ஏ.ஆர்.முருகதாஸினை தொடர்ந்து மீண்டும் விஜய் படத்தின் இயக்குநர் ஒருவரை, சிவகார்த்திகேயன் லாக் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தற்போது ‘அமரன்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 23-வது படத்தில் நடித்து வருகிறார்.
24-வது படத்திற்காக ‘டான்’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணையவிருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய 25-வது படத்திற்காக வெங்கட் பிரபுவுடன், சிவகார்த்திகேயன் கைகோர்க்க இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயின் ‘GOAT’ படத்தினை இயக்கி வருகிறார். இரட்டை வேடங்களில் விஜய் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இதற்கு அடுத்து சிவகார்த்திகேயன் படத்தினை வெங்கட் பிரபு இயக்கவுள்ளாராம். பான் இந்தியா படமாக இது உருவாக இருப்பதாகவும், படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் படத்திற்கு பிறகு இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்கவிருப்பதால் படத்திற்கான மார்க்கெட்டும் நன்றாக இருக்கும் என, கணக்குப்போடும் சத்யஜோதி நிறுவனம் இப்படத்திற்கு சிவகார்த்திகேயன் இதுவரை வாங்காத சம்பளத்தினை தர இருப்பதாகவும் தெரிகிறது.
தற்போது இருவருமே அவரவர் படங்களில் பிஸியாக இருப்பதால் படத்தில் நடிக்கும் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் குறித்த விவரங்கள் இன்னும் முடிவாகவில்லையாம். அநேகமாக மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதலில் வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…