உதயசங்கரன் பாடகலிங்கம்
மீண்டும் ‘ராஜாராணி’ நஸ்ரியா..!
நேரம், ராஜாராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்காஹ், வாயை மூடிப் பேசவும் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நஸ்ரியா. அழகான, குறும்பான, இளமை கொப்பளிக்கிற பெண்ணாக அவர் நடித்த மலையாளப் படங்களான ஓம் சாந்தி ஓசன்னா, பெங்களூர் டேஸ், கூடே, ட்ரான்ஸ் போன்றவை தமிழ், தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கின்றன.
பகத் பாசிலைக் கல்யாணம் செய்த கையோடு சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த நஸ்ரியா, ‘அண்டே சுந்தரானிகி’ மூலம் தெலுங்கில் கால் பதித்தார். இப்போது, எம்.சி.ஜிதின் இயக்கிய ‘சூக்ஷ்ம தர்ஷினி’ மூலமாக மீண்டும் மலையாளத் திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார்.
இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு, சமீபகாலமாக காமெடி, ரொமான்ஸ், ட்ராமா வகைமையில் அமைந்த படங்களின் வழியே ஒரு நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் பசில் ஜோசப்பும் இதில் இருக்கிறார் என்பதே.
சரி, இந்தப்படம் எப்படியிருக்கிறது? மீண்டும் ‘ராஜாராணி’ காலத்து நஸ்ரியாவை நினைவூட்டுகிறதா இப்படத்தில் அவரது இருப்பு..?
காணாமல் போகும் பெண்மணி!
நகரத்தின் பரபரப்பில் இருந்து விலகிய ஒரு பகுதி. ஒருகாலத்தில் கிராமமாக இருந்தது என்று சொல்லத்தக்க ஒரு இடம். அங்குள்ள தெருவொன்றில் வசிக்கின்றனர் ஆண்டனி – பிரியதர்ஷினி (தீபக் பரம்போல், நஸ்ரியா) தம்பதியினர். அவர்களது ஒரே மகள் கனி (ஹெஸ்ஸா மேகக்).
அக்கம்பக்கத்தில் வசிக்கும் ஸ்டெபி (மெரின் பிலிப்), சுலு (அகிலா பார்கவன்), அஸ்மா என்று பல பெண்கள் பிரியாவோடு நல்ல நட்பில் இருக்கின்றனர். அங்குள்ள பெண்களின் வாட்ஸ்அப் குழுவில் உடனுக்குடன் அக்கப்பக்கத்து தகவல்களைப் பரிமாறிக்கொள்கிற வழக்கம் இருக்கிறது.
அப்படித்தான், பிரியாவின் வீட்டுக்குப் பக்கத்தில் குடிவரும் மேனுவல் (பசில் ஜோசப்) குறித்தும் தகவல்களைப் பகிர்கிறார் அங்கு நீண்டகாலமாகக் குடியிருந்து வரும் சரோஜினி டீச்சர். மேனுவல் குடும்பம் ஏற்கனவே அந்த வீட்டில் வசித்ததாகவும், நகரத்தில் உள்ள பேக்கரியைக் கவனிக்கும் பொருட்டு அவர்கள் வீடு மாறியதாகவும் சொல்கிறார்.
மேனுவலை முதன்முறையாகப் பார்க்கிறபோது, ஒரு பூனையை அவர் கல்லால் அடிப்பதைக் காண்கிறார் பிரியா. யாரிடமும் பேச்சு கொடுக்காமல் இருக்கும் அவரது தாய் கிரேஸி, வீட்டுக்குள் நுழையும்போது தனியாக இன்னொரு செருப்பை அணிவதைப் பார்க்கிறார்.
அதற்கடுத்த வாரத்தில், தங்களது திருமண நாளையொட்டி தெருவில் இருப்பவர்களுக்கு ஆண்டனியும் பிரியாவும் விருந்து கொடுக்கின்றனர். அதில் மேனுவல் கலந்துகொள்கிறார். அப்போது, அவரது வீட்டில் ஒரு அறையில் தீப்பற்றி எரிகிறது.
