மேஜர் முகுந்த் ஆக மிளிர்கிறாரா எஸ்கே?!
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ரசிகர்களால் முதன்மையாக நோக்கப்படும் படம் ‘அமரன்’.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஜோடி மட்டுமல்லாமல், ‘ரங்கூன்’ தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் இரண்டாவது படம் இது என்பது அதற்கான காரணங்களில் ஒன்று. அதனைக் காட்டிலும் பெரியது, காஷ்மீரில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய பொதுமக்களைக் காக்கும் முயற்சியின்போது வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதை என்பது.
தமிழில் ராணுவப் பின்னணியில் அமைந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘ரத்த திலகம்’ காலம் முதல் அதற்குச் சில உதாரணங்களும் இருக்கின்றன. ஆனால், அப்படங்களில் ராணுவத்தில் இருப்பவர்களின் அன்றாட வாழ்க்கையோ, முக்கிய நிகழ்வுகளோ பதிவு செய்யப்பட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை.
அந்த வகையில், எந்தச் சமரசமும் இல்லாமல் ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கையைக் காட்டுவது போன்று தோற்றம் தந்தது ‘அமரன்’ டீசர், டிரெய்லர் போன்றவை. அவை அதன் மீதான எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தின.
படம் பார்த்து முடிந்த பின்னர் அந்த எதிர்பார்ப்பு என்னவானது?
அமரத்துவமான ஒருவன்!
’அமரன்’ படத்தின் கதை மிக எளிமையானது. சிறு வயது முதலே ராணுவ வீரனாக, உயரதிகாரியாக உயர வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒரு மனிதர், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனேயே அதனை எட்டுகிறார். ராணுவத்தில் சேவையாற்றுவதில் இருக்கும் அபாயங்களை ரசித்துச் செயல்படுகிறார். பணியில் அவர் அடுத்தடுத்து பதவி உயர்வுகளைக் காண்கிறார். சக வீரர்களிடத்தில் மாபெரும் அன்பையும் நட்பையும் சம்பாதிக்கிறார்.
அதேநேரத்தில் தனது பெற்றோர், மனைவி, மகளுடன் நேரம் செலவிட முடியாத ஒரு வாழ்வைக் கொண்டிருக்கிறார். முடிந்தபோதெல்லாம், அந்த இடைவெளியைச் சரிசெய்ய முயற்சிக்கிறார்.
ஒருநாள், தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய பொதுமக்களைக் காக்கும் நடவடிக்கையின்போது, அவர் வீர மரணம் அடைகிறார்.
மரணத்திற்குப் பின் அவருக்கு ’அசோக சக்ரா’ பதக்கம் வழங்கப்படுகிறது. அதனை அவரது மனைவி பெற்றுக்கொள்வதோடு இப்படமும் முடிவடைகிறது.
அந்த மனிதர் தனது பெற்றோர், மனைவி, மகள், உடன் பணியாற்றியவர்கள் என்று பலரது நினைவில் ‘அமரத்துவத்துடன்’ வாழ்ந்து வருகிறார் எனச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது இப்படம். அதனை என்றென்றைக்கும் சினிமா ரசிகர்கள் நினைவில் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கதையில் நாயகன் பெயர் முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்), நாயகி பெயர் இந்து ரெபேக்கா வர்கீஸ் (சாய் பல்லவி) என்பது நாம் அறிந்தது தான். போலவே, இதில் வரும் பெரும்பாலான காட்சிகள் முகுந்த் – இந்து வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் தான்.
ஆனால், அதனைத் திரைக்கு ஏற்றவாறு எழுத்தாக்கம் செய்த விதமும், காட்சியாக்கம் செய்த விதமும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை வியந்து பார்க்கச் செய்கின்றன.
வழக்கமான படமல்ல இது..!
