தமிழில் நாயகியை மையமாகக் கொண்ட படங்கள் அவ்வப்போது வெளியாகும். சம்பந்தப்பட்ட நாயகிக்கென்று தனித்துவமான வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தால் மட்டுமே, அது நிகழும். சமீபகாலமாக நயன்தாரா, டாப்ஸி, மஞ்சு வாரியர் போன்றவர்களது படங்கள் அதனைச் சாதித்து வருகின்றன. அந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படங்களுக்கும் ஒரு இடமுண்டு.
வழக்கமான கமர்ஷியல் படங்களிலேயே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் சூழலில், அவரது பாத்திரமே பிரதானம் எனும்போது, அந்த படம் தரும் அனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அந்த எதிர்பார்ப்புதான் ஐஸ்வர்யா ராஜேஷ், தீபா, லட்சுமிபிரியா, கருணாகரன், மைம் கோபி, சுனில் ரெட்டி, சதீஷ் நடித்துள்ள ‘சொப்பன சுந்தரி’ படத்தைப் பார்க்கும் எண்ணத்திற்கான தூண்டுகோல்.
சரி, அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்கிறதா படம்?
ஒரு ஊர்ல ஒரு காரு..!
பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, அடித்தட்டில் இருக்கிறது செல்வியின் (தீபா) குடும்பம். அவருக்கு தேன்மொழி (லட்சுமிபிரியா), அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) என்ற இரண்டு மகள்கள். துரை என்றொரு மகன். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாகக் கூறி, தனது தங்கையை துரைக்குத் திருமணம் செய்து வைக்கிறார் டேஞ்சர் மாமா (மைம் கோபி). திருமணமாகி வந்த சில நாட்களிலேயே, மனைவி உடன் தனிக்குடித்தனம் சென்று விடுகிறார் துரை.
மூத்த மகள் தேன்மொழி பேசும் திறனற்றவர்; அதனால், அவருக்குத் திருமணம் செய்வது தாமதமாகிறது. அகல்யா நகைக்கடையொன்றில் விற்பனையாளராக வேலை செய்கிறார். அந்தக் கடையில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு நகை வாங்குகிறார் துரை. அந்த ரசீதுடன் வழங்கப்படும் பரிசு கூப்பனை அகல்யாவின் முகத்தில் வீசியெறிகிறார். அதில் தனது பெயரை நிரப்பி பெட்டியில் இடுகிறார் அகல்யா.
சில நாட்கள் கழித்து, அந்த பரிசு கூப்பனுக்கு ஒரு கார் பரிசாகக் கிடைக்கிறது. கார் கிடைத்த தகவல் அறிந்ததும், தேன்மொழியைப் பெண் பார்த்துச் சென்ற மாறன் (ஷரா) குடும்பம் மீண்டும் சம்பந்தம் பேச வருகிறது. கல்யாணம் நிச்சயமான மகிழ்ச்சியோடு, இருவரும் தனியாக வெளியே செல்கின்றனர். அப்போது, தேன்மொழிக்கு கார் ஓட்ட கற்றுத் தருகிறார் மாறன். அந்த நேரத்தில், சாலையில் செல்லும் ஒருவர் மீது கார் மோதுகிறது; மூச்சு பேச்சற்றுக் கிடக்கும் அவரை கார் டிக்கியில் வைத்து பூட்டுகின்றனர் இருவரும். அவர் மரணித்துவிட்டதாகக் கருதுகின்றனர்.
அடுத்த நாள் காலையில், தான் கொடுத்த பரிசு கூப்பனுக்கு கார் தந்ததாகக் கூறி ரகளையில் ஈடுபடுகிறார் துரை. அவரது மனைவி, மச்சான் என்று உறவினர்கள் சிலரும் அங்கிருக்கின்றனர். அந்த பிரச்சனை காவல் நிலையம் வரை செல்கிறது. காருக்குள் பிணம் இருக்கும் உண்மை தெரிய வருவதால் அகல்யா, தேன்மொழி, செல்வி மூவருமே திகிலில் ஆழ்கின்றனர்.
