர்க்கவாசல் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
புதுமுக இயக்குநர் சித்தார்த் இயக்கி உள்ளார். இவர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் சித்தார்த். இந்த நிலையில், தனது கதையை திருடி எடுத்திருப்பதாக கிருஷ்ணகுமார் என்ற டிரைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு கிருஷ்ணகுமார் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “என் மனைவிக்கு காதும் கேட்காது, பேசவும் முடியாது. ஒரு குழந்தையும் இருக்குது. சொந்த வாழ்க்கையில் இன்றைக்கு சக்சஸ்புல்லா போயிட்டு இருக்கிறோம்.
கடந்த 2017-ல் சட்ட சிக்கல் காரணமாக பிரச்னை ஏற்பட்டு சைதாப்பேட்டை சப்ஜெயில்ல என்னை அடைச்சாங்க. அங்க வச்சுதான் கிளைச்சிறை என்ற கதையை எழுதுனேன். கதை எழுத மனு போட்டுதான் இரண்டு பேப்பர், ரீபிள் வாங்கினேன். செல் நம்பர் 25-ல என்னை அடைச்சிருந்தாங்க. அந்த சப்ஜெயில்ல முழுசா 15 நாட்கள் இருந்தேன்.
ஜெயிலுக்குள்ள குறட்டை விடக்கூடாது. குறட்டை விட்டா அங்கிருக்கும் மற்ற கைதிகள் கழுத்தை மிதிப்பாங்க. உள்ள இருக்குறவங்க மூர்க்கமா இருப்பாங்க. 10 நாட்கள் சிறையில இருந்த ஒவ்வொருத்தரையும் சந்திச்சு கதை எழுதினேன்.
ஆனால், சிறையை பத்தி தவறா எழுதியிருந்ததால என்னால அந்த கதை எழுதிய பேப்பரை வெளியே கொண்டு வர முடியாது. இப்போ, சாப்பாடு நல்லா இல்லனா சூப்பாரா இருக்குதுனு மாற்றி எழுதி வச்சேன். அந்த பேப்பரை 4 பேர் வாங்கி படிச்சதுக்கு அப்புறம்தான் அதோட என்னை வெளியே அனுப்புனாங்க. வெளி வந்த பிறகு, 2018 ஆம் ஆண்டு அந்த கதையை முழுமையாக எழுதினேன். 2019 ஆம் ஆண்டு வரை கதையை மெருகேற்றி கிட்டே இருந்தேன் கேரக்டர் கூட செலக்ட் பண்ணி வச்சிருந்தேன்.
கதை எழுதிட்டேன். ஆனால், அதை ரிலீஸ் பண்ணக்கூடிய திறமை கொண்ட தயாரிப்பாளர் வேணும்னு நினைச்சேன். அப்போதான், சிலர் ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபுவை போய் பாருங்கனு சொன்னாங்க.
அவரை அவ்வளவு ஈசியா பார்க்க முடியல. 2022 ஆம் ஆண்டு வாட்சப் குரூப் வழியாக எஸ்.ஆர்.பிரபுவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அதாவது, ஒரு கூட்டத்தில் அவர் பங்கேற்பதாகவும் அதில் கலந்து கொண்டு அவர்கிட்ட பேசலாம் அப்படினு சொன்னாங்க. கூட்டத்தில் 4 ஆயிரம் ரூபா கட்டி கலந்து கிட்டேன். கிட்டத்தட்ட 70 பேர் அங்க வந்துருந்தாங்க.
அங்க இருந்தவங்க, கதை சுருக்கத்தை அனுப்ப ஒரு மெயில் கொடுத்தாங்க. அந்த மெயிலுக்கு 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி , கிளைச்சிறை உள்ளிட்ட 3 கதைகளின் சுருக்கம் அனுப்பி வைத்தேன். பின்னர், அவங்ககிட்ட இருந்து எனக்கு போன் வந்தது. முழுவதுமா முடிந்த கதையை நேர்ல கொண்டு வந்து தர முடியுமானு கேட்டாங்க. நானும் எதையும் யோசிக்காம முழு கதையையும் அப்படியே போய் கொடுத்துட்டேன்.
பின்னர், 2022 ஆகஸ்ட் 18 ஆம் தேதி அவங்ககிட்ட இருந்து ஒரு மெயில் வந்தது. அதில், உங்கள் கதை ஏற்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. அதோட எல்லாவற்றையும் நிறுத்திட்டேன். இனி பொழப்ப பார்க்கனும். கடன் மேல கடன் இருக்குதுனு முடிவு பண்ணிட்டு, ஆக்டிங் டிரைவிங் வேலை பார்த்துட்டு இருந்தேன்.
இந்த நிலையில், நவம்பர் 23 ஆம் தேதி சொர்க்கவாசல் படம் டிரெயிலர் வெளியானது. இதை பார்த்துட்டு எனது நண்பர்கள் உன்னோட கதை மாதிரி இருக்குது அப்படினு என்கிட்ட போன் பண்ணி சொன்னாங்க. நானும் அதை போய் பார்த்தா அப்படியே லைட்டா மாத்தி எடுத்துருக்காங்க.
நண்பர்கள் சிலர் ஆர்.ஜே. பாலாஜியை பிடிச்சு உண்மையை சொல்லு அப்படினு சொன்னாங்க. என்னால அவரை பார்க்கவே முடியல. தயாரிப்பாளரை போய் பார்த்துடுனு சொன்னாங்க. ட்ரீம் வாரியர் அலுவலகத்துக்கு போனா,எஸ்.ஆர்.பிரபுவையும் பார்க்க முடியல.
கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு சென்று தலைவர் பாக்யராஜ் சாரை மீட் பண்ண போனேன். இந்த கதையை பதிவு பண்ணிருக்கீங்களானு கேட்டாங்க. இல்லை என்று சொன்னேன். இதையடுத்து, எங்களால் எதுவும் செய்ய முடியாது அப்படினு பதில் சொல்லிட்டாங்க. என்னோட உழைப்பை அப்படியே சுரண்டிட்டாங்க
எஸ்.ஆர் . பிரபுவோட டீம் பல இளைஞர்களை ஏமாத்துறாங்க. நான் கலந்து கொண்ட கூட்டத்துல 70 இளைஞர்கள் இருந்தாங்க. அவங்களாம் எத்தனை ஸ்கிரிப்ட் கொடுத்துருப்பாங்கனு தெரியல. ஆர்.ஜே. பாலாஜி போற வேகத்துல நிறைய பேரை மிதிச்சுட்டு போயிட்டு இருக்காரு. என்னால கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று புகார் கொடுத்து படத்தை நிறுத்த முடியும். ஆனாலும், அதனால எனக்கு என்ன ஆக போகுது. எனினும், இந்த படத்தை பார்க்க 3 டிக்கெட் எடுத்துட்டேன்” என்று உருக்கத்துடன் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மன்னர் சார்லசுக்கும் இந்த இந்திய பெண்ணுக்கும் அப்படி என்ன கனெக்ஷன்?
“மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்யவேண்டும்” – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!