முதல் பார்வையிலேயே தனது இணையைக் கவரும் வகையில் நடந்து கொள்வது, கேர்ள்ப்ரெண்டை பெற்றோரிடம் தைரியமாக அறிமுகப்படுத்துவது, காதலியின் பெற்றோர் கல்யாணத்திற்குத் தடை சொல்கையில் அவர்களை நேரில் சந்தித்துப் பேசுவது, ராணுவத்தில் வேலை என்பதனைக் குடும்பத்தினர் அனைவரும் ஏற்கும்படியாகச் செய்வது, மனைவி மற்றும் மகளை ஆச்சர்யப்படுத்தும் விதமாகத் திடீரென்று வீடு திரும்புவது என்று முகுந்த் வரதராஜனின் இயல்பான வாழ்வே ‘நாயகத்தனமாக’த்தான் இருந்திருக்கிறது. அந்நிகழ்வுகளுக்குத் திரைவடிவம் கொடுக்க சில ‘பாலீஷ்’ முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது படக்குழு.
முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸின் பார்வையிலேயே ‘அமரன்’ படம் அமைந்திருக்கிறது. ஒரு ராணுவ வீரரின் மரணம் என்பது அவர் சார்ந்த குடும்பத்திற்கு எத்தகைய வலியைத் தரும் என்றுணர்த்தும் விதமாகப் பல பாத்திரங்கள் அமைந்துள்ளன.
ராணுவ வீரர்கள் முகாம் எப்படியிருக்கும் என்பதில் தொடங்கி, ஒரு தேடுதல் நடவடிக்கைக்குத் தயாராவது வரை பல விஷயங்களைப் போகிற போக்கில் சொல்கின்றன இதன் காட்சிகள். பல காட்சிகள், உண்மையிலேயே இக்கதை நிகழ்ந்த இடங்களுக்குச் சென்று படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன.
எதிர்தரப்பினரின் குடும்பம், உறவுகள், அவர்களது பார்வையும் இதில் குறிப்பிடத்தக்க அளவில் காட்டப்பட்டுள்ளது. இது ஆச்சர்யம் தரத்தக்க விஷயம். அதுவே, இப்படத்தின் திரைக்கதை 360 டிகிரியில் அணுகப்பட்டது போன்ற தோற்றத்தைத் தருகிறது.
இப்படிப் பல அம்சங்கள் இதில் பாராட்டும்படியாக உள்ளன.
ஒரு உண்மைக்கதையைத் திரைப்படம் ஆக்குகையில், அது திரையில் இப்படித்தான் நகரும் என்று நம் மனதுக்குள் ஒரு படம் ஓடும். கிட்டத்தட்ட அதே தொனியில் இப்படம் அமைந்திருப்பது நிச்சயம் மைனஸ் தான். ஆனால், அதனைத் தனது காட்சியாக்கத்திறன் மூலமாகச் சரிசெய்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார்.
இப்படத்தில் இயக்குனரும் அவரைச் சார்ந்தவர்களும் கொட்டியிருக்கும் உழைப்பு அபரிமிதமானது. ஒரு காட்சியில் பல ஷாட்களை நிறைத்து, ‘இது செறிவான உள்ளடக்கத்தைக் கொண்டது’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது ‘அமரன்’. அந்த பிரமிப்பு படத்தின் இறுதி வரை தொடர்வது படத்தின் ப்ளஸ்.
போலவே, ’சிவகார்த்திகேயன் படம் என்றால் இப்படித்தான் இருக்கும்’ என்ற எண்ணத்தைச் சுக்குநூறாக்குகிறது இப்படத்தில் அவரது இருப்பு. அதோடு பொருந்திப் போகும் வகையில் இருக்கிறது சாய் பல்லவியின் நடிப்பு.
பல விருது விழாக்களில் இருவரது பெயர்களைப் பரிந்துரைக்கும் வகையில் ‘அமரன்’ படத்தில் அவர்களது பங்களிப்பு அமைந்திருக்கிறது. முக்கியமாக, சாய் பல்லவியை நாயகி ஆக்கியிருப்பதன் காரணமாக இப்படத்தைப் பெண்கள் பலர் ரசித்து நோக்குவார்கள்.