அதன்பின் என்ன நடந்தது? அந்த கார் மீண்டும் அகல்யா குடும்பத்தினரின் கைக்கு கிடைத்ததா என்று சொல்கிறது ‘சொப்பன சுந்தரி’.
‘ஒரு ஊர்ல ஒரு காரு’ என்பதாகத்தான் கதை தொடங்குகிறது. அப்படியிருக்க, அந்த காரையே ஒரு பாத்திரமாக ஆக்கியிருக்கலாம். அது குழந்தைத்தனமாக இருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ, அதனை ஒரு பிராபர்டியாக மட்டுமே பயன்படுத்தியிருக்கின்றனர். அதனால், ரசிகர்களுக்குக் கிடைக்க வேண்டிய சிரிப்பு நஷ்டமானதுதான் மிச்சம்.
இருக்கு.. ஆனா இல்ல..!
ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான பாத்திரமாக நடித்துள்ள படம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும்விதமாக, நிறைய காட்சிகள் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது. கடைசி அரை மணி நேரக் காட்சிகளில் பெண்மையின் தீரத்தைக் காட்டும் இடங்களில் தனக்கான நட்சத்திர அந்தஸ்து மேலும் உயரும் என்று நினைத்திருக்கிறார். அதற்கேற்ப தியேட்டரிலும் வரவேற்பு கிடைக்கிறது.
லட்சுமி பிரியா படம் முழுவதும் பேசாமல் இருக்க, அவருக்குச் சேர்த்து வைத்து வசனம் பேசித் தள்ளுகிறார் தீபா. இருவரும் தோன்றும் காட்சிகள் அருமையாகக் கையாளப்பட்டிருப்பதைப் பாராட்டியாக வேண்டும். எப்படிப்பட்ட பாத்திரங்களாக இருந்தாலும், ‘நான் இப்படித்தான் தோன்றுவேன்’ என்று தனக்கான அளவுகோலோடு நடித்து வருகிறார் கருணாகரன். சொப்பனசுந்தரியிலும் அப்படியே.
நான்கைந்து காட்சிகளே வந்தாலும், நச்சென்று நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. என்ன, ‘கோலமாவு கோகிலா’ தொடங்கி இதுவரை அவருக்கு ஒரேமாதிரியான உடல்மொழி, குரல் மாடுலேஷனிலேயே பாத்திரங்கள் தரப்படுகின்றன. இதிலும் அதுவே தொடர்கிறது.
சுனில் ரெட்டி ஏற்ற இன்ஸ்பெக்டர் கண்ணன் பாத்திரம், ‘சூப்பர் டீலக்ஸ்’இல் வரும் பக்ஸ் பாத்திரத்தை நினைவூட்டுகிறது. ஆனால், அதே போன்ற விவரணைகள் திரையில் வெளிப்படவில்லை. மைம் கோபி, சதீஷ், நக்கலைட்ஸ் தனம், ஷரா உட்படப் பலர் படத்தில் உண்டு. இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் ஆட்டுவித்தாற்போல, அனைவரும் திரையில் தோன்றியிருக்கின்றனர்.
அஜ்மல் தாஸீன் இசையில் இரண்டு பாடல்கள் திரைக்கதையோடு சேர்ந்து நம்மைக் கடந்து செல்கின்றன. பின்னணி இசை தந்திருக்கும் விஷால் சந்திரசேகர், சில இடங்களில் தன்னிசையால் நம்மைக் கிச்சுகிச்சு மூட்டுகிறார். இயக்குனர் முன்வைக்கும் உலகத்தைக் காட்ட முயன்றிருக்கிறது பாலமுருகன் & விக்னேஷ் ராஜகோபாலனின் ஒளிப்பதிவு. சரத்குமார் படத்தொகுப்பில் காட்சிகள் ஒவ்வொன்றும் ‘ஷார்ப்’பாக வெட்டப்பட்டிருக்கின்றன. என்ன, கிளைமேக்ஸ் காட்சி வரும்போதுதான் அவர் கொஞ்சம் சோர்ந்து போயிருக்கிறார்.