அந்த அறையில் இஸ்திரி பெட்டி மின் இணைப்போடு இணைக்கப்பட்டிருக்கிறது. உள்ளிருக்கும் அறையில் கிரேஸியைக் காணவில்லை. அடுத்த சில மணி நேரங்களில் ஒரு ரயில்நிலையத்தில் அவர் இருப்பது கண்டறியப்படுகிறது.
அதற்கடுத்த நாள், தாய் கிரேஸிக்கு அல்சைமர்ஸ் எனும் மறதி நோய் இருப்பதாகக் கூறுகிறார் மேனுவல். தெருவில் உள்ள அனைவரும் அதனை நம்பினாலும், பிரியா மட்டும் அதனை ஏற்பதாக இல்லை. ஏதோ ஒரு உண்மையை மேனுவல் மூடி மறைப்பதாகக் கருதுகிறார். அதற்கடுத்த சில நாட்களில் கிரேஸி காணாமல் போகிறார். எங்கு தேடியும் அவர் கிடைப்பதாக இல்லை.
அவர் காணாமல் போன நாளன்று, சில நிமிடங்களுக்கு முன்னர் கிரேஸியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் பிரியா. அந்த நேரத்தில், மேனுவல் வீட்டில் தாய்க்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லி ஸ்டெபியை விட்டுச் சென்றிருக்கிறார் மேனுவல். ஆனாலும், ஸ்டெபி கண்ணசந்த நேரத்தில் கிரேஸியைக் காணவில்லை.
உறவினர் டாக்டர் ஜான் (சித்தார்த் பரதன்) தந்த மாத்திரைகளை அந்த பழச்சாறில் கலந்து மயக்கமுறச் செய்வதே மேனுவலின் திட்டம். அதன்படி அந்த பழச்சாறை ஸ்டெபியே முதலில் அருந்துகிறார். ஸ்டெபி மயங்கி விழுந்த சில நிமிடத்தில், வீட்டுக்கு வெளியே காரில் காத்திருக்கிறார் ஜானின் தந்தை.
ஆக, கிரேஸி காணாமல் போனதில் மேனுவல் உட்பட மூவருக்கும் தொடர்பிருப்பது பார்வையாளர்களுக்கு நமக்குத் தெரிய வருகிறது. ஆனால், அந்த உண்மையைப் பிரியா கண்டறிந்தாரா? மேனுவல் வீட்டில் நடக்கும் குற்றம் என்னவென்பதை வெளியுலகுக்கு தெரியப்படுத்தினாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
சூக்ஷ்ம தர்ஷினி எனும் வார்த்தைக்கு மைக்ரோஸ்கோப் என்று அர்த்தம். கதைப்படி ஒரு மைக்ரோபயாலஜிஸ்ட் ஆக வருகிறது நாயகி பாத்திரமான பிரியா. அது மட்டுமல்லாமல், சாதாரணமாகக் கண்களுக்குத் தட்டுப்படாத உண்மையொன்றை தனது இயல்பான உணர்திறன் கொண்டு அதனை அவர் அறிவதாகக் காட்டியிருப்பதால் கதையோடு டைட்டில் பொருந்தி நிற்கிறது.
சிறப்பான ‘த்ரில்லர்’!
நஸ்ரியா படம் முழுக்க வருகிறார். அவரது இருப்பு அலுப்பைத் தராத வண்ணம், பிரியா பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. குறும்பான இளம்பெண்ணாகத் தெரியாத வகையில், ஒரு குழந்தைக்குத் தாய் எனும் எண்ணத்தை வரவழைக்கும்விதமாக அமைந்திருக்கிறது அவரது நடிப்பு.
மீண்டும் ராஜாராணி போன்ற கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர்களில் இடம்பெறும் அளவுக்கு அவரது நடிப்பும் தோற்றமும் அமைந்துள்ளது என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
நஸ்ரியாவின் கணவராக வரும் தீபக் பரம்போலுக்கு அதிகபட்சம் ஐந்தாறு காட்சிகள் தான். ஆனால், அவற்றில் அவர் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.
பசில் ஜோசப்புக்கு இதில் ‘ஆன்ட்டி ஹீரோ’ பாத்திரம். ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, குருவாயூர் அம்பல நடையில் படங்களில் அப்பாவித்தனம் நிறைந்தவராக வந்தவர், இதிலும் அப்படியொரு உடல்மொழியையே வெளிப்படுத்துகிறார். அதையும் மீறித் தான் ஏற்ற கதாபாத்திரத்தின் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பதே அவரது நடிப்புக்கான சான்று.
