அமரன் படத்தையடுத்து தனது 25வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இந்த நிலையில், கிடைத்த ஓய்வில் தமிழகத்திலுள்ள அறுபடை வீடுகளுக்கு ஆன்மீகப் பயணம் செல்ல தொடங்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.
ஜனவரி 6 ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் முதன் முதலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழனி, சுவாமிமலை, திருத்தணி கோவில்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் செல்லவுள்ளார்.
திருச்செந்தூரில் இன்று சாமி தரிசனம் செய்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், “அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்பது என்னோட ரொம்ப நாள் ஆசை. இப்போது, அதை நிறைவேற்ற தொடங்கியிருக்கிறேன். ‘அமரன்’ வெற்றிக்கான நன்றி உள்ளிட்ட பல வேண்டுதல்களோடு இந்த ஆன்மீக பயணம் நிறைவேறும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கக்கூடாது. நாம் எல்லோரும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்க வேண்டும். அவர்களுக்குத் தைரியம் கொடுக்க வேண்டும். இனி இது மாதிரியான கொடுமைகள் நடக்கக் கூடாது. சாமி கிட்டையும் இதையே வேண்டுதலாக வைத்துள்ளேன்” என்றார் .
தனக்கு படக்காட்சிகள் இல்லாத நேரங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு நடக்கும் இடங்களிலுள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவது வாடிக்கையானது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஆளுங்கட்சி திமுக திடீர் ஆர்ப்பாட்டம்… என்ன காரணம்?
பொங்கல் சிறப்பு பேருந்துகள் : எத்தனை? எங்கெங்கிருந்து இயக்கம்?