நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “அயலான்“. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பானுபிரியா உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியோடு உருவாக்கப்பட்ட ஒரு ஏலியனும் படம் முழுக்க நடித்து இருக்கிறது.
அயலான் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
அயலான் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பலரும் படம் குறித்து தங்கள் கருத்துக்களை மேடையில் பகிர்ந்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனும் இயக்குநர் ரவிக்குமாரை பற்றி உணர்ச்சிப் பொங்க பேசியிருந்தார்.
சிவகார்த்திகேயன் பேசுகையில், “அயலான் படத்திற்காக இத்தனை ஆண்டுகள் ரவிக்குமார் நேர்மையாக உழைத்திருக்கிறார். இது ஒரு நல்ல படமாக வரவேண்டும் என்பதற்காக எனக்கு சம்பளம் கூட வேண்டாம் என்று நான் சொன்னேன். பணம் போவதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் நான் ரவிக்குமாரை சம்பாதித்து இருக்கிறேன். இந்த படம் மூலமாக கிடைத்த சொத்து, பொக்கிஷம் எல்லாமே ரவிக்குமார் தான். அவரின் நேர்மைக்காகவே இந்த படம் ஜெயிக்கும். அயலான் படத்தின் ரிலீசுக்கு பிறகு மீண்டும் நானும் ரவிக்குமாரும் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்ற உள்ளோம்” என்று விழா மேடையில் சிவகார்த்திகேயன் கூறினார்.
மேலும் “அயலான் படம் குழந்தைகளுக்கான படம் நிச்சயம் தவறான கருத்துக்களை இந்த படம் புகுத்தாது” என்றும் உறுதியளித்துள்ளார்.
அயலான் படம் வெளியாவதற்கு முன்பே அந்த ஏலியன் கதாபாத்திரம் குழந்தைகளை கவர தொடங்கிவிட்டது. அதேபோல் படத்தின் திரைக்கதையும் சிறப்பாக இருந்தால், நிச்சயம் இந்த பொங்கல் “ஏலியன் பொங்கல்” தான்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கோதுமை தோசை
Asian Games 2023: இந்தியாவுக்கு 100 பதக்கங்கள் சாத்தியமா?