அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் செல்வராகவன், நட்டி , ஷராப் உதீன், ஹகிம் ஷா, ஆண்டனி தாசன், ரவி ராகவேந்திரா, சாமுவேல் ராபின்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் உடன் இணைந்து எழுத்தாளர் தமிழ் பிரபா, அஷ்வின் ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். உலகப் புகழ்பெற்ற நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்தப் படத்தின் ஓடிடி உரிமத்தைப் பெற்றது. வெகு நாட்களுக்கு முன்னரே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதுவரை எவரும் பார்க்காத ஒரு ஆர்.ஜே.பாலாஜியை இந்தப் படத்தின் ட்ரெய்லரில் பார்க்க முடிந்தது. வழக்கமான காமெடி, கமெர்சியல் தன்மைகள் இல்லாது மிக அழுத்தமான கதைக்களத்தில் இந்தப் படம் நிகழ்வதாக ட்ரெய்லர் மூலம் தெரியவந்தது. உலகப் புகழ்பெற்ற ‘ஜெயில் பிரேக்’ என்கிற ஜானரின் கீழ் உருவாகியுள்ள இந்தப் படம் 1999ஆம் ஆண்டு நடக்கும் ஒரு பீரியட் கதையாக உருவாகியுள்ளது.
இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு வேலைகளை மேற்கொண்டுள்ளார். இந்தத் திரைப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்வைப் ரைட் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தத் திரைப்படம் வருகிற நவ.29ஆம் தேதி வெளியாகும் என அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது சூர்யா நடிக்கும் ’சூர்யா 45’ திரைப்படத்தை இயக்கவுள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளது. இதே தேதியில் நடிகர் சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ திரைப்படமும் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண ஆவணப் படம் : ட்ரெய்லர் நாளை வெளியீடு!
தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி இணையும் ‘D55′ ! : அதிகாரப்பூர்வ அறிவிப்பு