சிவகார்த்திகேயன் படங்கள் என்றால் குழந்தைகளும் பெரியவர்களும் பார்ப்பார்கள் என்ற உத்தரவாதம் இருக்கிறது. அதனைத் தக்க வைக்கும் வகையில், இதில் சண்டைக்காட்சிகளில் அதீத வன்முறை தவிர்க்கப்பட்டிருக்கிறது. மேஜர் முகுந்த் போன்று தோற்றம் தராதபோதும், ‘இப்படித்தான் அவரும் இருந்திருப்பார்’ என்று நம்ப வைப்பது போன்று அப்பாத்திரமாக மிளிர்கிறார் எஸ்.கே.
வழக்கமான ‘மசாலா’ படங்களிலேயே, ‘ஆக்ஷன் காட்சிகளுக்காகவே ஒரு லாரி முழுக்க ‘போலி ரத்தம்’ தயாரா இருக்கு’ என்று படக்குழுவினர் சொல்கிற காலகட்டத்தில், ராணுவப் பின்னணியில் அமைந்த ‘அமரன்’னில் கோரமான காட்சிகளோ, மோதல் ஷாட்களோ இல்லை. மிகச்சில இடங்களில் சில ஷாட்கள் வந்து போகின்றன கதைக்குத் தேவைப்படுகிற அளவுக்கு.. அதற்காகவே சண்டைப்பயிற்சியாளர்கள் அன்பறிவ், ஸ்டீபன் ரிச்டருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.
ராணுவ வாகனத்துக்குள் நிகழும் வீரர்களின் உரையாடல்களைக் காட்டுவது முதல் தொடக்க காட்சியில் ஒரு ராணுவ முகாமை ‘ஸ்டெடிகேம்’ பார்வையில் ஒரே ஷாட்டாக உணரும் வகையில் காட்சிப்படுத்தியது வரை, சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அவருக்கு இது அறிமுகப்படம். வாழ்த்துகள்!
பிளாஷ்பேக் உத்தியுடன் கூடிய, முன்பின்னாக நகரும் திரைக்கதை. பலருக்கும் தெரிந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக அமைந்த கதை. கால வரிசைக்கு அப்பாற்பட்ட காட்சி வரிசை என்று பலவற்றைத் தாண்டி திரையில் சொல்லப்படும் விஷயங்கள் ரசிகர்களுக்குப் புரியும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கலைவாணன்.
தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், கலை இயக்குனர் சேகர் கூட்டணியின் உழைப்பில், இயக்குனர் திரையில் காட்ட விரும்பிய உலகம் உயிர் பெற்றிருக்கிறது.
காஷ்மீர் மக்களின் வாழ்வைச் சொல்கிற வீடுகள், கடை வீதிகளைக் காட்டும்போதும், சண்டைக்காட்சிகள் நிகழும் களங்களைச் சொல்கிற போதும், அவை ‘உண்மை’ என்றே நம்பத் தோன்றுகின்றன.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கின்றன. இந்த உத்தியுடன் வெளியான சமீபத்திய படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதுவே, இப்படத்தினை ‘வழக்கமான படம்’ என்று சொல்லவிடாமல் தடுக்கிறது.
கூடவே, பின்னணி இசையில் ஜி.வி.பி மிரட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதுவும் இடைவேளைக்கு முன்னதாக வரும் சுமார் 20 நிமிட ஆக்ஷன் காட்சிகளில் பரபரப்பை எகிற வைத்திருக்கிறது அவரது இசை.
இவை தவிர்த்து ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, டிஐ, விஎஃப்எக்ஸ், ஒலி வடிவமைப்பு, டப்பிங் என்று பல நுட்பங்கள் கவனமாகக் கையாளப்பட்டுள்ளன.
