ரயில் படியில் அமர்ந்து பயணம் செய்த பாலிவுட் நடிகர் சோனுசூட்டை வடக்கு ரயில்வே கண்டித்துள்ளது. இதற்கு சோனுசூட் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பேருந்து மற்றும் ரயில் படியில் தொங்கிய படி பயணம் செய்வதால் ஆண்டுதோறும் ஏராளமான மரணங்கள் நிகழ்கிறது. இதனைத் தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
படியில் பயணம் நொடியில் மரணம் போன்ற வாசகங்கள் மூலமாகவும் மக்கள் மத்தியில் அரசாங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனுசூட் ரயில் படியில் அமர்ந்த படி ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி பதிவிட்டார்.
பாலிவுட் நட்சத்திரமாகப் பலரால் அறியப்படும் சோனுசூட்டின் வீடியோ பதிவு சர்ச்சையான நிலையில், இந்த வீடியோவை பார்த்த வடக்கு ரயில்வே பதிவு ஒன்றை இன்று (ஜனவரி 5) வெளியிட்டது.
அதில், “உலகத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக இருக்கிறீர்கள். ரயில்பெட்டி படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது ஆபத்தானது.
இது போன்ற வீடியோ உங்களது ரசிகர்களுக்குத் தவறான செய்தியைக் கொடுக்கும். தயவுசெய்து இது போன்று செய்யாதீர்கள். சுமுகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை அனுபவிக்கவும்” என்று குறிப்பிட்டிருந்தது.
வடக்கு ரயில்வேயின் இந்த பதிவிற்கு நடிகர் சோனுசூட், “மன்னிக்கவும், ஆனால் லட்சக்கணக்கான ஏழைகள் இன்னும் ரயில் கதவுகளுக்கு அருகில் அமர்ந்து பயணிப்பதை அனுபவிக்க விரும்புகின்றனர். நாட்டின் ரயில்வே அமைப்பை மேம்படுத்தியதற்கு நன்றி” என்று பதில் அளித்துள்ளார்.
வடக்கு ரயில்வே மட்டுமின்றி மும்பை போலீஸ் கமிஷனரும் இந்த வீடியோ தொடர்பாக சோனுசூட்டை எச்சரித்துள்ளார். அவர், “இது மிகவும் ஆபத்தான பயணம். இது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம்.
படங்களில் ரயில் படிகெட்டில் அமர்ந்து பயணம் செய்யலாம். நிஜ வாழ்க்கையில் அவ்வாறு பயணம் செய்யக்கூடாது. அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுங்கள்” என்று கூறியுள்ளார்.
மோனிஷா