நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி கதைநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் விடுதலை. கெளரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி என அடுத்தடுத்து பிரபலமான நடிகர்கள் இணைக்கப்பட்டு திட்டமிட்ட நாட்களையும், பட்ஜெட்டையும் கடந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையான 50 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ளது விடுதலை படம்.
ஒரு வழியாக வெற்றிமாறனிடம் இருந்து விடுதலை பெற்று திரையரங்கில் வெளியிடப்படுவதற்கான நாள் குறிக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மார்ச் 31 அன்று வெளியாகும் விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் விடுதலை படத்தில் விஜய்சேதுபதி, சூரி, பிரகாஷ் ராஜ், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், சேத்தன், பவானி ஶ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.
இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை வடிவமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் படத்தின் புரமோஷன் வேலைகளில் முதல் கட்டமாக ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நேற்று (மார்ச் 8) மாலை சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா, மற்றும் படத்தில் நடித்துள்ள திரைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
ட்ரெய்லர் எப்படி?
சுமார் ஐம்பதுகோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள விடுதலை படத்திற்கான எதிர்பார்ப்பை சினிமா பார்வையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டிய ட்ரெய்லர் எப்படி இருக்கிறது?
இயக்குநர் வெற்றிமாறன் இதுவரை அவர் இயக்கிய படங்களின் திரைக்கதையில் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை, ஆதிக்கசக்திகளால் பாதிக்கப்படும் மக்கள், அதற்கு எதிரான போராட்டம், சமூக விரோதிகளின் வாழ்க்கை, வேலையில்லா இளைஞனின் வாழ்க்கை, காதல் , அரசு நிர்வாகங்களில் காவல்துறையில் நிலவும் அடக்குமுறை, அவர்களிடம் இருக்கும் மனிதாபிமானம், சமூக நியாயத்துக்கு போராடுபவர்களை பிரதிபலிப்பதாகவே இருக்கும்.
விடுதலை படத்தின் திரைக்கதையும் அதனை போன்றே இருப்பதை டிரைலர் உறுதிசெய்கிறது. வட இந்திய மாநிலங்களில் இப்போதும் நக்சல்பாரிகளுக்கும், இயற்கை வளங்களை தங்கள் வணிகத்திற்கு பயன்படுத்தும் பெருமுதலாளிகளுக்கு சேவை செய்துவரும் அதிகார வர்க்கத்தினருக்குமான போராட்டம் தினசரி நடந்து வருகிறது
அதனை தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில் இயற்கை கொஞ்சி விளையாடும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறுமலையுடன் இணைத்திருக்கிறார் வெற்றிமாறன்
“மக்கள் படை தலைவன் பெருமாள்” என விஜய்சேதுபதி அறிமுகப்படுத்தப்படுகிறார்
கடைநிலை காவலராக நடித்திருக்கும் சூரி நான் நல்லா பயரிங்(சுடுவேன்) செய்வேன் என கூறி நக்சல்பாரிகள் வேட்டையில் தன்னையும் சேர்த்துக்கொள்ள கேட்கிறார். அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்படுகிறது.
“காக்கிச் சட்ட போட்ற ஒவ்வொருத்தனுக்கும் ஒரு நேரம் வரும். அதுக்காக நம்ம காத்திருக்கணும்”
“மனுஷன் பொறக்குறப்போ ஒருத்தன்மேல, ஒருத்தன்கீழ, ஒருத்தன் சைட்லனு பிரிக்கிற நீங்க பிரிவினைவாதிகளா? இல்ல சமுதாயத்துல எல்லோரும் ஒன்னுன்னு போராட்ற நாங்க பிரிவினைவாதிகளா” என தெறிக்கும் வசனங்கள் அதிகார வர்க்கத்தின் கோர முகத்தை உணர்த்துகிறது
தமிழகத்தை அதிர வைத்த காவல்துறையின் உச்ச கட்ட அத்துமீறலுக்கு அடையாளமாக இன்றுவரை இருக்கும் ‘வாச்சாத்தி’ சம்பவத்தை நினைவுப்படுத்தும் காட்சிகள் ட்ரைலரில் வந்து போவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறசெய்கிறது.
சாதாரண கடைநிலை காவலர் பெருமாள் வாத்தியார் எனும் நக்சல்பாரி தலைவரை பிடிக்க உதவுகிறார். அதே கடைநிலை காவலர் பெருமாள் வாத்தியாரின் நோக்கத்தை புரிந்துகொண்டு அவரை தப்பிக்க வைப்பதில் வெற்றிபெற்றாரா? என்பதை விடுதலை இரண்டு பாகங்களும் பேசப் போகிறதா என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது படத்தின் ட்ரெய்லர் .
இராமானுஜம்
முடங்கிய இன்ஸ்டாகிராம்: பதிலளிக்காத மெட்டா!
ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான்: முதல்வர் ஸ்டாலின்