மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார். 2023 புத்தாண்டு தொடக்கநாள் அன்று இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.
அதில், வீரமே ஜெயம் என்கிற வாசகத்துடன் சிவகார்த்திகேயன் இடம்பெற்றிருக்கிறார்.
இப்படம் குறித்த முதல் அறிவிப்பு 2022 ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.
மூன்று மாதங்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என அப்போது கூறப்பட்டது. அதனால், இப்படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பை 2022 நவம்பர் மாதத்திலேயே தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், நினைத்தபடி மாவீரன் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. கதை மற்றும் காட்சியமைப்புகளில் மாற்றம் செய்யவேண்டும் என்கிற கருத்துவேறுபாடுகள் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.
மொத்தம் 85 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவு செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் கூறி படப்பிடிப்பை தொடங்கி இருக்கிறார்கள்.
இதுவரை சுமார் அறுபதுநாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்துள்ளதாம். ஆனால் பாதி படம் கூட உருவாகவில்லை என்கிறார்கள்.
இதனால் இன்னும் அறுபது நாட்களுக்கு மேல் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும் என்கிற நிலை தற்போது இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனால் 2022 நவம்பரில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்ட அடுத்த படம் இன்னும் தள்ளிப்போகிறது.
மாவீரன் படத்தின் எதிர்பாராத தாமதத்தால் திட்டமிட்ட எல்லா விசயங்களும் மாறிப்போனதில் தடுமாறிப்போயிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இராமானுஜம்
காவலருக்கு பாலியல் தொல்லை: நள்ளிரவில் கைது! கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!
அமைச்சரவை கூட்டம்: முதன் முறையாக பங்கேற்கும் உதயநிதி