புவன் அரோரா, ராகுல் போஸ், கீதா கைலாசம் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். ‘பிரேமலு’ ஷ்யாம் மோகன், சீரியல் நடிகர் ஸ்ரீ, லல்லு போன்றவர்களும் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். இவர்கள் தவிர்த்துப் பல புதுமுகங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களது சீரிய நடிப்பே, இப்படத்தை ‘நிறைவானதாக’ ரசிகர்கள் உணர உதவியிருக்கிறது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ‘அமரன்’ படத்திற்காகப் பல ஆண்டுகள் உழைத்திருக்கிறார். ‘தமிழில் இது போன்று ராணுவத்தை மையப்படுத்தி படங்கள் உருவானதில்ல’ என்று சொல்லும்விதமான காட்சியாக்கத்தை இதில் வெளிப்படுத்தியிருக்கிறார். ‘இந்தியாவிலேயே அது போன்றில்லை’ என்று விவாதம் ஏற்படுத்தும் வகையில் பிற மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற திரைமொழியை இதில் அமைத்திருக்கிறார்.
மிக முக்கியமாக, உண்மையான நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிற இப்படத்தில் மருந்துக்குக் கூட ‘இது ஒரு கற்பனை’ என்று சொல்லும்விதமான அதீதச் சித்தரிப்பு இல்லை. முகுந்த் வரதராஜன் குடும்பத்தினரோ, அவருடன் பணியாற்றியவர்களோ அப்படிச் சொல்ல வாய்ப்புண்டு. ஆனால், படம் பார்க்கிற ரசிகர்கள் அப்படி ஒரு இடத்தைக் கூடச் சுட்டிக்காட்டா வண்ணம் இதனை உருவாக்கியிருப்பது அசாதாரண விஷயம். அதனால், சக இயக்குனர்களால் ராஜ்குமார் கொண்டாடப்படுவார்.
மேஜர் முகுந்த் பற்றியோ, ராணுவ வீரர்களின் வாழ்வு பற்றியோ தெரியாதவர்கள் கூட, இப்படம் பார்த்ததும் தங்களது பார்வைகளை மாற்றிக் கொள்வார்கள். அந்த வகையில், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுக்கான ஒரு விளம்பரப் படமாகவும் இது அமைந்திருக்கிறது.
ஜம்மு காஷ்மீரில் நிகழ்வதாகக் காட்டப்பட்டுள்ள இக்கதையில் அங்குள்ள மக்கள் இழிவாகச் சித்தரிக்கப்படவில்லை. அதுவும் கூட, இதுவரை எல்லைப்பகுதிகளில் நிகழ்வதாகக் காட்டப்பட்ட திரைப்படங்களில் இருந்து ‘அமரன்’னை வேறுபடுத்துகிறது.
’சிவகார்த்திகேயன் சீரியசான கேரக்டர்ல நடிச்சா ஓடுமா’ என்பதே இப்படம் தயாரிப்பின் போது எதிர்மறையாக எழுந்த கேள்விகளில் முதன்மையானதாக இருந்தது. அதற்கு அவர் மட்டுமல்லாமல் மொத்தப் படக்குழுவும் தங்களது ஆக்கம் மூலமாகப் பதிலளித்திருக்கிறது.
அந்தப் பதிலை ஏற்க மறுப்பவர்களும் தீவிரமான மசாலா பட ரசிகர்களும் மட்டுமே இப்படத்தைப் புறந்தள்ளுவார்கள். மற்றபடி, எப்படிப்பட்ட நிலைப்பாடு கொண்டவரையும் ஒருசேர ஓரணியில் திரள வைக்கிற திறன் ‘அமரன்’னுக்கு உண்டு. ராஜ்குமார் குழுவினருக்கு வாழ்த்துகள்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
அமெரிக்க தேர்தல் : கமலா ஹாரிஸுக்கு அவெஞ்சர்ஸ் நடிகர்கள் ஆதரவு!
பச்சை தண்ணீர்தான் சாம்பியனின் சாய்ஸ் … ரொனால்டோவின் ஃபிட்னெஸ் ரகசியம்!