சித்தார்த் பரதன், கோட்டயம் ரமேஷ் இருவரும் சில காட்சிகளில் திகிலூட்டுகின்றனர்.
கிரேஸியாக வரும் மனோகரி ஜாய், சுலுவாக வரும் ‘பிரேமலு’ அகிலா பார்கவன், ’ப்ளடி பெக்கர்’ரில் கவின் ஜோடியாக வந்த மெரின் பிலிப், பூஜா மோகன்ராஜ், அபர்ணா ராம், சரஸ்வதி என்று பலர் இப்படத்தில் தலைகாட்டியிருக்கின்றனர்.
நஸ்ரியா, தீபக்கின் மகளாக நடித்துள்ள ஹெஸ்ஸா மேகாக் ‘க்யூட்’டாக சில காட்சிகளில் வசனம் பேசியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சரண் வேலாயுதன், படத்தொகுப்பாளர் சமான் சாக்கோ, கலை இயக்குனர் வினோத் ரவீந்திரன், ஆடை வடிவமைப்பாளர் மஹ்சார் ஹம்சா, ஆடியோகிராஃபர் விஷ்ணு கோவிந்த், சண்டைப்பயிற்சியைக் கவனித்திருக்கும் பிசி ஸ்டண்ட்ஸ் என்று பலரும் இதில் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.
அவர்களைச் சரியாக ஒருங்கிணைத்திருக்கும் இயக்குனர் எம்.சி.ஜிதின், ‘ப்ரெஷ்’ஷான ஒரு திரைக்கதை ட்ரீட்மெண்டை திரையில் கையாண்டிருக்கிறார். அதனால், ‘த்ரில்லர் படமென்றால் இருட்டாக இருக்கும்’ என்ற வரையறைகள் உடைபட்டிருக்கிறது.
இதர படங்கள் போன்றே பளிச்சென்ற காட்சியாக்கத்தோடு தான் சொல்ல வந்ததைக் கடத்தியிருக்கிறார் இயக்குனர்.
எழுத்தாக்கத்தை அதுல் ராமச்சந்திரன், லிபின் இருவரோடு சேர்ந்து எம்.சி.ஜிதின் அமைத்திருக்கிறார்.
முக்கால்வாசி திரைக்கதைக்குப் பிறகு கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று நம்மால் யூகித்துவிட முடியும். ஆனால், அதுவரை அதற்கு கொஞ்சம் கூட இடம் தராமல் காட்சிகளை அமைத்தவகையில் பாராட்டைப் பெறுகிறார் இயக்குனர்.
இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் தனது பின்னணி இசையால் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அதனதன் தன்மையோடு நாம் உள்வாங்குமாறு செய்திருக்கிறார். கடைசி 20 நிமிடங்களில் அவர் இசையால் உருவாக்கியிருக்கும் பரபரப்பு நம்மை இருக்கை நுனியில் அமர வைக்கிறது.
திரைக்கதையில் லாஜிக் மீறல்கள் சார்ந்து நிறைய கேள்விகளை எழுப்ப முடியும். ஆனால், தியேட்டருக்குள் அமர்ந்திருக்கையில் அதற்கான வாய்ப்புகளைக் கொஞ்சம் கூட தருவதில்லை ‘சூக்ஷ்ம தர்ஷினி’. அதுவே இப்படத்தின் யுஎஸ்பி. ’அது இருந்தா போதுமே’ என்பவர்களுக்கு இப்படம் நிறையவே பிடிக்கும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: ஃபேஸ் வாஷ், க்ளென்ஸர் – எப்போது, எதைப் பயன்படுத்துவது?
ஹெல்த் டிப்ஸ்: குளிர்காலக் குளியலுக்கு ஏற்றது… குளிர்ந்த நீரா, வெந்நீரா?
டாப் 10 நியூஸ்: உச்சநீதிமன்றத்தில் மோடி உரை முதல் டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட் வரை!
கிச்சன் கீர்த்தனா: ஸ்பைஸி இறால் புரொக்கோலி இட்லி உப்புமா