’சொப்பன சுந்தரி’ என்ற டைட்டிலை பார்த்தவுடன், நமக்கு ‘கரகாட்டக்காரன்’ காமெடிதான் நினைவுக்கு வரும். அதற்கேற்ப, இரட்டை அர்த்த நகைச்சுவையில் இயக்குனர் சார்லஸ் இறங்கவில்லை. அது நல்ல விஷயம். ஆனால், பிளாக் ஹ்யூமர் எனப்படும் ‘அவல நகைச்சுவை’ பல இடங்களில் எடுபடவில்லை என்பது சோகமான விஷயம். அதனால், ’காமெடி இருக்கு ஆனா இல்ல’ என்பது போலக் காட்சிகள் நகர்கின்றன.
பாத்திரங்கள் சீரியஸான விஷயத்தைக் கையாளும்போது, அதனைக் கேட்கும், பார்க்கும் பார்வையாளர்கள் வாய்விட்டுச் சிரிப்பது சாதாரண விஷயமில்லை. அது வாய்க்காத காரணத்தால், படம் முழுக்க சீரியசாகவே நகர்கிறது; அதனால், இயக்குனர் சொல்ல வரும் கதை மட்டுமே சுவாரஸ்யம் தருகிறது.
’டாக்டர்’ பாதிப்பு!
நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’வில் ஒரு சாதாரண பெண்ணும் அவரது குடும்பமும் எவ்வாறு போதைப்பொருள் கடத்தல் உலகில் மாட்டிக்கொண்டு அல்லாடுகிறது என்பது சொல்லப்பட்டிருக்கும். நயன்தாரா, சரண்யா, ஜேக்குலின், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் சீரியசாக வசனம் பேசி சிரிக்க வைக்க முயன்றாலும், அவர்களோடு யோகிபாபு, அன்பு தாசன் கூட்டணி சேர்ந்தபிறகே நம்மிடம் இருந்து சிரிப்பு பீறிட்டது. ‘டாக்டர்’ படத்திலும் பிரியங்கா, தீபா மட்டுமல்லாமல் சுனில் ரெட்டி, சிவா அரவிந்த் காம்போவின் அட்ராசிட்டியில் தான் தியேட்டரே அல்லோகலப்பட்டது.
ஆனால், ’சொப்பன சுந்தரி’யில் வெறுமனே தீபா மட்டுமே தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார். காமெடிக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் சரிப்பட்டு வரமாட்டார் என்று இயக்குனர் எண்ணியது ஏனோ? ஷரா உடன் வரும் காட்சியைத் தவிர்த்து மற்ற இடங்களில் காமெடி செய்யும் வாய்ப்பு லட்சுமிபிரியாவுக்குக் கிடைக்கவில்லை.
மைம் கோபி உடன் வரும் இரண்டு இளைஞர்களோடு, சுனில் ரெட்டி உடன் திரியும் கான்ஸ்டபிள் ஆக வருபவரும் கூட திரைக்கதையில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். அவர்களுக்கென்று ஒன்லைனர்களோ, தனியாக இரண்டொரு காட்சிகளோ தரப்பட்டிருந்தால் கொஞ்சம் ஆசுவாசமாக இருந்திருக்கும். அதனை விட்டுவிட்டு ‘டாக்டர்’, ‘கோலமாவு கோகிலா’ போன்று ஒரு ‘பிளாக் ஹ்யூமர்’ காட்சியமைப்பைத் திரையில் தந்தால் போதுமென்று நினைத்திருக்கிறார் இயக்குனர் சார்லஸ்.
கூடை மட்டும் இருந்தால் போதுமா? உள்ளே பழங்களையும் வைத்தால் தானே அது பழக்கூடை ஆகும். அப்படித்தான் காமெடி திரைப்படம் என்ற முத்திரையுடன் ‘சொப்பன சுந்தரி’யும் இருக்கிறது.
உதய் பாடகலிங்கம்
போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள்: ராமதாஸ் வலியுறுத்தல்!
நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட பார்வதி யானை!